எஸ்தர் 9:1-32

9  ராஜாவின் ஆணையையும் சட்டத்தையும் நிறைவேற்ற+ வேண்டிய நாளில், அதாவது 12-ஆம் மாதமாகிய ஆதார்* மாதத்தின் 13-ஆம் நாளில்,+ தங்களை ஒழித்துக்கட்ட நினைத்த எதிரிகளை யூதர்கள் ஒழித்துக்கட்டினார்கள்.+  அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில்+ வாழ்ந்துவந்த யூதர்கள் தங்களைத் தாக்க வருகிறவர்களை வீழ்த்துவதற்காக அவரவர் ஊர்களில் ஒன்றுதிரண்டார்கள். மற்ற எல்லா ஜனங்களும் அவர்களை நினைத்து மிகவும் பயந்ததால்+ ஒருவரால்கூட அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை.  மாகாணங்களின் தலைவர்கள், அதிபதிகள்,+ ஆளுநர்கள், ராஜாவின் வேலைகளைக் கவனித்துவந்தவர்கள் என எல்லாரும் மொர்தெகாயை நினைத்துப் பயந்ததால் யூதர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.  ராஜாவின் மாளிகையில் மொர்தெகாயின் செல்வாக்கு அதிகமானது.+ அவருடைய அதிகாரம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதால், எல்லா மாகாணங்களிலும் அவருடைய புகழ் பரவியது.  யூதர்கள் தங்களை வெறுத்த ஆட்களை இஷ்டப்படி பழிவாங்கினார்கள். எல்லா எதிரிகளையும் வாளால் வெட்டிக் கொன்றார்கள்.+  சூசான்*+ கோட்டையில்* 500 ஆண்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.  அதோடு பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,  பொராதா, அதலியா, அரிதாத்தா,  பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப் பேரையும் கொன்றார்கள். 10  இவர்கள், யூதர்களின் எதிரியும் அம்மெதாத்தாவின் மகனுமான ஆமானின்+ மகன்கள். யூதர்கள் இவர்களைக் கொன்ற பின்பு இவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை.+ 11  அன்று சூசான் கோட்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. 12  அப்போது ராஜா எஸ்தர் ராணியிடம், “சூசான் கோட்டையில் யூதர்கள் 500 ஆண்களையும் ஆமானின் பத்து மகன்களையும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். அப்படியென்றால், ராஜாவின் மற்ற மாகாணங்களில் எத்தனை பேரைக் கொன்றிருப்பார்கள்?+ இப்போது உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதையும் செய்வேன். வேறென்ன வேண்டுமானாலும் கேள். நீ எதைக் கேட்டாலும் தருவேன்” என்று சொன்னார். 13  அதற்கு எஸ்தர், “ராஜாவுக்குச் சரியென்று பட்டால்,+ சூசானில் இருக்கும் யூதர்கள் இன்று செய்தது போலவே+ நாளையும் செய்ய அனுமதி தர வேண்டும். அதோடு, ஆமானின் பத்து மகன்களையும் மரக் கம்பத்தில் தொங்கவிட வேண்டும்”+ என்றாள். 14  அவள் கேட்டுக்கொண்டபடியே செய்ய ராஜா ஆணையிட்டார். அதற்காக சூசானில் ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆமானின் பத்து மகன்களும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள். 15  சூசானில் இருந்த யூதர்கள் ஆதார் மாதத்தின் 14-ஆம் நாளில்+ மறுபடியும் ஒன்றுதிரண்டு, அங்கிருந்த 300 ஆண்களைக் கொன்றார்கள். ஆனால், அவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை. 16  ராஜாவின் மாகாணங்களில் இருந்த மற்ற யூதர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள+ ஒன்றுதிரண்டு போராடினார்கள். விரோதிகளில் 75,000 பேரை ஒழித்துக்கட்டினார்கள்,+ ஆனால் அவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை. 17  ஆதார் மாதம் 13-ஆம் நாளில் அப்படி நடந்தது. 14-ஆம் நாளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை; அந்த நாளில் விருந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தார்கள். 18  சூசானில் இருந்த யூதர்கள், 13-ஆம் நாளிலும்+ 14-ஆம் நாளிலும்+ ஒன்றுதிரண்டு போராடினார்கள். 15-ஆம் நாளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை; அந்த நாளில் விருந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தார்கள். 19  சூசான் தலைநகரத்தைச் சுற்றியிருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மற்ற யூதர்கள், சந்தோஷமாக விருந்து சாப்பிட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பலகாரங்களைக் கொடுத்துக்கொண்டும்+ ஆதார் 14-ஆம் நாளைக் கொண்டாடினார்கள்.+ 20  இந்த எல்லா சம்பவங்களையும் மொர்தெகாய்+ பதிவு செய்து, அகாஸ்வேரு ராஜாவின் எல்லா மாகாணங்களிலும் குடியிருந்த யூதர்களுக்கு அதிகாரப்பூர்வமான கடிதங்களை அனுப்பினார். 21  ஒவ்வொரு வருஷமும் ஆதார் மாதம் 14-ஆம் நாளை மட்டுமல்லாமல் 15-ஆம் நாளையும் கொண்டாடும்படி அந்தக் கடிதங்களில் கட்டளை கொடுத்திருந்தார். 22  ஏனென்றால், அந்த நாட்களில்தான் யூதர்களுடைய எதிரிகளின் தொல்லை ஒழிந்தது. அந்த நாட்களில்தான் யூதர்களின் அழுகை+ ஆனந்தமாகவும் கவலை கொண்டாட்டமாகவும் மாறியது. அவர்கள் அந்த நாட்களைப் பண்டிகை நாட்களாகக் கொண்டாடி, சந்தோஷமாக விருந்து சாப்பிட்டு, ஒருவருக்கொருவர் பலகாரங்களைக் கொடுத்து, ஏழைகளுக்குத் தானங்கள் செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. 23  யூதர்கள் அந்தப் பண்டிகையை அன்றைக்குக் கொண்டாடியது போலவே என்றைக்கும் கொண்டாடவும், மொர்தெகாய் எழுதியிருந்தபடியே செய்யவும் ஒத்துக்கொண்டார்கள். 24  ஏனென்றால், யூதர்களுடைய எதிரியும் ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகனுமான ஆமான்,+ யூதர்களைத் தீர்த்துக்கட்ட+ சதித்திட்டம் தீட்டியிருந்தான். அவர்களைக் கதிகலங்க வைக்கவும் அவர்களை ஒழித்துக்கட்டவும் ‘பூர்’+ என்ற குலுக்கலைப் போட்டிருந்தான். 25  ஆனால் ராஜாவிடம் போய் எஸ்தர் பேசியதும், “யூதர்களுக்கு எதிராக அந்தச் சதிகாரன் தீட்டிய திட்டம்+ அவனுக்கே பலிக்கட்டும்” என்ற ஆணையை ராஜா எழுதிக் கொடுத்தார்.+ அதன்படியே, ஆமானும் அவனுடைய மகன்களும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள்.+ 26  அதனால், ‘பூர்’*+ என்ற பெயரின் அடிப்படையில் அந்த நாட்களை ‘பூரீம்’ என்று யூதர்கள் அழைத்தார்கள். மொர்தெகாய் அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்ததையும், தாங்கள் பார்த்ததையும், தங்களுக்கு நடந்ததையும் வைத்து இப்படி உறுதிமொழி எடுத்தார்கள்: 27  “யூதர்களும் அவர்களுடைய வம்சத்தாரும் அவர்களோடு சேர்ந்துகொள்பவர்களும்+ அந்த இரண்டு நாட்களைக் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டும்; அது சம்பந்தமாக எழுதப்பட்டதை ஒவ்வொரு வருஷமும் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பின்பற்ற வேண்டும். 28  எல்லா தலைமுறைகளும் அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு மாகாணத்தையும் நகரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள் அதைக் கொண்டாட வேண்டும். யூதர்கள் பூரீம் பண்டிகையைக் கொண்டாடுவதை நிறுத்தவே கூடாது, அவர்களுடைய வம்சத்தாரும் அந்தப் பண்டிகையை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொண்டாட வேண்டும்.” 29  பின்பு, பூரீம் பண்டிகையைக் கொண்டாடுவதன் அவசியத்தை உறுதிப்படுத்துவதற்காக, அபியாயேலின் மகளான எஸ்தர் ராணியும் யூதரான மொர்தெகாயும் முழு அதிகாரத்தோடு இன்னொரு கடிதத்தை எழுதினார்கள். 30  அகாஸ்வேரு ராஜாவின் ஆட்சிக்குட்பட்ட 127 மாகாணங்களில்+ வாழ்ந்த யூதர்களுக்கு அந்த அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டது. சமாதான வார்த்தைகளும் உண்மையான வார்த்தைகளும் அதில் எழுதப்பட்டிருந்தன. 31  யூதரான மொர்தெகாயும் எஸ்தர் ராணியும் கட்டளை கொடுத்தபடியே+ யூதர்கள் பூரீம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதை அந்தக் கடிதம் உறுதிப்படுத்தியது. யூதர்கள் தங்களுக்காகவும் தங்கள் வம்சத்தாருக்காகவும் எடுத்த உறுதிமொழியின்படி+ அந்த நாட்களில் அவர்கள் விரதமிருந்து+ கடவுளிடம் மன்றாட+ வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. 32  பூரீம்+ பற்றிய இந்த விஷயங்களை எஸ்தரின் கட்டளை உறுதிப்படுத்தியது. அது ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

அடிக்குறிப்புகள்

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையில்.”
அர்த்தம், “குலுக்கல்.” பூர் என்பதன் பன்மை “பூரீம்.” இது எபிரெய காலண்டரின்படி 12-ஆம் மாதத்தில் யூதர்கள் கொண்டாடிய பண்டிகையின் பெயராக ஆனது. இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா