ஏசாயா 17:1-14
17 தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பு:+
“தமஸ்கு இனி ஒரு நகரமாக இருக்காது.வெறும் இடிபாடுகளாகக் கிடக்கும்.+
2 ஆரோவேரின் நகரங்கள்+ பாழாய்க் கிடக்கும்.ஆட்டு மந்தைகள்தான் அங்கு படுத்திருக்கும்.அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.
3 எப்பிராயீமின் மதில் சூழ்ந்த நகரங்களும் தமஸ்குவின் ராஜ்யமும்,இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.+சீரியாவில் மீதியாக இருப்பவர்களின் மேன்மை,இஸ்ரவேலர்களின் மேன்மையைப் போல மறைந்துவிடும்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
4 “அந்த நாளில் யாக்கோபின் மகிமை மங்கிவிடும்.அவனுடைய புஷ்டியான உடல் மெலிந்துவிடும்.
5 ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே+ பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பின்பும்,கதிர்கள் சேகரிக்கப்பட்ட பின்பும் கொஞ்சம் கதிர்கள் மட்டுமே விட்டுவைக்கப்படுவது போலயாக்கோபின் ஜனங்களில் கொஞ்சம் பேரே விட்டுவைக்கப்படுவார்கள்.
6 உலுக்கப்பட்ட ஒலிவ மரத்தின் உச்சங்கிளையில்இரண்டு மூன்று பழங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது போலவும்,
கனிதரும் கிளைகளில் நாலைந்து பழங்கள் மட்டுமே எஞ்சியிருப்பது போலவும்,கொஞ்சம் பேர் மட்டும்தான் மீதியாக இருப்பார்கள்”+ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார்.
7 அந்த நாளில், மனிதன் தன்னைப் படைத்தவரை ஏறெடுத்துப் பார்ப்பான், அவனுடைய கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே நோக்கியிருக்கும்.
8 அவன் தன் கைகளால் செய்த பலிபீடங்களையும்,+ தன் விரல்களால் செய்த+ பூஜைக் கம்பங்களையும்* தூபபீடங்களையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.
9 அந்த நாளில், அவனுடைய மதில் சூழ்ந்த நகரங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல்போன காட்டுப் பகுதிபோல் ஆகிவிடும்.+இஸ்ரவேலர்களுக்கு முன்பாக வெட்டிப்போடப்பட்ட கிளைபோல் ஆகிவிடும்.அது பொட்டல் காடாகிவிடும்.
10 உன்னை* மீட்கும் கடவுளை நீ மறந்துவிட்டாய்.+உனக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறவரை+ நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டாய்.
அதனால் நீ அழகான தோட்டங்களை அமைத்தாலும்,வேறு தேசத்து* கன்றுகளை நட்டாலும் அவை வளராது.
11 உன் தோட்டத்துக்கு நீ பார்த்துப் பார்த்து வேலி போட்டாலும்,அதில் விதைத்த விதைகள் காலையிலேயே முளைத்தாலும்,நீ நோயிலும் தீராத வலியிலும் தவிக்கும் நாளில் அறுவடையே கிடைக்காது.+
12 ஏராளமான ஜனங்கள் போடும் கூச்சலைக் கேள்.கடலைப் போல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
தேசத்து ஜனங்களின் இரைச்சலைக் கேள்.பெருங்கடலின் இரைச்சலைப் போல அது இருக்கிறது.
13 பேரலைகளின் இரைச்சலைப் போல ஜனங்கள் சத்தமிடுவார்கள்.
கடவுள் அவர்களை அதட்டுவார்; அவர்கள் தொலைதூரத்துக்கு ஓடுவார்கள்.மலையிலே காற்றில் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல ஆவார்கள்.புயல்காற்றில் சிக்கிக்கொள்ளும் துரும்பைப் போல ஆவார்கள்.
14 சாயங்காலத்தில் பயந்து நடுங்குவார்கள்.
விடிவதற்குள் இல்லாமல் போவார்கள்.
நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் கதி இதுதான்.நம்மைச் சூறையாடுபவர்களுக்கு வரும் நிலைமை இதுதான்.
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ இது எருசலேமைக் குறிக்கிறது.
^ வே.வா., “பொய் தெய்வத்தின்.”