ஏசாயா 47:1-15
47 கன்னிப்பெண்ணாகிய பாபிலோனே,நீ இறங்கி மண்ணிலே உட்காரு.+
கல்தேயர்களின் மகளே!சிம்மாசனத்திலிருந்து இறங்கி தரையில் உட்காரு.+இனி மக்கள் யாருமே உன்னை ராணிபோல் தலையில் தூக்கிவைத்து ஆட மாட்டார்கள்.
2 திரிகைக் கல்லை எடுத்து மாவு அரை.
உன் முக்காட்டை எடுத்துப்போடு.
உன் மேலாடையைக் கழற்றிவிடு, உன் பாவாடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு,
ஆறுகளைக் கடந்து போ.
3 உன் ஆபாசத்தை எல்லாரும் பார்ப்பார்கள்.
உன் மானம் போய்விடும்.
நான் உன்னைப் பழிவாங்குவேன்,+ யாராலும் என்னைத் தடுக்க முடியாது.*
4 “எங்களை மீட்கிறவர் ஒருவர் இருக்கிறார்.பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள் அவர்தான்.”+
5 கல்தேயர்களின் மகளே!நீ இருட்டில் அமைதியாக உட்கார்ந்திரு.+ராஜ்யங்களுக்கெல்லாம் ராணி என்று இனி யாரும் உன்னை அழைக்க மாட்டார்கள்.+
6 என் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபமாக இருந்தேன்.+
என்னுடைய சொந்த ஜனங்களை அசிங்கப்படுத்தினேன்.+உன் கையில் அவர்களைக் கொடுத்தேன்.+
ஆனால், நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவே இல்லை.+
வயதானவர்கள்மேலும் பாரமான நுகத்தடியை வைத்தாய்.+
7 நீ எதையும் யோசித்துப் பார்க்காமல் இப்படியெல்லாம் நடந்துகொண்டாய்.
பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.“என்றென்றைக்கும் நான்தான் ராணியாக இருப்பேன்” என்று சொன்னாய்.+
8 சுகபோகத்தை விரும்புகிறவளே,+பாதுகாப்பாக உட்கார்ந்திருப்பவளே,
“என்னைவிட முக்கியமானவர் யாருமே இல்லை.+
நான் விதவை ஆக மாட்டேன்.
என் பிள்ளைகளைப் பறிகொடுக்க மாட்டேன்” என்று உள்ளத்தில் சொல்கிறவளே,+ இதைக் கேள்:
9 நீ மாயமந்திரங்களையும் பயங்கரமான சூனியங்களையும் ஏராளமாகச் செய்வதால்,*+
விதவை ஆவாய், பிள்ளைகளையும் பறிகொடுப்பாய்.
இந்த இரண்டும் ஒரே நாளில் திடீரென்று நடக்கும்.+இந்த வேதனைகள் முழு வீச்சில் உன்னைத் தாக்கும்.+
10 உன்னுடைய கெட்ட செயல்களில் நீ நம்பிக்கை வைத்தாய்.
“என்னை யாருமே பார்க்க மாட்டார்கள்” என்று சொன்னாய்.
உன்னுடைய ஞானமும் அறிவும்தான் உன்னைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோயிருக்கிறது.“என்னைவிட முக்கியமானவர் யாருமே இல்லை” என்று நீ உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறாய்.
11 ஆனால், உனக்குக் கேடுதான் வரும்.உன்னுடைய மாயமந்திரங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.
உனக்கு வரும் ஆபத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது.
இதுவரை நீ கேள்விப்படாத அழிவு உன்மேல் திடீரென்று வரும்.+
12 இளவயதிலிருந்தே மாயமந்திரங்களையும் சூனியங்களையும் செய்வதில் நீ மும்முரமாய் இருந்திருக்கிறாய்.+இனியும் அதையே செய்.
ஒருவேளை உனக்குப் பலன் கிடைக்கலாம்.ஒருவேளை நீ ஜனங்களைப் பிரமித்துப்போக வைக்கலாம்.
13 சலித்துப்போகும் அளவுக்கு நீ எத்தனையோ ஆலோசகர்களைத் தேடிப்போனாய்.
வானத்தைக் கும்பிடுகிறவர்களிடமும்,* நட்சத்திரங்களைப் பார்த்துக் கணிக்கிறவர்களிடமும்,+முதலாம் பிறையைப் பார்த்து எதிர்காலத்தைச் சொல்கிறவர்களிடமும் போனாய்.இப்போது அவர்களே உன்னைக் காப்பாற்றட்டும்.
14 அவர்கள் வெறும் வைக்கோலைப் போல் இருக்கிறார்கள்.
நெருப்பு அவர்களைப் பொசுக்கிவிடும்.
பயங்கரமாக எரியும் அந்த நெருப்பிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது.
ஏனென்றால், அது வெறும் கதகதப்பு தரும் தணலும் கிடையாது,வெறும் குளிர்காய்வதற்கான நெருப்பும் கிடையாது.
15 நீ இளவயதிலிருந்தே யாரோடு சேர்ந்து பாடுபட்டாயோஅந்த மாயவித்தை நிபுணர்களும் அப்படித்தான் ஆவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய போக்கிலேயே அலைந்து திரிவார்கள்.
உன்னைக் காப்பாற்ற யாருமே இருக்க மாட்டார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “நான் யாருக்கும் கருணை காட்ட மாட்டேன்.”
^ அல்லது, “செய்தாலும்.”
^ அல்லது, “வானத்தைக் கட்டம்போட்டுப் பிரிப்பவர்களிடமும்; ஜோதிடர்களிடமும்.”