ஏசாயா 21:1-17

21  கடல் வனாந்தரத்துக்கு* எதிரான தீர்ப்பு:+ தென் திசையிலிருந்து அடிக்கிற புயல்காற்றைப் போல அழிவு வருகிறது.அது வனாந்தரத்திலிருந்து வருகிறது, பயங்கரமான தேசத்திலிருந்து வருகிறது.+   எனக்குக் காட்டப்பட்ட தரிசனத்தில், “துரோகம் செய்பவள் துரோகம் செய்கிறாள்.அழிப்பவள் அழிக்கிறாள். ஏலாமே, புறப்பட்டுப் போ. மேதியாவே, சுற்றிவளை.+ அவள் கொடுத்த கஷ்டத்துக்கெல்லாம் முடிவுகட்டப்போகிறேன்”+ என்ற கடுமையான செய்தி சொல்லப்பட்டது.   அதனால்தான், பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போல, நான் ரொம்பவே வேதனைப்படுகிறேன்.+வலியால் துடிக்கிறேன். அதைக் கேட்டதால் மனம் பதறுகிறது.அதைப் பார்த்ததால் குலைநடுங்குகிறது.   என் இதயம் படபடக்கிறது; நான் பயத்தில் நடுநடுங்குகிறேன். நான் விரும்பிய சாயங்கால நேரம் இப்போது என்னைக் கதிகலங்க வைக்கிறது.   விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!+ அதிபதிகளே, எழுந்து கேடயத்துக்கு எண்ணெய் பூசுங்கள்!*   ஏனென்றால் யெகோவா என்னிடம், “நீ போய் காவலுக்கு ஆளை நிறுத்து. அவன் பார்ப்பதையெல்லாம் சொல்லச் சொல்” என்றார்.   அவன் ரொம்பவே உன்னிப்பாகவும் கவனமாகவும் பார்த்துக்கொண்டிருந்தான்.குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களும்,கழுதைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களும், ஒட்டகங்கள் பூட்டப்பட்ட போர் ரதங்களும் வருவதைப் பார்த்தான்.   உடனே, சிங்கத்தைப் போலக் கர்ஜித்து, “யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் காவற்கோபுரத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்.ஒவ்வொரு ராத்திரியும் அங்கே காவல் காக்கிறேன்.+   இதோ, பாருங்கள்: குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களில் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னான். பின்பு, “அவள் விழுந்துவிட்டாள்! பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவளுடைய தெய்வங்களின் சிலைகளெல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டன!”+ என்று சொன்னான். 10  மிதிபட்ட* என் மக்களே,என்னுடைய களத்துமேட்டில் அடிக்கப்பட்ட கதிர்களே,+இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா தெரிவித்ததை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். 11  தூமாவுக்கு* எதிரான தீர்ப்பு: சேயீரிலிருந்து+ யாரோ ஒருவன் என்னைக் கூப்பிட்டு, “காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது? காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?” என்று கேட்டான். 12  அதற்கு அந்தக் காவல்காரன், “இதோ, விடியப்போகிறது. இரவும் வரப்போகிறது. விசாரிக்க விரும்பினால், திரும்பவும் வந்து விசாரிக்கலாம்” என்று சொன்னான். 13  பாலைநிலத்துக்கு எதிரான தீர்ப்பு: தேதான்+ பயணக் கூட்டங்களே,நீங்கள் ராத்திரியிலே பாலைநிலத்திலுள்ள காட்டில் தங்குவீர்கள். 14  தீமாவின்+ குடிமக்களே,தாகமாய் இருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவாருங்கள்,தப்பித்து ஓடுகிறவர்களுக்கு உணவு கொண்டுவாருங்கள். 15  உருவப்பட்ட வாளுக்கும் நாணேற்றப்பட்ட வில்லுக்கும் அவர்கள் பயந்து ஓடுகிறார்கள்.போரின் கொடூரத்துக்குப் பயந்து ஓடுகிறார்கள். 16  யெகோவா என்னிடம், “சரியாக* ஒரே வருஷத்துக்குள் கேதாரின்+ மகிமையெல்லாம் மங்கிவிடும். 17  கேதாரின் வில்வீரர்கள் கொஞ்சம் பேரே மிஞ்சியிருப்பார்கள். இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அநேகமாக, பூர்வ பாபிலோனியாவைக் குறிக்கலாம்.
வே.வா., “கேடயத்தைத் தயார்படுத்துங்கள்.”
நே.மொ., “போரடிக்கப்பட்ட.”
தூமா என்பதன் அர்த்தம், “அமைதி”; இது ஏதோமைக் குறிக்கிறது.
நே.மொ., “ஒரு கூலியாளின் வருஷங்களின்படி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா