ஓசியா 7:1-16
7 “இஸ்ரவேலை நான் குணப்படுத்த நினைக்கும்போதெல்லாம்எப்பிராயீமின் குற்றமும்,+சமாரியாவின் அக்கிரமமும் அப்பட்டமாகத் தெரிகிறது.+
அந்த ஜனங்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.+வீடுகளில் திருடுகிறார்கள், வீதிகளில் கொள்ளையடிக்கிறார்கள்.+
2 இதையெல்லாம் நான் மறக்க மாட்டேன் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.+
அவர்களுடைய அக்கிரமங்களே அவர்களை வளைத்துக்கொண்டன.அவையெல்லாம் என்முன் வெட்டவெளிச்சமாக இருக்கின்றன.
3 அவர்கள் அட்டூழியங்கள் செய்து அரசனைச் சந்தோஷப்படுத்துகிறார்கள்.மோசடிகள் செய்து அதிகாரிகளை மயக்குகிறார்கள்.
4 அவர்கள் எல்லாரும் ரொட்டி சுடுகிறவனின் அடுப்பைப் போல் இருக்கிறார்கள்.பிசைந்த மாவு புளிக்கும்வரை அடுப்பின் நெருப்பை அவன் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கத் தேவை இல்லை; ஏனென்றால், அதன் நெருப்பு பற்றியெரிந்துகொண்டிருக்கும்.அதேபோல் அவர்களும் கெட்ட ஆசையில் பற்றியெரிந்து கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.
5 நம் ராஜாவின் விழாவில் அமைச்சர்கள் குடித்து வாந்தியெடுத்தார்கள்.குடிவெறியில்+ ஆத்திரமடைந்தார்கள்.
ராஜாவும் கிண்டல் செய்கிறவர்களோடு சேர்ந்துகொண்டான்.
6 அவர்களுடைய இதயம் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பைப் போல் இருக்கிறது.*
ரொட்டி சுடுகிறவன் ராத்திரியெல்லாம் தூங்குகிறான்.காலையில் அவனுடைய அடுப்பு கொழுந்துவிட்டு எரிகிறது.
7 எல்லாருமே அடுப்பைப் போல அனல் கக்குகிறார்கள்.தங்களுடைய அதிகாரிகளை* பொசுக்குகிறார்கள்.
அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் வீழ்ச்சியடைந்தார்கள்.+அவர்களில் யாருமே உதவிக்காக என்னைக் கூப்பிடுவதில்லை.+
8 எப்பிராயீம் மற்ற தேசத்தாரோடு ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்துவிட்டான்.+
திருப்பிப் போடாத* ரொட்டியைப் போல அவன் இருக்கிறான்.
9 முன்பின் தெரியாதவர்கள் அவனுடைய அதிகாரத்தை அடக்கிவிட்டார்கள்.+
ஆனால், அவனுக்கு அது தெரியவில்லை.
அவனுடைய முடியெல்லாம் நரைத்துவிட்டது.
ஆனால், அவன் அதைக் கவனிக்கவில்லை.
10 இஸ்ரவேலின் கர்வம் அவன் முகத்திரையைக் கிழித்தது.+ஆனாலும், தன் கடவுளான யெகோவாவிடம் அவன் திரும்பவில்லை.+அவரிடம் உதவி கேட்கவும் இல்லை.
11 சுலபமாக ஏமாந்துவிடும் புறாவைப் போல எப்பிராயீம் ஜனங்கள் புத்தியில்லாமல் இருக்கிறார்கள்.+
அவர்கள் உதவிக்காக எகிப்தைக் கூப்பிடுகிறார்கள்,+ அசீரியாவிடம் ஓடுகிறார்கள்.+
12 எங்கே போனாலும் அவர்கள்மேல் என் வலையை விரிப்பேன்.
வானத்துப் பறவைகளைப் போல அவர்களைக் கீழே விழ வைப்பேன்.
எச்சரித்தபடியே அவர்களைத் தண்டிப்பேன்.+
13 என்னைவிட்டு விலகிப்போனதால், அவர்களுக்குக் கேடுதான் வரும்!
என் வார்த்தையை மீறிவிட்டதால் அவர்களுக்கு அழிவுதான்!
அவர்களை விடுவிக்கத் தயாராக இருந்தேன், ஆனால் என்னைப் பற்றிப் பொய் பேசித் திரிந்தார்கள்.+
14 படுக்கையில் கிடந்து ஓலமிட்டார்கள்.ஆனாலும், உதவிக்காக என்னிடம் இதயப்பூர்வமாகக் கெஞ்சவில்லை.+
தானியத்துக்காகவும் தித்திப்பான திராட்சமதுவுக்காகவும் தங்கள் உடலை அடித்து அடித்துக் கிழித்துக்கொண்டார்கள்.என்னைவிட்டு விலகிப்போனார்கள்.
15 அவர்களுக்குப் புத்திசொன்னேன்,* அவர்களுடைய கைகளைப் பலப்படுத்தினேன்.ஆனாலும், எனக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
16 அவர்கள் தங்கள் வழியை மாற்றிக்கொண்டார்கள், ஆனாலும் உயர்ந்த இடத்துக்கு* வரவில்லை.உறுதியற்ற வில்லைப் போல் அவர்கள் நம்ப முடியாதவர்களாக இருந்தார்கள்.+
எதிர்த்துப் பேசுகிற அவர்களுடைய அதிகாரிகள் வாளுக்குப் பலியாவார்கள்.
எகிப்து தேசத்தில் அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள்.”+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “சதித்திட்டங்கள் தீட்டும்போது அவர்களுடைய இதயம் அடுப்பைப் போல இருக்கிறது.”
^ வே.வா., “நீதிபதிகளை.”
^ வே.வா., “அரைவேக்காடான.”
^ வே.வா., “அவர்களைக் கண்டித்துத் திருத்தினேன்.”
^ அதாவது, ”எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் வணக்கத்துக்கு.”