ஏசாயா 65:1-25
65 “என்னைப் பற்றி விசாரித்துக் கேட்காதவர்கள் என்னைத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேன்.என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க வழிசெய்திருக்கிறேன்.+
என் பெயரைக் கூப்பிடாத தேசத்திடம், ‘நான் இங்கே இருக்கிறேன், நான் இங்கே இருக்கிறேன்’+ என்று சொல்லியிருக்கிறேன்.
2 பிடிவாதமான ஜனங்களைப்+ பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறேன்.அவர்கள் மனம்போன போக்கில் போய்,+கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள்.+
3 என் கண்ணெதிரே தோட்டங்களில் பலி கொடுத்து,+செங்கற்கள்மேல் தகன பலி செலுத்தி,*எப்போதும் என் கோபத்தைக் கிளறுகிறார்கள்.+
4 அவர்கள் கல்லறைகளின் நடுவே மறைவாக* உட்கார்ந்துகொண்டு,+இரவைக் கழிக்கிறார்கள்.பன்றிக் கறியைச் சாப்பிடுகிறார்கள்.+அருவருப்பான இறைச்சியின் குழம்பைப் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.+
5 ஆனாலும் மற்றவர்களைப் பார்த்து, ‘கிட்டே வராதீர்கள், தள்ளிப் போங்கள்,நாங்கள் உங்களைவிட பரிசுத்தமாக இருக்கிறோம்’* என்று சொல்கிறார்கள்.
இந்த ஜனங்கள் எனக்கு எரிச்சல் மூட்டுகிறார்கள்,*
நாளெல்லாம் என் கோபத்தைப் பற்றியெரிய வைக்கிறார்கள்.
6 இதெல்லாம் எனக்கு முன்னால் எழுதப்பட்டிருக்கிறது.நான் சும்மா இருக்க மாட்டேன்.அவர்களைப் பழிவாங்குவேன்.+அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை முழுமையாகக் கொடுப்பேன்.
7 அவர்களுடைய பாவங்களுக்காகவும் அவர்களுடைய முன்னோர்களின் பாவங்களுக்காகவும் அவர்களைப் பழிதீர்ப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
“அவர்கள் மலைகளிலும் குன்றுகளிலும் தகன பலிகளைச் செலுத்தி,என்னை அவமதிக்கிறார்கள்.+அவர்களுக்குச் சரியான கூலியைக் கொடுத்து முடிப்பேன்.”
8 யெகோவா சொல்வது இதுதான்:
“‘திராட்சைக் குலையைத் தூக்கிப் போடாதீர்கள்; அதில் நல்ல பழங்களும் இருக்கின்றன’ என்று ஜனங்கள் சொல்வார்கள்.ஏனென்றால், அதிலிருந்து புதிய திராட்சமது தயாரிக்க முடியும்.
அதேபோல், நானும் எல்லா மக்களையும் அழிக்க மாட்டேன்.+எனக்கு உண்மையாக இருக்கிற ஊழியர்களைக் காப்பாற்றுவேன்.
9 யாக்கோபிலிருந்து ஒரு வம்சத்தைத் தோன்றச் செய்வேன்.என் மலைகளைச் சொந்தமாக்கப்போகிறவர்களை யூதாவிலிருந்து வர வைப்பேன்.+நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.என் ஊழியர்கள் அங்கே குடியிருப்பார்கள்.+
10 சாரோன் சமவெளியை+ ஆடுகள் மேயும் இடமாக்குவேன்.ஆகோர் பள்ளத்தாக்கை+ மாடுகள் சுற்றித் திரியும் இடமாக்குவேன்.என்னைத் தேடுகிற என் ஜனங்களுக்காக இதைச் செய்வேன்.
11 ஆனால், நீங்கள் யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டீர்கள்.+என் பரிசுத்த மலையை மறந்துவிட்டீர்கள்.+அதிர்ஷ்ட தெய்வத்துக்காக உணவையும்,விதி தெய்வத்துக்காகத் திராட்சமதுவையும் படையல் வைக்கிறீர்கள்.
12 அதனால், உங்களை வாளுக்குப் பலியாக்குவேன்.+நீங்கள் கொலை செய்யப்படுவதற்காகக் குனிவீர்கள்.+ஏனென்றால், நான் கூப்பிட்டபோது நீங்கள் பதில் சொல்லவில்லை.நான் பேசியபோது நீங்கள் கேட்கவில்லை.+நான் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள்.எனக்குப் பிடிக்காத வழியில் போனீர்கள்.”+
13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நீங்கள் பசியில் வாடுவீர்கள்.+
என் ஊழியர்கள் குடிப்பார்கள்,+ ஆனால் நீங்கள் தாகத்தில் தவிப்பீர்கள்.
என் ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்,+ ஆனால் நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவீர்கள்.+
14 என் ஊழியர்கள் சந்தோஷம் பொங்கும் இதயத்தோடு ஆரவாரம் செய்வார்கள்.ஆனால், நீங்கள் வேதனை நிறைந்த இதயத்தோடு அலறுவீர்கள்.துக்கத்தினால் அழுது புலம்புவீர்கள்.
15 நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள், உங்களுக்குப்பின் உங்கள் பெயரைச் சாபத்துக்குரிய பெயராகத்தான் பயன்படுத்துவார்கள்.உன்னதப் பேரரசராகிய யெகோவா உங்கள் ஒவ்வொருவரையும் கொன்றுபோடுவார்.ஆனால், தன்னுடைய ஊழியர்களை ஒரு புதிய பெயரால் அழைப்பார்.+
16 பூமியில் யார் ஆசீர்வாதம் கேட்டாலும்,சத்தியத்தின்* கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பார்.பூமியில் யார் சத்தியம் செய்தாலும்,சத்தியத்தின்* கடவுள்மீதே சத்தியம் செய்வார்கள்.+
என் ஜனங்கள் இனிமேல் என் கண் முன்னால் கஷ்டப்பட மாட்டார்கள்.இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்துவிடுவார்கள்.+
17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்.+முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது.யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.+
18 அதனால், நான் புதிதாகப் படைக்கிறவற்றை என்றென்றும் அனுபவித்து மகிழுங்கள்.
எருசலேமைச் சந்தோஷத்துக்குக் காரணமான நகரமாகவும்,அவளுடைய மக்களை மகிழ்ச்சிக்குக் காரணமான மக்களாகவும் ஆக்குவேன்.+
19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+
20 “அங்கே இனி எந்தக் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோகாது.அற்ப ஆயுசில் யாரும் செத்துப்போக மாட்டார்கள்.
யாராவது நூறு வயதில் இறந்துபோனாலும் சின்ன வயதிலேயே இறந்துபோனதாகத்தான் சொல்வார்கள்.பாவம் செய்கிறவன் நூறு வயதுள்ளவனாக இருந்தாலும் சபிக்கப்படுவான்.*
21 ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள்.+திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.+
22 ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார்.ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.
ஏனென்றால், மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும்.+நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.
23 அவர்களுடைய கடின உழைப்பு வீண்போகாது.+அவர்கள் பெற்றெடுக்கிற பிள்ளைகள் யாரும் பாடுகளை அனுபவிக்க மாட்டார்கள்.ஏனென்றால், அவர்களும் அவர்களுடைய வருங்காலத் தலைமுறைகளும்,யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற ஜனங்களாக இருப்பார்கள்.+
24 அவர்கள் கூப்பிடுவதற்கு முன்பே நான் பதில் சொல்வேன்.அவர்கள் பேசுவதை உடனுக்குடன் கேட்பேன்.
25 ஓநாயும் செம்மறியாட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும்.சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்.+பாம்பு வெறும் மண்ணைச் சாப்பிடும்.
என்னுடைய பரிசுத்த மலையில் அவை எந்தத் தீங்கும் செய்யாது, எந்தக் கேடும் செய்யாது”+ என்று யெகோவா சொல்கிறார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “தூபம் காட்டி.”
^ அல்லது, “காவல் குடிசைகளில்.”
^ அல்லது, “எங்கள் பரிசுத்தத்தன்மை உங்களை ஒட்டிக்கொள்ளும்.”
^ நே.மொ., “என் மூக்கில் ஏறும் புகையாக இருக்கிறார்கள்.”
^ வே.வா., “உண்மையுள்ள.”
^ வே.வா., “உண்மையுள்ள.”
^ அல்லது, “நூறு வயதை எட்டாதவன் சபிக்கப்பட்டவனாகக் கருதப்படுவான்.”