ஏசாயா 19:1-25

19  எகிப்துக்கு எதிரான தீர்ப்பு:+ வேகமாகப் போகும் மேகத்தின் மேல் யெகோவா எகிப்துக்கு வருகிறார். எகிப்திலுள்ள ஒன்றுக்கும் உதவாத தெய்வங்கள் அவர் முன்னால் நடுநடுங்கும்.+எகிப்து தேசமே கதிகலங்கும்.   “எகிப்தியர்களுக்கு விரோதமாக எகிப்தியர்களையே தூண்டிவிடுவேன்.அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவார்கள்.தங்கள் சகோதரர்களோடும் தங்கள் அக்கம்பக்கத்தாரோடும் மோதுவார்கள்.நகரத்துக்கு எதிராக நகரமும், ராஜ்யத்துக்கு எதிராக ராஜ்யமும் போர் செய்யும்.   எகிப்து ஜனங்கள் குழம்பிப்போவார்கள்.நான் அவர்களுடைய திட்டங்களைக் குழப்பிவிடுவேன்.+ ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களிடமும், மாயமந்திரம் செய்கிறவர்களிடமும்,ஆவிகளோடு பேசுகிறவர்களிடமும், குறிசொல்கிறவர்களிடமும்+ அவர்கள் உதவி தேடிப்போவார்கள்.   எகிப்தை ஒரு கொடூரமான அதிகாரியின் கையில் ஒப்படைப்பேன்.ஒரு கொடுங்கோலன் அதை ஆட்சி செய்வான்”+ என்று உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.   கடல்நீர் காய்ந்துபோகும்,ஆறு வற்றி வறண்டுபோகும்.+   ஆறுகளில் நாற்றமடிக்கும்.எகிப்திலுள்ள நைல் நதிக் கால்வாய்களின் தண்ணீர் குறைந்து வறண்டுபோகும். கோரைப்புற்களும் நாணற்புற்களும் அழுகிப்போகும்.+   நைல் நதியின் முகத்துவாரப் பகுதியில், கரையோரமாக உள்ள புற்களும்,நைல் நதியோரமாகப் பயிர் செய்யப்பட்ட எல்லா நிலங்களும்+ காய்ந்துபோகும்.+ எல்லா பயிர்களும் கருகி காற்றில் அடித்துச் செல்லப்படும்.   மீன்பிடிப்பவர்கள் அழுவார்கள்.நைல் நதியில் தூண்டில் போடுபவர்கள் புலம்புவார்கள்.அதில் வலை வீசுபவர்கள் குறைந்துகொண்டே போவார்கள்.   சிக்கெடுக்கப்பட்ட நாரிழையிலிருந்து துணிகளைத் தயாரிப்பவர்களும்,+வெள்ளைத் துணிகளை நெய்பவர்களும் அவமானம் அடைவார்கள். 10  எகிப்தின் நெசவாளிகள் நொந்துபோவார்கள்.கூலியாட்கள் எல்லாரும் துக்கப்படுவார்கள். 11  சோவான் நகரத்தின்+ அதிபதிகள் முட்டாள்களாக இருக்கிறார்கள். பார்வோனின் ஆலோசகர்களில் அதிபுத்திசாலிகள்கூட அர்த்தமில்லாத ஆலோசனைகளையே தருகிறார்கள்.+ நீங்கள் எப்படி பார்வோனிடம், “நான் அறிவாளிகளின் வம்சத்தில் பிறந்தவன்,நான் ராஜாக்களின் பரம்பரையில் வந்தவன்” என்று சொல்லலாம்? 12  பார்வோனின் அறிவாளிகள்+ எங்கே? பரலோகப் படைகளின் யெகோவா எகிப்துக்கு என்ன செய்யப்போகிறார் என்று தெரிந்தால் அவர்கள் சொல்லட்டும். 13  சோவானின் அதிபதிகள் முட்டாள்தனமாக நடந்துவிட்டார்கள்.நோப்* நகரத்தின்+ அதிபதிகள் ஏமாந்துவிட்டார்கள்.எகிப்தின் கோத்திரத் தலைவர்கள் மக்களை மோசம்போக்கினார்கள். 14  யெகோவா எகிப்தைக் குழம்பிப்போகச் செய்தார்.+அந்த அதிகாரிகள் எகிப்தை எல்லா விஷயங்களிலும் மோசம்போக்கினார்கள்.போதையேறக் குடித்துவிட்டு, வாந்தியெடுத்து, அந்த வாந்தியிலேயே தள்ளாடி விழுகிறவனைப் போல் ஆக்கிவிட்டார்கள். 15  எகிப்தினால் ஒன்றுமே செய்ய முடியாது.தலையோ வாலோ, துளிரோ நாணலோ* எதனாலும் எதையும் செய்ய முடியாது. 16  அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவா எகிப்துக்கு எதிராகக் கையை ஓங்குவார்.+ எகிப்தில் உள்ளவர்கள் அதைப் பார்த்து பெண்களைப் போல் பயந்து நடுங்குவார்கள். 17  யூதா தேசத்தை நினைத்து எகிப்தியர்கள் பீதி அடைவார்கள். பரலோகப் படைகளின் யெகோவா யூதாவுக்கு எதிராக எடுத்திருக்கும் தீர்மானத்தைப்+ பற்றிக் கேட்கும்போதே கதிகலங்குவார்கள். 18  அந்த நாளில், எகிப்திலுள்ள ஐந்து நகரங்களில் வாழ்கிறவர்கள், கானானின் பாஷையைப் பேசுவார்கள்.+ அவர்கள் பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு விசுவாசமாய்* இருப்பதாக உறுதிமொழி எடுப்பார்கள். ஒரு நகரம், “தரைமட்டமாக்கப்படுகிற நகரம்” என்று அழைக்கப்படும். 19  அந்த நாளில், எகிப்தின் நடுவே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் இருக்கும். அதன் எல்லையில் யெகோவாவுக்கு ஒரு தூண் இருக்கும். 20  அது எகிப்திலே பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு ஓர் அடையாளமாகவும் சாட்சியாகவும் இருக்கும். அங்கு இருப்பவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதால் யெகோவாவிடம் கதறி அழுவார்கள். அவர்களைக் காப்பாற்ற அற்புதமான ஒரு மீட்பரை அவர் அனுப்புவார். 21  அந்த நாளில், யெகோவா எகிப்தியர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவார். அவர்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருக்குப் பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவார்கள். யெகோவாவிடம் நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவார்கள். 22  யெகோவா எகிப்தைத் தண்டிப்பார்,+ பின்பு குணப்படுத்துவார். அந்த ஜனங்கள் யெகோவாவிடம் திரும்புவார்கள். அவர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டு அவர்களைக் குணப்படுத்துவார். 23  அந்த நாளில், எகிப்திலிருந்து அசீரியாவரை போகும் ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+ அசீரியாவில் இருப்பவர்கள் எகிப்துக்கு வருவார்கள். எகிப்தில் இருப்பவர்கள் அசீரியாவுக்குப் போவார்கள். எகிப்து அசீரியாவோடு சேர்ந்து கடவுளை வணங்கும். 24  அந்த நாளில், இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாகச் சேர்ந்துகொண்டு,+ பூமியில் ஓர் ஆசீர்வாதமாக இருக்கும். 25  ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவா அவர்களைப் பற்றி, “என் ஜனங்களாகிய எகிப்தியர்களும், நான் படைத்த அசீரியர்களும், என் சொத்தாகிய இஸ்ரவேலர்களும்+ ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்திருப்பார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மோப்.”
அல்லது, “குருத்தோலையோ கோரைப்புல்லோ.”
வே.வா., “பற்றுமாறாமல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா