தானியேல் 4:1-37

4  “பூமியெங்கும் உள்ள எல்லா இனத்தினருக்கும் தேசத்தினருக்கும் மொழியினருக்கும் நேபுகாத்நேச்சார் ராஜா எழுதுவது: உங்களுக்கு வாழ்த்துக்கள்!  உன்னதமான கடவுள் என் வாழ்க்கையில் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் பற்றி உங்களுக்குச் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.  அவர் செய்யும் அதிசயங்களும் அற்புதங்களும் எவ்வளவு பிரமிப்பாக இருக்கின்றன! அவருடைய ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும், அவருடைய அரசாட்சி தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.+  நேபுகாத்நேச்சாராகிய நான் எந்தக் கவலையும் இல்லாமல் செல்வச்செழிப்போடு என் அரண்மனையில் வாழ்ந்துவந்தேன்.  ஒருநாள் நான் படுத்திருந்தபோது, ஒரு பயங்கரமான கனவைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளையும் தரிசனங்களையும் பார்த்து அரண்டுபோனேன்.+  அந்தக் கனவின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதற்காக, பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்படி ஆணையிட்டேன்.+  அதன்படியே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரர்களும் ஜோதிடர்களும்*+ குறிசொல்கிறவர்களும் வந்தார்கள். நான் பார்த்த கனவை அவர்களிடம் சொன்னேன், ஆனால் அவர்களால் அதை விளக்க முடியவில்லை.+  கடைசியில், என் தெய்வத்தின்+ பெயர் கொண்ட பெல்தெஷாத்சார்+ என்ற தானியேல் வந்தார். பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியைப் பெற்ற அவரிடம்+ அந்தக் கனவைப் பற்றிச் சொன்னேன். நான் அவரிடம்,  ‘மந்திரவாதிகளின் தலைவனான பெல்தெஷாத்சாரே,+ பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியை நீ பெற்றிருப்பது+ எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் சொல்ல முடியாத ரகசியம் எதுவுமே இல்லை.+ அதனால், கனவில் நான் பார்த்த தரிசனங்களையும் அதன் அர்த்தத்தையும் நீதான் எனக்கு விளக்க வேண்டும். 10  நான் படுத்திருந்தபோது பார்த்த தரிசனத்தில், பூமியின் நடுவில் ஒரு மரம்+ உயர்ந்தோங்கி நின்றது.+ 11  அது பிரமாண்டமாக வளர்ந்து, பலம் அடைந்தது. அதன் உச்சி வானத்தையே தொட்டது. பூமியின் எல்லா மூலைகளிலிருந்தும் அதைப் பார்க்க முடிந்தது. 12  அதன் இலைகள் அழகாக இருந்தன, அதில் பழங்கள் காய்த்துக் குலுங்கின, எல்லா உயிரினங்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது. அதன் நிழலில் காட்டு மிருகங்களும், அதன் கிளைகளில் வானத்துப் பறவைகளும் தங்கின. எல்லா உயிரினங்களும் அதன் பழங்களைச் சாப்பிட்டன. 13  நான் அந்தத் தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, பரிசுத்த தூதுவர்* ஒருவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார்.+ 14  அவர் உரத்த குரலில், “இந்த மரத்தை வெட்டிச்சாயுங்கள்,+ கிளைகளை முறித்துப்போடுங்கள், இலைகளை உதிர்த்துவிடுங்கள், பழங்களைச் சிதறடியுங்கள்! அதன் நிழலில் தங்கியிருக்கிற மிருகங்கள் ஓடிப்போகட்டும், அதன் கிளைகளில் தங்கியிருக்கிற பறவைகள் பறந்துபோகட்டும். 15  ஆனால், அடிமரத்தையும் அதன் வேர்களையும் புல்வெளியிலேயே விட்டுவையுங்கள். இரும்பிலும் செம்பிலும் அதற்குக் காப்புகளைப் போடுங்கள். வானத்திலிருந்து பெய்யும் பனியில் அது நனையட்டும். பூமியிலுள்ள புல்பூண்டுகளின் நடுவில் அது மிருகங்களோடு இருக்கட்டும்.+ 16  மனித இதயம் நீக்கப்பட்டு, மிருக இதயம் அதற்குக் கொடுக்கப்படும். இப்படியே, ஏழு காலங்கள்+ உருண்டோடட்டும்.+ 17  இது தூதுவர்களின்*+ உத்தரவு, பரிசுத்தவான்களின் வேண்டுகோள். உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா+ என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார் என்றும், மிக அற்பமான* மனிதனைக்கூட அரசனாக்குகிறார் என்றும் உயிரோடுள்ள எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார். 18  இதுதான் நேபுகாத்நேச்சார் ராஜாவாகிய நான் பார்த்த கனவு. பெல்தெஷாத்சாரே, இப்போது இதன் அர்த்தத்தைச் சொல். என் சாம்ராஜ்யத்திலுள்ள எந்த ஞானியாலும் அதைச் சொல்ல முடியவில்லை.+ உன்னால் மட்டும்தான் முடியும், ஏனென்றால் பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியை நீ பெற்றிருக்கிறாய்’ என்று சொன்னேன். 19  அதைக் கேட்டதும் பெல்தெஷாத்சார்+ என்ற தானியேல் திடுக்கிட்டுப்போனார். ஏதேதோ யோசனைகளால் பயந்துபோனார். அப்போது ராஜா, ‘பெல்தெஷாத்சாரே, கனவையும் அதன் அர்த்தத்தையும் நினைத்துப் பயப்படாதே’ என்றான். அதற்கு பெல்தெஷாத்சார், ‘என் எஜமானே, அந்தக் கனவு உங்களை வெறுக்கிறவர்களுக்கே பலிக்கட்டும், அதன் அர்த்தம் உங்கள் எதிரிகளிடமே நிறைவேறட்டும். 20  நீங்கள் பார்த்த மரம் பிரமாண்டமாக வளர்ந்து, பலம் அடைந்தது. அதன் உச்சி வானத்தையே தொட்டது. பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அதைப் பார்க்க முடிந்தது.+ 21  அதில் அழகான இலைகளும் ஏராளமான பழங்களும் இருந்தன. அது எல்லா உயிரினங்களுக்கும் உணவளித்தது. அதன் நிழலில் காட்டு மிருகங்களும், அதன் கிளைகளில் வானத்துப் பறவைகளும் தங்கின.+ 22  அந்த மரம் நீங்கள்தான் ராஜாவே. நீங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்து, பலம் அடைந்திருக்கிறீர்கள். உங்கள் மேன்மை வானத்தைத் தொட்டிருக்கிறது,+ உங்கள் ஆட்சி பூமியெங்கும் பரந்துவிரிந்திருக்கிறது.+ 23  ராஜாவே, பரிசுத்த தூதுவர்*+ ஒருவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். அவர், “இந்த மரத்தை வெட்டி நாசமாக்குங்கள். ஆனால், அடிமரத்தையும் அதன் வேர்களையும் புல்வெளியிலேயே விட்டுவையுங்கள். இரும்பிலும் செம்பிலும் அதற்குக் காப்புகளைப் போடுங்கள். வானத்திலிருந்து பெய்யும் பனியில் அது நனையட்டும். காட்டுவெளியில் உள்ள மிருகங்கள் மத்தியிலே அது கிடக்கட்டும். இப்படியே ஏழு காலங்கள் உருண்டோடட்டும்”+ என்றார். 24  ராஜாவே, அதன் அர்த்தத்தை இப்போது விளக்குகிறேன். என் எஜமானாகிய ராஜாவுக்கு இப்படி நடக்க வேண்டுமென்பது உன்னதமான கடவுளின் தீர்ப்பு. 25  நீங்கள் மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர்கள். மாடுகளைப் போலப் புல்லை மேய்வீர்கள். வானத்திலிருந்து பெய்யும் பனியில் நனைவீர்கள்.+ இப்படியே, ஏழு காலங்கள் உருண்டோடும்.+ கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொள்வீர்கள். 26  அடிமரத்தையும் அதன் வேர்களையும் விட்டுவைக்கும்படி+ சொல்லப்பட்டதன் அர்த்தம் என்னவென்றால், பரலோகத்திலுள்ள கடவுள்தான் ராஜா* என்பதை நீங்கள் உணர்ந்த பின்பு ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வீர்கள். 27  அதனால் ராஜாவே, என் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள். உங்கள் பாவங்களை விட்டுவிட்டு நன்மை செய்யுங்கள், அக்கிரமங்களை விட்டுவிட்டு ஏழைகளுக்கு இரக்கம் காட்டுங்கள். அப்போது ஒருவேளை, நீங்கள் சீரும் சிறப்புமாகத் தொடர்ந்து வாழ முடியும்’+ என்றார்.” 28  இதெல்லாமே நேபுகாத்நேச்சார் ராஜாவின் வாழ்க்கையில் நடந்தது. 29  பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு, பாபிலோனில் உள்ள தன் அரண்மனையின் மொட்டைமாடியில் ராஜா நடந்துகொண்டிருந்தான். 30  அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான். 31  அவன் அதைச் சொல்லி முடிப்பதற்குள் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நேபுகாத்நேச்சார் ராஜாவே, உனக்குச் சொல்லப்படும் தீர்ப்பைக் கேள்: ‘உன் ராஜ்யம் உன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.+ 32  மனிதர்களிடமிருந்து நீ துரத்தப்படுவாய். காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப் போலப் புல்லை மேய்வாய். இப்படியே, ஏழு காலங்கள் உருண்டோடும். கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொள்வாய்’” என்று சொன்னது. 33  அந்த நொடியே இந்த வார்த்தைகள் நேபுகாத்நேச்சாரின் வாழ்க்கையில் நிறைவேறத் தொடங்கின. அவன் மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டான், மாடுகளைப் போலப் புல்லை மேய்ந்தான். அவனுடைய உடல் வானத்திலிருந்து பெய்கிற பனியில் நனைந்தது. அவனுடைய தலைமுடி கழுகுகளின் இறக்கைகளைப் போல் நீளமாக வளர்ந்தது, அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்களைப் போல் மாறின.+ 34  “அந்தக் காலம் முடிந்த பின்பு,+ நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை அண்ணாந்து பார்த்தேன்; என் புத்தி தெளிந்தது. உன்னதமான கடவுளைப் போற்றிப் புகழ்ந்தேன், என்றென்றும் வாழ்கிறவரை மகிமைப்படுத்தினேன். ஏனென்றால், அவருடைய அரசாட்சியே என்றென்றும் நிலைத்திருக்கும், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.+ 35  அவருக்கு முன்னால் பூமியின் குடிமக்கள் அற்பமானவர்கள். வானத்தின் படைகளுக்கும் பூமியின் குடிமக்களுக்கும் அவர் தன்னுடைய விருப்பப்படியே* செய்கிறார். ஒருவராலும் அவரை* தடுக்கவோ,+ ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கவோ முடியாது.+ 36  அப்போது, என் புத்தி தெளிந்தது. என் ஆட்சியும் அந்தஸ்தும் பேரும் புகழும் சீரும் சிறப்பும் எனக்குத் திரும்பக் கிடைத்தன.+ என்னுடைய உயர் அதிகாரிகளும் முக்கியப் பிரமுகர்களும் என்னைத் தேடி வந்தார்கள். நான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தேன். முன்பைவிட அதிக மேன்மை அடைந்தேன். 37  இப்போது, நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் போற்றிப் புகழ்ந்து, அவரை மகிமைப்படுத்துகிறேன்.+ ஏனென்றால், அவருடைய செயல்களெல்லாம் சரியானவை, அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ தலைக்கனம் பிடித்தவர்களை அவர் தலைகுனிய வைக்கிறார்.”+

அடிக்குறிப்புகள்

அதாவது, “கல்தேயர்களும்.”
நே.மொ., “காவலர்.”
நே.மொ., “காவலர்களின்.”
வே.வா., “மனத்தாழ்மையான.”
நே.மொ., “காவலர்.”
நே.மொ., “பரலோகம்தான் ஆட்சி செய்கிறது.”
வே.வா., “ராஜ்யத்தின் தலைநகரமாக இருப்பதற்காகவும்.”
வே.வா., “சித்தத்தின்படியே.”
வே.வா., “அவருடைய கையை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா