சங்கீதம் 34:1-22
அபிமெலேக்கின் முன்னால் பைத்தியம்போல் நடித்து,+ அவனால் துரத்தப்பட்ட பிறகு, தாவீது பாடிய பாடல்.
א [ஆலெஃப்]
34 எல்லா சமயத்திலும் நான் யெகோவாவைப் புகழ்வேன்.என் உதடுகள் ஓயாமல் அவரைப் புகழும்.
ב [பேத்]
2 நான் யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்.+தாழ்மையானவர்கள்* அதைக் கேட்டு சந்தோஷப்படுவார்கள்.
ג [கீமெல்]
3 என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்.+நாம் ஒன்றுசேர்ந்து அவருடைய பெயரை மெச்சிப் பேசலாம்.
ד [டாலத்]
4 நான் யெகோவாவிடம் விசாரித்தேன், அவர் எனக்குப் பதில் சொன்னார்.+
எல்லா பயத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார்.+
ה [ஹே]
5 அவரை நம்பியிருந்தவர்களின் முகங்கள் பிரகாசித்தன.அவர்களுடைய முகங்களில் அவமானமே இல்லை.
ז [ஸாயின்]
6 இந்த எளியவன் கூப்பிட்டபோது யெகோவா கேட்டார்.
எல்லா இக்கட்டிலிருந்தும் என்னை விடுவித்தார்.+
ח [ஹேத்]
7 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களைஅவருடைய தூதர் சூழ்ந்து நின்று,+ காப்பாற்றுகிறார்.+
ט [டேத்]
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.+அவரிடம் தஞ்சம் அடைகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.
י [யோத்]
9 யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+
כ [காஃப்]
10 பலமுள்ள இளம் சிங்கங்கள்கூட இரை இல்லாமல் தவிக்கலாம்.ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.*+
ל [லாமெத்]
11 என் மகன்களே, வாருங்கள்; நான் சொல்வதைக் கேளுங்கள்.யெகோவாவுக்குப் பயந்து நடக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.+
מ [மேம்]
12 நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா?நீண்ட காலத்துக்கு நன்றாக வாழ ஆசைப்படுகிறீர்களா?+
נ [நூன்]
13 அப்படியானால், கெட்ட விஷயங்களைப் பேசாதபடி உங்கள் நாவையும்,+பொய் பேசாதபடி உங்கள் உதடுகளையும் அடக்கி வையுங்கள்.+
ס [சாமெக்]
14 கெட்டதைவிட்டு விலகி, நல்லது செய்யுங்கள்.+சமாதானத்தைத் தேடுங்கள், அதற்காகவே பாடுபடுங்கள்.+
ע [ஆயின்]
15 யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன.+அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.+
פ [பே]
16 ஆனால், யெகோவாவுடைய முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.அவர்களைப் பற்றிய நினைவுகூட இந்தப் பூமியில் இல்லாதபடி அவர் செய்துவிடுவார்.+
צ [சாதே]
17 நீதியுள்ளவர்கள் உதவி கேட்டுக் கெஞ்சியபோது யெகோவா கேட்டார்.+எல்லா வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றினார்.+
ק [கோஃப்]
18 உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.+மனம் நொந்துபோனவர்களை* அவர் காப்பாற்றுகிறார்.+
ר [ரேஷ்]
19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+
ש [ஷீன்]
20 அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார்.அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை.+
ת [ட்டா]
21 பொல்லாதவன் பேரழிவில் செத்துப்போவான்.நீதிமானை வெறுக்கிறவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
22 யெகோவா தன்னுடைய ஊழியர்களின் உயிரை மீட்கிறார்.அவரிடம் தஞ்சம் அடைகிற யாருமே குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சாந்தமானவர்கள்.”
^ வே.வா., “எந்த நன்மையும் கிடைக்காமல் போகாது.”
^ வே.வா., “சோர்ந்துபோனவர்களை.”