ஏசாயா 13:1-22

13  பாபிலோனுக்கு எதிரான தீர்ப்பைப்+ பற்றி ஆமோத்சின் மகனாகிய ஏசாயா+ பார்த்த தரிசனம்:   “மரங்கள் இல்லாத மலைமேல் கொடியை ஏற்றுங்கள்.*+ சத்தமாக அவர்களைக் கூப்பிடுங்கள்.அதிபதிகளுடைய வாசல்கள் வழியாக வரச் சொல்லி சைகை காட்டுங்கள்.   நான் நியமித்த ஆட்களுக்குக்+ கட்டளை கொடுத்திருக்கிறேன். என்னுடைய தண்டனையை நிறைவேற்ற என் வீரர்களை அழைத்திருக்கிறேன்.அவர்கள் பெருமிதத்தோடு வருகிறார்கள்.   மலைகளில் ஏராளமான ஆட்கள் திரண்டிருக்கிறார்கள்.அவர்கள் போடும் சத்தத்தைக் கேளுங்கள்! பல தேசத்தார் கூடியிருக்கிறார்கள்.+அவர்கள் போடும் கூச்சலைக் கேளுங்கள்! பரலோகப் படைகளின் யெகோவா போருக்காகப் படையைத் திரட்டுகிறார்.+   தொலைதூர தேசத்திலிருந்து,+ஆம், தொடுவானத்தின் எல்லையிலிருந்து,உலகம் முழுவதையும் அழிப்பதற்காக+ யெகோவா வருகிறார்,அவருடைய கோபத்தின் ஆயுதங்களும் வருகின்றன.   புலம்பி அழுங்கள்! யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! சர்வவல்லமையுள்ளவர் அழிவைக் கொண்டுவரும் நாள் அது.+   அப்போது, எல்லாருடைய கையும் தளர்ந்துவிடும்.எல்லாருடைய இதயமும் பயத்தில் உறைந்துவிடும்.+   ஜனங்கள் கதிகலங்கிப்போவார்கள்.+ பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போலவேதனையிலும் வலியிலும் துடிப்பார்கள். பயத்தில் அவர்களுடைய முகம் வெளுத்துப்போகும்.மிரண்டுபோய் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள்.   இதோ! யெகோவாவின் நாள் வருகிறது.அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் கொட்டப்போகும் நாள் அது.அப்போது, தேசத்திலுள்ள கெட்டவர்கள் அழிக்கப்படுவார்கள்.தேசத்துக்குக் கோரமான முடிவு வரும்.+ 10  வானத்தில் நட்சத்திரங்கள் மின்னாது.நட்சத்திரக் கூட்டங்கள்*+ ஒளி தராது.சூரியன் பிரகாசிக்காது.நிலவு வெளிச்சம் கொடுக்காது. 11  பூமியில் அக்கிரமம் செய்தவர்களைத் தண்டிப்பேன்.+குற்றம் செய்தவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன். அகங்காரம்* பிடித்தவர்களின் பெருமைக்கு முடிவுகட்டுவேன்.+அடக்கி ஒடுக்குகிறவர்களின் ஆணவத்தை அடக்குவேன். 12  மனுஷனைச் சொக்கத்தங்கத்தைவிட அபூர்வமாக்குவேன்.+மனுஷர்களை ஓப்பீரின் தங்கத்தைவிட+ அபூர்வமாக்குவேன். 13  அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவாவாகிய நான் பயங்கரமான கோபத்தைக் காட்டுவேன்.நான் வானத்தை அதிர வைப்பேன்.பூமியை உலுக்குவேன்.+ 14  அப்போது அவர்கள், துரத்தப்படுகிற கலைமான்கள்* போலவும், மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போலவும் ஆவார்கள்.எல்லாரும்* அவரவர் தேசத்துக்கு ஓடுவார்கள்.அவரவர் ஜனங்களிடம் திரும்புவார்கள்.+ 15  சிக்குகிறவர்களோ குத்திக் கொல்லப்படுவார்கள்.பிடிபடுகிறவர்களோ வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+ 16  அவர்கள்* கண்ணெதிரிலே அவர்களுடைய பிள்ளைகள் கொடூரமாய் அடித்துக் கொல்லப்படுவார்கள்.+அவர்களுடைய வீடுகள் சூறையாடப்படும்.அவர்களுடைய மனைவிகள் பலாத்காரம் செய்யப்படுவார்கள். 17  இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை. 18  அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள். 19  ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+ 20  அங்கு இனி யாருமே குடியிருக்க மாட்டார்கள்.தலைமுறை தலைமுறையாக அது வெறுமையாகக் கிடக்கும்.+ அரேபியர்கள் யாரும் அங்கே கூடாரம் போட மாட்டார்கள்.மேய்ப்பர்கள் யாரும் மந்தைகளோடு அங்கே தங்க மாட்டார்கள். 21  பாலைவன மிருகங்கள் அங்கே படுத்திருக்கும்.ஆட்கள் குடியிருந்த வீடுகளில் ஆந்தைகள்* குடியிருக்கும். நெருப்புக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்.+காட்டு ஆடுகள்* துள்ளித் திரியும். 22  கோபுரங்களில் மிருகங்கள் சத்தமிடும்.பெரிய மாளிகைகளில் நரிகள் ஊளையிடும். பாபிலோனுக்கு நேரம் நெருங்கிவிட்டது; அவளுக்கு இன்னும் அதிக நாள் இல்லை.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொடிக் கம்பத்தை நாட்டுங்கள்.”
நே.மொ., “கீஸில் நட்சத்திரக் கூட்டங்கள்.” ஒருவேளை, ஓரியன் மற்றும் அதைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கூட்டங்களைக் குறிக்கலாம்.
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “நவ்வி மான்கள்.”
அதாவது, “பாபிலோனை ஆதரிப்பவர்கள்.”
அதாவது, “சிக்குகிறவர்கள் அல்லது பிடிபடுகிறவர்கள்.”
வே.வா., “சிங்காரமான.”
வே.வா., “கழுகு ஆந்தைகள்.”
அல்லது, “ஆட்டு உருவப் பேய்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா