நியாயாதிபதிகள் 6:1-40

6  ஆனால், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ அதனால், யெகோவா அவர்களை ஏழு வருஷங்களுக்கு மீதியானியர்களின் கையில் கொடுத்துவிட்டார்.+  மீதியானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினார்கள்.+ இஸ்ரவேலர்கள் மீதியானியர்களுக்குப் பயந்து மலைகளிலும், குகைகளிலும், யாரும் நெருங்க முடியாத பகுதிகளிலும் பதுங்குவதற்கான இடங்களை* அமைத்தார்கள்.+  இஸ்ரவேலர்கள் விதை விதைத்தபோதெல்லாம், மீதியானியர்களும் அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும்+ அவர்களைத் தாக்கினார்கள்.  அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக முகாம்போட்டு, காசா வரைக்கும் அவர்களுடைய விளைச்சலை நாசமாக்கினார்கள். இஸ்ரவேலர்கள் சாப்பிடுவதற்கு அவர்கள் எதையுமே விட்டுவைக்கவில்லை. ஆடு, மாடு, கழுதை என எல்லாவற்றையும் அழித்தார்கள்.+  ஏராளமான ஆட்கள் தங்களுடைய கால்நடைகளோடும் கூடாரங்களோடும் கணக்குவழக்கில்லாத ஒட்டகங்களோடும்+ வெட்டுக்கிளிகள்போல் திரண்டு வந்து+ எல்லாவற்றையும் அழித்தார்கள்.  இப்படி, மீதியானியர்களால் இஸ்ரவேலர்கள் வறுமையில் பயங்கரமாகக் கஷ்டப்பட்டார்கள். அதனால், யெகோவாவிடம் உதவிக்காகக் கெஞ்சினார்கள்.+  மீதியானியர்களின் கொடுமை தாங்காமல் இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கெஞ்சியபோது,+  யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர்களிடம் அந்தத் தீர்க்கதரிசி, “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், ‘எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+  எகிப்தியர்களிடமிருந்தும், உங்களை அடக்கி ஒடுக்கிய மற்ற எல்லா ஜனங்களிடமிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றினேன். உங்களுடைய எதிரிகளைத் துரத்திவிட்டு, அவர்களுடைய தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்.+ 10  அதோடு உங்களிடம், “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ நீங்கள் குடியிருக்கிற தேசத்திலுள்ள எமோரியர்களின் தெய்வங்களை நீங்கள் கும்பிடக் கூடாது”+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை’”+ என்றார். 11  பிற்பாடு ஒப்ராவில், அபியேசரின் வம்சத்தைச்+ சேர்ந்த யோவாசுக்குச் சொந்தமான பெரிய மரத்தின் அடியில் யெகோவாவின் தூதர் வந்து+ உட்கார்ந்திருந்தார். யோவாசின் மகன் கிதியோன்+ திராட்சரச ஆலையில் கோதுமையைக் கதிரடித்துக்கொண்டிருந்தார். மீதியானியர்கள் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அங்கே கதிரடித்துக்கொண்டிருந்தார். 12  அப்போது யெகோவாவின் தூதர் அவருக்கு முன்னால் வந்து, “மாவீரனே, யெகோவா உன்னோடு இருக்கிறார்”+ என்று சொன்னார். 13  அதற்கு கிதியோன், “என் எஜமானே, என்னை மன்னித்துவிடுங்கள். யெகோவா எங்களோடு இருந்தால், எங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?+ யெகோவா அற்புதங்கள் செய்து எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்ததாக+ எங்களுடைய முன்னோர்கள் சொன்னார்களே,+ அந்த அற்புதங்களெல்லாம் எங்கே? இப்போது யெகோவா எங்களைக் கைவிட்டுவிட்டாரே,+ மீதியானியர்களின் கையில் கொடுத்துவிட்டாரே” என்று சொன்னார். 14  அப்போது யெகோவா அவரைப் பார்த்து, “உனக்கு இருக்கிற பலத்தோடு நீ புறப்பட்டுப் போ. மீதியானியர்களின் கையிலிருந்து நீ இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவாய்.+ ஏனென்றால், நான்தான் உன்னை அனுப்புகிறேன்” என்று சொன்னார். 15  ஆனால் கிதியோன், “மன்னியுங்கள், யெகோவாவே. நான் எப்படி இஸ்ரவேலர்களைக் காப்பாற்ற முடியும்? மனாசே கோத்திரத்திலேயே என்னுடைய குடும்பம்தான் ரொம்பச் சாதாரண குடும்பம். என்னுடைய அப்பாவின் குடும்பத்திலேயே நான்தான் ரொம்ப அற்பமானவன்” என்று சொன்னார். 16  ஆனால் யெகோவா அவரிடம், “நான் உன்னோடு இருக்கிறேன்.+ ஒரே ஒரு ஆளை வெட்டிச் சாய்ப்பது போல மீதியானியர்களை ஒட்டுமொத்தமாக நீ வெட்டிச் சாய்ப்பாய்” என்று சொன்னார். 17  அப்போது கிதியோன் அவரிடம், “நான் உங்களுக்குப் பிரியமானவனாக இருந்தால், என்னிடம் பேசுவது நீங்கள்தான் என்பதற்கு ஒரு அடையாளம் காட்டுங்கள். 18  நான் உங்கள் முன்னால் காணிக்கையைக் கொண்டுவந்து வைக்கும்வரை தயவுசெய்து இங்கிருந்து போகாதீர்கள்”+ என்று சொன்னார். அதற்கு அவர், “நீ வரும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்று சொன்னார். 19  கிதியோன் உள்ளே போய் ஓர் ஆட்டுக்குட்டியை வெட்டி அதைச் சமைத்தார். பின்பு, ஒரு எப்பா அளவு* மாவை எடுத்து புளிப்பில்லாத ரொட்டிகள் சுட்டார்.+ அதன்பின், இறைச்சியை ஒரு கூடையிலும், அதன் சாறை ஒரு சட்டியிலும் எடுத்துக்கொண்டு வந்து அந்தப் பெரிய மரத்தின் அடியில் அவருக்கு முன்னால் வைத்தார். 20  அப்போது உண்மைக் கடவுளின் தூதர் அவரிடம், “இறைச்சியையும் புளிப்பில்லாத ரொட்டிகளையும் எடுத்து அங்கே இருக்கிற பெரிய பாறையில் வைத்து, அவற்றின் மேல் அந்தச் சாறை ஊற்று” என்று சொன்னார். கிதியோன் அப்படியே செய்தார். 21  பின்பு யெகோவாவின் தூதர் தன்னுடைய கையிலிருந்த தடியை நீட்டி, அதன் நுனியால் இறைச்சியையும் புளிப்பில்லாத ரொட்டிகளையும் தொட்டார். உடனே, அந்தப் பாறையிலிருந்து நெருப்பு வந்து இறைச்சியையும் புளிப்பில்லாத ரொட்டிகளையும் சுட்டெரித்தது.+ அப்போது, யெகோவாவின் தூதர் அவருடைய கண் முன்னாலிருந்து மறைந்தார். 22  அதனால், அவர் யெகோவாவின் தூதர் என்பதை கிதியோன் புரிந்துகொண்டார்.+ உடனே கிதியோன், “ஐயோ, யெகோவாவே! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நான் உங்களுடைய தூதரை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டேனே”+ என்று சொன்னார். 23  ஆனால் யெகோவா அவரிடம், “பயப்படாதே,+ நிம்மதியாக* இரு. நீ சாக மாட்டாய்” என்று சொன்னார். 24  அதனால், கிதியோன் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி, அதற்கு யெகோவா-ஷாலோம்*+ என்று பெயர் வைத்தார். அபியேசரின் வம்சத்தார் வாழ்கிற ஒப்ராவில் அது இன்றுவரை இருக்கிறது. 25  அன்றைக்கு ராத்திரி யெகோவா அவரிடம், “உன் அப்பா வைத்திருக்கிற காளைகளில், ஏழு வயது இளம் காளையை* எடுத்துக்கொள். உன் அப்பாவுக்குச் சொந்தமான பாகாலின் பலிபீடத்தை இடித்துப்போடு. அதற்குப் பக்கத்திலுள்ள பூஜைக் கம்பத்தை* வெட்டிப்போடு.+ 26  பின்பு, இந்தப் பாறையின் உச்சியில் கற்களை அடுக்கி வைத்து உன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலிபீடம் கட்டு. நீ வெட்டிப்போட்ட பூஜைக் கம்பத்தை* விறகுகளாக உடைத்து, அந்த இளம் காளையை* அவற்றின் மேல் தகன பலியாகச் செலுத்து” என்று சொன்னார். 27  கிதியோன் தன்னுடைய வேலைக்காரர்களில் 10 பேரைக் கூட்டிக்கொண்டு போய் யெகோவா சொன்னபடியே செய்தார். ஆனால், தன்னுடைய அப்பாவின் குடும்பத்தாருக்கும் நகரத்திலிருந்த ஆண்களுக்கும் மிகவும் பயந்ததால், அதைப் பகலில் செய்யாமல் ராத்திரியில் செய்தார். 28  அந்த நகரத்திலிருந்த ஆண்கள் அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்து பார்த்தபோது, பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்திலிருந்த பூஜைக் கம்பம்* வெட்டப்பட்டிருந்தது. புதிதாகக் கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் இளம் காளை* பலி செலுத்தப்பட்டிருந்தது. 29  “யார் இப்படிச் செய்தது?” என்று அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். பிறகு விசாரித்துவிட்டு, “யோவாசின் மகன் கிதியோன்தான் இப்படிச் செய்திருக்கிறான்” என்று சொல்லிக்கொண்டார்கள். 30  அப்போது, நகரத்திலிருந்த ஆண்கள் யோவாசிடம், “உன்னுடைய மகன் பாகாலின் பலிபீடத்தை இடித்துவிட்டு, பக்கத்திலிருந்த பூஜைக் கம்பத்தையும்* வெட்டியிருக்கிறான். அவனை வெளியே இழுத்துக் கொண்டுவா, அவனை நாங்கள் கொல்ல வேண்டும்” என்று சொன்னார்கள். 31  உடனே, யோவாஸ்+ அவர்கள் எல்லாரிடமும், “பாகாலுக்காக நீங்கள்தான் வாதாட வேண்டுமோ? பாகாலை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமோ? பாகாலுக்காக வாதாடுகிறவன் இன்று காலையிலேயே கொல்லப்பட வேண்டும்.+ பாகால் தெய்வமாக இருந்தால், அவனுடைய பலிபீடம் இடித்துப் போடப்பட்டதற்காக அவனே வாதாடட்டும்”+ என்று சொன்னார். 32  “பாகாலின் பலிபீடம் இடித்துப் போடப்பட்டதற்காக பாகாலே வாதாடட்டும்” என்று சொல்லி, கிதியோனுக்கு யெருபாகால்* என்று பெயர் வைத்தார். 33  மீதியானியர்களும்+ அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டு,+ ஆற்றைக் கடந்து யெஸ்ரயேல் பள்ளத்தாக்குக்கு வந்து, அங்கே முகாம்போட்டார்கள். 34  யெகோவாவின் சக்தி கிதியோனுக்குக் கிடைத்ததும்+ அவர் ஊதுகொம்பை ஊதினார்.+ அப்போது, அபியேசரின் வம்சத்தார்+ அவரிடம் திரண்டு வந்தார்கள். 35  பின்பு அவர், மனாசே கோத்திரத்தார் எல்லாரிடமும் தூதுவர்களை அனுப்பினார். அவர்களும் அவரிடம் திரண்டு வந்தார்கள். பிறகு ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரத்தாரிடமும் தூதுவர்களை அனுப்பினார். அவர்களும் புறப்பட்டு வந்து அவரைச் சந்தித்தார்கள். 36  அப்போது கிதியோன் உண்மைக் கடவுளிடம், “நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே+ என் மூலம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றப்போகிறீர்கள் என்றால், 37  இதோ, நான் ஒரு கம்பளித் தோலைக் களத்துமேட்டில் வைக்கிறேன். கம்பளித் தோலில் மட்டும் பனி பெய்து, தரை முழுவதும் காய்ந்திருந்தால், நீங்கள் வாக்குக் கொடுத்தபடி என் மூலம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வேன்” என்று சொன்னார். 38  அவர் கேட்டுக்கொண்டபடியே நடந்தது. அவர் அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்து, பனியில் நனைந்திருந்த கம்பளித் தோலைப் பிழிந்தார். அப்போது, ஒரு பெரிய பாத்திரம் நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து தண்ணீர் வந்தது. 39  ஆனாலும், கிதியோன் உண்மைக் கடவுளிடம், “தயவுசெய்து என்மேல் கோபப்படாதீர்கள். இன்னும் ஒரேவொரு தடவை மட்டும் கேட்கிறேன். கம்பளித் தோலால் சோதித்துப் பார்க்க இன்னும் ஒரு தடவை மட்டும் எனக்கு அனுமதி கொடுங்கள். தயவுசெய்து தரை முழுவதும் பனி பெய்து, கம்பளித் தோல் மட்டும் காய்ந்திருக்கும்படி செய்யுங்கள்” என்று சொன்னார். 40  அவர் கேட்டுக்கொண்டபடியே கடவுள் அன்றைக்கு ராத்திரியும் செய்தார். தரை முழுவதும் பனி பெய்திருந்தது, கம்பளித் தோல் மட்டும் காய்ந்திருந்தது.

அடிக்குறிப்புகள்

அல்லது, “நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளை.”
அதாவது, “சுமார் 10 கிலோ.”
வே.வா., “சமாதானமாக.”
அர்த்தம், “யெகோவா சமாதானமானவர்.”
நே.மொ., “இரண்டாவது இளம் காளையை.”
நே.மொ., “இரண்டாவது இளம் காளையை.”
நே.மொ., “இரண்டாவது இளம் காளை.”
அர்த்தம், “பாகால் வாதாடட்டும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா