நியாயாதிபதிகள் 21:1-25
21 இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவில்+ கூடியிருந்தபோது, அவர்கள் பென்யமீனியர்களுக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.+
2 அதனால் இஸ்ரவேலர்கள் பெத்தேலுக்கு+ வந்து உண்மைக் கடவுளின் முன்னால் உட்கார்ந்து சாயங்காலம்வரை கதறி அழுதார்கள்.
3 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது? இஸ்ரவேலிலிருந்து ஒரு முழு கோத்திரமே ஏன் அழிய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
4 அவர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடம் கட்டி, அதில் தகன பலிகளையும் சமாதான பலிகளையும்+ செலுத்தினார்கள்.
5 பின்பு இஸ்ரவேலர்கள், “எந்தக் கோத்திரத்தார் யெகோவாவின் முன்னால் வரவில்லை?” என்று கேட்டார்கள். ஏனென்றால், மிஸ்பாவில் யெகோவாவின் முன்னால் வராதவர்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டுமென்று அவர்கள் உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.
6 இஸ்ரவேலர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய பென்யமீனியர்களை நினைத்து வேதனைப்பட்டார்கள். “இன்று ஒரு இஸ்ரவேல் கோத்திரத்துக்கு முடிவு வந்துவிட்டதே.
7 அவர்களில் மீதியிருக்கிற ஆண்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் என்ன செய்வது? நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுக்க மாட்டோமென்று+ யெகோவாவின் பெயரில் உறுதிமொழி+ எடுத்திருக்கிறோமே” என்று சொன்னார்கள்.
8 பின்பு அவர்கள், “இஸ்ரவேலில் எந்தக் கோத்திரத்தார் மிஸ்பாவில் யெகோவாவின் முன்னால் வரவில்லை?”+ என்று கேட்டார்கள். யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்த ஒருவர்கூட சபையார் கூடிவந்திருந்த இடத்துக்கு வரவில்லை.
9 ஜனங்களைக் கணக்கெடுத்தபோது, யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
10 அதனால், ஜனங்களின் பிரதிநிதிகள் மாவீரர்களான 12,000 பேரைக் கூப்பிட்டு, “யாபேஸ்-கீலேயாத்துக்குப் புறப்பட்டுப் போய், அங்குள்ள ஜனங்களை வெட்டிப்போடுங்கள். பெண்களையும் பிள்ளைகளையும்கூட விட்டுவைக்காதீர்கள்.+
11 எல்லா ஆண்களையும் பெண்களையும் கொன்றுபோடுங்கள். கன்னிப்பெண்களை மட்டும் விட்டுவிடுங்கள்” என்று சொல்லி, அனுப்பி வைத்தார்கள்.
12 யாபேஸ்-கீலேயாத் ஜனங்களில், கன்னிப்பெண்கள் 400 பேரை அந்த வீரர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்களை கானான் தேசத்தில் சீலோவிலிருந்த+ முகாமுக்குக் கொண்டுவந்தார்கள்.
13 பின்பு, இஸ்ரவேலர்கள் எல்லாரும் ரிம்மோன் மலைப்பாறையில் இருந்த பென்யமீனியர்களுக்குச்+ சமாதான செய்தியை அனுப்பினார்கள்.
14 பென்யமீனியர்கள் திரும்பி வந்தபோது, யாபேஸ்-கீலேயாத்திலிருந்து பிடித்து வந்திருந்த பெண்களை+ அவர்களுக்குக் கொடுத்தார்கள். ஆனால், போதுமான பெண்கள் இருக்கவில்லை.
15 பென்யமீனியர்களை நினைத்து ஜனங்கள் வருத்தப்பட்டார்கள்.+ ஏனென்றால், இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் பென்யமீன் கோத்திரத்துக்கும் இடையில் யெகோவா பிரிவினை உண்டாக்கியிருந்தார்.
16 அதனால் இஸ்ரவேலின் பெரியோர்கள்,* “பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் எல்லாரும் கொல்லப்பட்டதால் மீதியிருக்கிற பென்யமீன் ஆட்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.
17 பின்பு, “பென்யமீனியர்களில் மீதியிருக்கிற ஆண்களுக்கு வாரிசு* வேண்டும். அப்போதுதான் இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாமல் இருக்கும்.
18 ஆனால், ‘பென்யமீனியர்களுக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று நாம் உறுதிமொழி எடுத்திருப்பதால்+ நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுக்க முடியாதே” என்றார்கள்.
19 பின்பு, “பெத்தேலுக்கு வடக்கேயும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகும் நெடுஞ்சாலையின் கிழக்கேயும் லிபோனாவுக்குத் தெற்கேயும் இருக்கிற சீலோவில்+ வருஷா வருஷம் யெகோவாவுக்குப் பண்டிகை நடக்கிறதே” என்று சொல்லி,
20 பென்யமீன் ஆண்களிடம், “நீங்கள் போய் திராட்சைத் தோட்டங்களில் பதுங்கியிருங்கள்.
21 சீலோவிலுள்ள இளம் பெண்கள் நடனமாட* வருவார்கள். அப்போது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வந்து ஒவ்வொருவரும் ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு பென்யமீன் தேசத்துக்குத் திரும்பிப் போங்கள்.
22 அவர்களுடைய அப்பாக்களோ சகோதரர்களோ எங்களிடம் வந்து முறையிட்டால், நாங்கள் அவர்களிடம், ‘தயவுசெய்து கொஞ்சம் பெரியமனதுபண்ணுங்கள். போருக்குப் போய்ப் பிடித்து வந்தும் எங்களால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெண்ணைக் கொடுக்க முடியவில்லை.+ நீங்களாகவே அவர்களுக்குப் பெண் கொடுத்தாலும் அது குற்றமாகிவிடும்’+ என்று சொல்லிவிடுகிறோம்” என்றார்கள்.
23 அவர்கள் சொன்னபடியே பென்யமீன் ஆண்கள் செய்தார்கள். நடனமாடிக்கொண்டிருந்த பெண்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனார்கள். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்குப் போய், நகரங்களைத் திரும்பவும் கட்டி,+ அங்கே குடியிருந்தார்கள்.
24 இஸ்ரவேலர்கள் அங்கிருந்து பிரிந்து அவரவர் கோத்திரத்தாரிடமும் குடும்பத்தாரிடமும் திரும்பிப்போய், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் குடியிருந்தார்கள்.
25 அந்தக் காலத்தில், இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லை.+ அதனால் அவரவர் இஷ்டப்படி நடந்துவந்தார்கள்.