நியாயாதிபதிகள் 12:1-15

12  பின்பு எப்பிராயீம் ஆண்கள் ஒன்றுதிரண்டு, ஆற்றைக் கடந்து சாப்போனுக்கு* போய் யெப்தாவைச் சந்தித்தார்கள். அவர்கள் அவரிடம், “அம்மோனியர்களோடு போர் செய்யப் போனபோது நீ ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ உன்னை உன் வீட்டோடு சேர்த்துக் கொளுத்தப்போகிறோம்” என்று சொன்னார்கள்.  அதற்கு யெப்தா, “எனக்கும் என் ஜனங்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய சண்டை வந்தபோது, உதவிக்காக நான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வரவில்லை.  நீங்கள் உதவிக்கு வர மாட்டீர்கள் என்று தெரிந்த பிறகுதான், என்னுடைய உயிரைப் பணயம் வைத்து அம்மோனியர்களோடு போர் செய்தேன்.+ யெகோவா அவர்களை என் கையில் கொடுத்தார். இப்போது நீங்கள் ஏன் என்னிடம் வந்து சண்டை போடுகிறீர்கள்?” என்று கேட்டார்.  பின்பு யெப்தா கீலேயாத்தின் ஆண்களையெல்லாம்+ ஒன்றுதிரட்டி எப்பிராயீம் ஆண்களோடு போர் செய்தார். அந்த எப்பிராயீம் ஆண்கள்தான் முன்பு, “எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் சொந்தமான பகுதிகளில் இருக்கிற கீலேயாத்தியர்களே, நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள்தானே” என்று சொல்லியிருந்தார்கள். அவர்களை கீலேயாத்தின் ஆண்கள் தோற்கடித்தார்கள்.  எப்பிராயீமியர்களின் பகுதிக்கு முன்னால் இருந்த யோர்தான் ஆற்றுத்துறைகளை* கைப்பற்றினார்கள்.+ தப்பித்து ஓட முயற்சி செய்த எப்பிராயீம் ஆண்கள் ஒவ்வொருவரும் ஆற்றைக் கடக்க அனுமதி கேட்டபோது, கீலேயாத்தின் ஆண்கள் அவர்களிடம், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை” என்று சொன்னபோது,  “அப்படியானால் ஷிபோலேத் என்று சொல்” என்றார்கள். ஆனால் அவர்கள், “சிபோலேத்” என்று சொன்னார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அந்த வார்த்தை சரியாக உச்சரிக்க வரவில்லை. உடனே, கீலேயாத்தின் ஆண்கள் அவர்களைப் பிடித்து யோர்தான் ஆற்றுத்துறைகளில் வெட்டிப்போட்டார்கள். இப்படி, அந்தச் சமயத்தில் 42,000 எப்பிராயீமியர்கள் கொல்லப்பட்டார்கள்.  யெப்தா ஆறு வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார். அதன்பின் அவர் இறந்துபோய், கீலேயாத்திலிருந்த அவருடைய நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.  யெப்தாவுக்குப்பின் பெத்லகேமைச் சேர்ந்த இப்சான் இஸ்ரவேலில் நியாயாதிபதியாக ஆனார்.+  அவருக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள். தன்னுடைய மகள்களைச் சொந்தத்துக்கு வெளியே கல்யாணம் செய்துகொடுத்தார். அவர் தன்னுடைய மகன்களுக்கும் சொந்தத்துக்கு வெளியே பெண்ணெடுத்தார். அவர் ஏழு வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார். 10  பின்பு அவர் இறந்துபோய், பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார். 11  அவருக்குப்பின், செபுலோனியரான ஏலோன் 10 வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார். 12  பின்பு அவர் இறந்துபோய், செபுலோன் தேசத்தில் இருந்த ஆயலோனில் அடக்கம் செய்யப்பட்டார். 13  அவருக்குப்பின் பிரத்தோன் ஊரைச் சேர்ந்த இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரவேலில் நியாயாதிபதியாக ஆனார். 14  அவருக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தார்கள். அவர்கள் 70 கழுதைகளில் சவாரி செய்தார்கள். அப்தோன் எட்டு வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார். 15  பின்பு, பிரத்தோனைச் சேர்ந்த இல்லேலின் மகன் அப்தோன் இறந்துபோனார். எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர்களின்+ மலையிலிருந்த பிரத்தோனில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “வடக்கே.”
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதிகள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா