எஸ்தர் 8:1-17

8  அன்று அகாஸ்வேரு ராஜா, யூதர்களின் எதிரியான+ ஆமானுடைய வீட்டை+ எஸ்தர் ராணிக்குக் கொடுத்தார். எஸ்தர் ராணி, தனக்கும் மொர்தெகாய்க்கும் இருந்த உறவுமுறையைப்+ பற்றி ராஜாவிடம் சொல்லியிருந்தாள். அதனால், மொர்தெகாய் ராஜாவின் முன்னால் வந்து நின்றார்.  அப்போது ராஜா, ஆமானிடமிருந்து திரும்ப வாங்கிக்கொண்ட முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி மொர்தெகாயிடம் கொடுத்தார். எஸ்தரும், ஆமானின் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மொர்தெகாய்க்குக் கொடுத்தாள்.+  பின்பு, அவள் ராஜாவிடம் மறுபடியும் பேசினாள். அவருடைய பாதத்தில் விழுந்து, கண்ணீர்விட்டு அழுது, ஆகாகியனான ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்த சதியை+ முறியடிக்கச் சொல்லிக் கெஞ்சினாள்.  அப்போது ராஜா, தன்னுடைய பொன் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினார்.+ எஸ்தர் எழுந்து ராஜாவுக்கு முன்னால் நின்று,  “ராஜாவே, உங்களுக்கு நல்லதாகப் பட்டால், உங்களுக்கு என்மேல் கருணை இருந்தால், உங்களுக்குச் சரியென்று தோன்றினால், நான் உங்களுக்குப் பிரியமானவளாக இருந்தால் நான் கேட்டுக்கொள்கிறபடி செய்ய வேண்டும். எல்லா மாகாணங்களிலும் இருக்கிற யூதர்களை ஒழித்துக்கட்டச் சொல்லி அந்த ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமான் எழுதி அனுப்பினானே, அந்தச் சதிகாரனின் கட்டளைகளை+ ரத்து செய்யும்படி நீங்கள் ஆணையிட்டு எழுத வேண்டும்.  என் ஜனங்கள் அழிந்துபோவதை என்னால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? என் சொந்தபந்தங்கள் கொல்லப்படுவதை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?” என்றாள்.  அதனால் அகாஸ்வேரு ராஜா எஸ்தர் ராணியையும் யூதரான மொர்தெகாயையும் பார்த்து, “இதோ! ஆமானின் வீட்டை நான் எஸ்தரிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ அவன் யூதர்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதால் அவனை மரக் கம்பத்தில் தொங்கவிட்டேன்.+  இப்போது நீங்கள் யூதர்களின் சார்பாக எதை எழுத விரும்புகிறீர்களோ அதை ராஜாவின் பெயரில் எழுதி அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடுங்கள். ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்படும் எந்த ஆணையையும் யாராலும் மாற்ற முடியாது”+ என்று சொன்னார்.  அதனால், மூன்றாம் மாதமாகிய சீவான்* மாதத்தின் 23-ஆம் நாளில், ராஜாவின் செயலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மொர்தெகாய் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் யூதர்களுக்கும் அதிபதிகளுக்கும்+ ஆளுநர்களுக்கும் இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள 127 மாகாணங்களின் தலைவர்களுக்கும்+ எழுதி அனுப்பினார்கள். அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் யூதர்களின் எழுத்துக்களிலும் அவர்களுடைய மொழியிலும் எழுதி அனுப்பினார்கள். 10  மொர்தெகாய் அந்தக் கடிதங்களை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதி, அவருடைய முத்திரை மோதிரத்தால்+ முத்திரை போட்டு, தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினார். அரசு அஞ்சல் வேலைக்காகவே வளர்க்கப்பட்ட அதிவேக குதிரைகளில் அந்தத் தூதுவர்கள் போனார்கள். 11  எல்லா நகரங்களிலும் யூதர்கள் தங்கள் உயிருக்காக ஒன்றுதிரண்டு போராடுவதற்கு ராஜா அந்தக் கடிதங்களில் அனுமதி தந்திருந்தார். அவர்களைத் தாக்க வருகிறவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களைக் கொன்று போடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தார். அவர்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும்கூட விட்டுவைக்காமல் எல்லாரையும் அடியோடு ஒழித்துக்கட்டவும் அவர்களுடைய உடைமைகளைக் கைப்பற்றவும் அனுமதி கொடுத்திருந்தார்.+ 12  ஆதார்* என்ற 12-ஆம் மாதத்தின் 13-ஆம் நாளாகிய+ அந்த ஒரே நாளில், அகாஸ்வேரு ராஜாவின் எல்லா மாகாணங்களிலும் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டியிருந்தது. 13  அந்த நாளில் எதிரிகளைப் பழிதீர்க்க+ அவர்கள் தயாராயிருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆணையை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக எல்லாருக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது. 14  ராஜாவின் கட்டளைப்படியே, தூதுவர்கள் அரசு அஞ்சல் வேலைக்காகவே பயன்படுத்தப்பட்ட குதிரைகளில் வேகமாகப் போனார்கள். அந்தச் சட்டம் சூசான்*+ கோட்டையிலும்* அறிவிக்கப்பட்டது. 15  மொர்தெகாய் பெரிய தங்கக் கிரீடம் சூடிக்கொண்டு, நீலமும் வெள்ளையும் கலந்த ராஜ உடையையும் உயர்தரமான ஊதா நிற கம்பளி சால்வையையும் போட்டுக்கொண்டு,+ ராஜாவிடமிருந்து கிளம்பிப் போனார். சூசான் நகரமெங்கும் சந்தோஷ ஆரவாரம் கேட்டது. 16  யூதர்களுக்குக் கிடைத்த நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் அளவே இல்லை. அவர்களுடைய மதிப்பு மரியாதை கூடியது. 17  ராஜாவின் ஆணையும் சட்டமும் போய்ச் சேர்ந்த எல்லா மாகாணங்களிலும் நகரங்களிலும் இருந்த யூதர்கள் சந்தோஷத்தோடும் குதூகலத்தோடும் விருந்துகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தினார்கள். அவர்களை நினைத்து மற்ற ஜனங்கள் மிகவும் பயந்தார்கள். அதனால், அவர்களில் நிறைய பேர் யூத மதத்துக்கு மாறினார்கள்.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையிலும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா