சங்கீதம் 41:1-13
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
41 ஏழைக்கு* கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன்.+ஆபத்து நாளில் யெகோவா அவனைக் காப்பாற்றுவார்.
2 யெகோவா அவனைப் பாதுகாத்து, உயிரோடு வைப்பார்.
இந்தப் பூமியில் அவன் சந்தோஷமானவன் என்று புகழப்படுவான்.+கடவுள் ஒருபோதும் எதிரிகளின் கையில் அவனை ஒப்படைக்க* மாட்டார்.+
3 அவன் சுகமில்லாமல் படுத்துக் கிடக்கும்போது யெகோவா அவனைத் தாங்குவார்.+அவன் வியாதியில் கிடக்கும்போது அவனுடைய படுக்கையை முழுவதுமாக மாற்றிப்போடுவார்.
4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+
என்னைக் குணப்படுத்துங்கள்,+
நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன்.
5 என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
“அவன் எப்போது சாவான்? எப்போது அவனுடைய பெயர் ஒழிந்துபோகும்?” என்று பேசிக்கொள்கிறார்கள்.
6 அவர்களில் யாராவது என்னைப் பார்க்க வரும்போது போலித்தனமாகப் பேசுகிறார்கள்.
என்னைப் பற்றித் தவறான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு,வெளியே போய், அதைப் பரப்புகிறார்கள்.
7 என்னை வெறுக்கிற எல்லாரும் ஒருவருக்கொருவர் கிசுகிசுக்கிறார்கள்.எனக்குக் கெடுதல் செய்யத் திட்டம் போடுகிறார்கள்.
8 “அவனுக்குக் கொடிய வியாதி வந்துவிட்டது.*இப்போது படுக்கையில் கிடக்கிறான், இனி எழுந்திருக்கவே மாட்டான்” என்று பேசிக்கொள்கிறார்கள்.+
9 நான் நம்பிக்கை வைத்திருந்த நெருங்கிய நண்பனே எனக்குத் துரோகம் செய்துவிட்டான்.+என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்.*+
10 ஆனால் யெகோவாவே, நீங்கள் எனக்குக் கருணை காட்டி, என்னை எழுந்திருக்க வையுங்கள்.அப்போதுதான், என்னால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க முடியும்.
11 எதிரிகள் என்னை ஜெயிக்க முடியாமல் போவதைப் பார்க்கும்போது,
நீங்கள் என்மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வேன்.+
12 நான் உத்தமமாக நடந்துகொள்வதால் நீங்கள் என்னைத் தாங்குகிறீர்கள்.+நீங்கள் என்னை என்றென்றுமே உங்கள் கண் முன்னால் வைத்திருப்பீர்கள்.+
13 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்!என்றென்றும் அவருக்குப் புகழ் சேரட்டும்!+
ஆமென், ஆமென்.*
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “எளியவனுக்கு; உதவி தேவைப்படுகிறவனுக்கு.”
^ வே.வா., “எதிரிகள் தங்கள் இஷ்டப்படி அவனை நடத்துவதற்கு விட்டுவிட.”
^ வே.வா., “அவன் பயங்கர ஆபத்தில் இருக்கிறான்.”
^ நே.மொ., “எனக்கு எதிராகத் தன் குதிங்காலைத் தூக்கினான்.”
^ அதாவது, “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்.”