நியாயாதிபதிகள் 8:1-35

8  அப்போது எப்பிராயீம் வீரர்கள் அவரிடம், “மீதியானியர்களோடு போர் செய்யப் போனபோது ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டு, அவரோடு பயங்கரமாக வாக்குவாதம் செய்தார்கள்.+  ஆனால் அவர் அவர்களிடம், “உங்களைப் போல நான் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. அபியேசரின் வம்சத்தாராகிய+ எங்களைவிட எப்பிராயீமின் வம்சத்தாராகிய நீங்கள்தான் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர்கள்!*+  மீதியானின் அதிகாரிகளான ஒரேபையும் சேபையும் கடவுள் உங்கள் கையில்தானே கொடுத்தார்.+ உங்களைப் போல நான் பெரிதாக எதையும் செய்யவில்லை” என்று சொன்னார். அவர் இப்படிப் பேசியதால், அவர்களுடைய கோபம் தணிந்தது.  பின்பு கிதியோன், யோர்தான் ஆற்றுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த 300 வீரர்களும் களைத்துப்போயிருந்தார்கள். ஆனாலும், விடாமல் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போனார்கள்.  அதனால், அவர் சுக்கோத்தைச் சேர்ந்த பெரியோர்களிடம்,* “என்னோடு இருப்பவர்களுக்குத் தயவுசெய்து ரொட்டி கொடுங்கள், அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள். இப்போது நாங்கள் மீதியானிய ராஜாக்களான செபாவையும் சல்முனாவையும் துரத்திக்கொண்டு போகிறோம்” என்றார்.  ஆனால் சுக்கோத்தின் அதிகாரிகள், “நீ என்னமோ செபாவையும் சல்முனாவையும் ஏற்கெனவே பிடித்துவிட்ட மாதிரி உன் வீரர்களுக்கு ரொட்டி கேட்கிறாயே” என்றார்கள்.  அதற்கு கிதியோன், “இப்படியா பேசுகிறீர்கள்? செபாவையும் சல்முனாவையும் யெகோவா என் கையில் கொடுக்கும்போது, வனாந்தரத்திலுள்ள முட்களாலும் நெருஞ்சிகளாலும் உங்கள் தோலை எப்படிக் கிழிக்கப்போகிறேன் என்று பாருங்கள்”+ என்றார்.  பின்பு அங்கிருந்து பெனூவேலுக்குப் போய், அந்த ஜனங்களிடமும் அதேபோல் கேட்டார். சுக்கோத்தில் இருந்த ஆட்கள் சொன்னது போலவே பெனூவேலில் இருந்த ஆட்களும் சொன்னார்கள்.  அப்போது அவர் பெனூவேலில் இருந்த ஆட்களிடம், “நான் வெற்றியோடு திரும்பி வரும்போது இந்தக் கோட்டையை* இடித்துப் போடுவேன்” என்று சொன்னார்.+ 10  அப்போது செபாவும் சல்முனாவும் கிட்டத்தட்ட 15,000 படைவீரர்களோடு கர்கோரில் இருந்தார்கள். கிழக்கத்தியர்களின் படையில்+ இவர்கள் மட்டும்தான் மீதியாக இருந்தார்கள். ஏனென்றால், வாளேந்திய வீரர்களில் 1,20,000 பேர் ஏற்கெனவே கொல்லப்பட்டிருந்தார்கள். 11  கிதியோன், நாடோடிகள் வாழ்கிற இடத்தின் வழியாக நோபாக்குக்கும் யொகிபேயாவுக்கும்+ கிழக்கே தொடர்ந்து போய், அந்தப் படைமேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார். 12  மீதியானிய ராஜாக்களாகிய செபாவும் சல்முனாவும் தப்பித்து ஓடியபோது, அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப் பிடித்து, படையிலிருந்த எல்லாரையும் பீதியடைய வைத்தார். 13  பின்பு, யோவாசின் மகன் கிதியோன் போரை முடித்துவிட்டு எரேசுக்குப் போகும் கணவாய்* வழியாகத் திரும்பினார். 14  வழியில் சுக்கோத்தைச் சேர்ந்த ஒரு வாலிபனைப் பிடித்து விசாரித்தார். அப்போது அவன் சுக்கோத்திலிருந்த அதிகாரிகள், பெரியோர்கள் என 77 ஆட்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தான். 15  உடனே அவர் சுக்கோத்திலிருந்த ஆட்களிடம் போய், “‘நீ என்னமோ செபாவையும் சல்முனாவையும் ஏற்கெனவே பிடித்துவிட்ட மாதிரி உன் வீரர்களுக்கு ரொட்டி கேட்கிறாயே’ என்று சொல்லி என்னைக் கேலி செய்தீர்களே,+ இதோ அந்த செபாவையும் சல்முனாவையும் பாருங்கள்” என்றார். 16  பின்பு, அந்த நகரத்தின் பெரியோர்களைப் பிடித்து, வனாந்தரத்திலுள்ள முட்களாலும் நெருஞ்சிகளாலும் அவர்களுடைய தோலைக் கிழித்தார். இப்படி, சுக்கோத்தின் ஆட்களுக்குப் பாடம் புகட்டினார்.+ 17  அதன்பின் பெனூவேலில் இருந்த கோட்டையை இடித்துப்போட்டு,+ அந்த நகரத்திலிருந்த ஆண்களைக் கொன்றுபோட்டார். 18  அவர் செபாவிடமும் சல்முனாவிடமும், “தாபோரில் நீங்கள் கொன்றுபோட்ட ஆண்கள் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எல்லாரும் உன்னைப் போலவே ஒரு இளவரசன் மாதிரி இருந்தார்கள்” என்று சொன்னார்கள். 19  அப்போது அவர், “அவர்கள் என் சகோதரர்கள், என் அம்மா வயிற்றில் பிறந்தவர்கள். உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால், நானும் இப்போது உங்களை உயிரோடு விட்டிருப்பேன்” என்றார். 20  பின்பு தன்னுடைய மூத்த மகனாகிய யெத்தேரிடம், “இவர்களைக் கொன்றுபோடு” என்று சொன்னார். ஆனால், அவன் இளம் வாலிபனாக இருந்ததால் வாளை உருவ பயப்பட்டான். 21  அப்போது செபாவும் சல்முனாவும் கிதியோனிடம், “துணிச்சல் இருந்தால்,* நீயே எழுந்து வந்து எங்களைக் கொன்றுபோடு” என்று சொன்னார்கள். உடனே கிதியோன் எழுந்து போய் செபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டார்.+ பின்பு, அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த பிறை வடிவ ஆபரணங்களை எடுத்துக்கொண்டார். 22  அதன்பின், இஸ்ரவேல் ஆண்கள் கிதியோனிடம் வந்து, “மீதியானியர்களின் கையிலிருந்து நீங்கள் எங்களைக் காப்பாற்றியதால்,+ நீங்களும் உங்கள் மகனும் பேரனும்தான் எங்களை ஆட்சி செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். 23  ஆனால் கிதியோன், “நானும் உங்களை ஆட்சி செய்ய மாட்டேன், என்னுடைய மகனும் உங்களை ஆட்சி செய்ய மாட்டான். யெகோவாதான் உங்களை ஆட்சி செய்வார்”+ என்று சொன்னார். 24  அதோடு, “நான் உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். நீங்கள் கைப்பற்றிய பொருள்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு மூக்குவளையத்தைக் கொடுங்கள்” என்றார். ஏனென்றால், தங்கத்தில் மூக்குவளையம் போட்டுக்கொள்வது இஸ்மவேலர்களின்+ வழக்கமாக இருந்தது. 25  அதற்கு அவர்கள், “கண்டிப்பாகக் கொடுப்போம்” என்று சொன்னார்கள். பின்பு ஓர் அங்கியை விரித்து, தாங்கள் கைப்பற்றிய பொருள்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு மூக்குவளையத்தை அதில் போட்டார்கள். 26  அவர் கேட்டு வாங்கிய அந்தத் தங்க மூக்குவளையங்களின் எடை 1,700 தங்கச் சேக்கலாக* இருந்தது. அதைத் தவிர, பிறை வடிவ ஆபரணங்கள், பதக்கங்கள், மீதியானிய ராஜாக்களின் ஊதா நிற கம்பளி உடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்திலிருந்த அணிகலன்கள்+ ஆகியவற்றையும் அந்த ஆட்கள் கொடுத்தார்கள். 27  அவர்கள் கொடுத்த தங்கத்தை வைத்து கிதியோன் ஓர் ஏபோத்தைச் செய்து,+ அதைத் தன்னுடைய நகரமாகிய ஒப்ராவில்+ வைத்தார். ஆனால் இஸ்ரவேலர்கள் எல்லாரும் அதை வணங்கி, கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ அந்த ஏபோத் கிதியோனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் கண்ணியாக ஆனது.+ 28  இப்படி, மீதியானியர்களை+ இஸ்ரவேலர்கள் அடக்கிவிட்டார்கள். அதன்பின், அவர்கள் இஸ்ரவேலர்களோடு போர் செய்ய வரவில்லை. கிதியோனின் காலத்தில் 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+ 29  யோவாசின் மகன் யெருபாகால்+ தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போய், அங்கேயே வாழ்ந்துவந்தார். 30  கிதியோனுக்கு நிறைய மனைவிகளும் 70 மகன்களும் இருந்தார்கள். 31  சீகேமிலிருந்த அவருடைய மறுமனைவிக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அபிமெலேக்கு+ என்று கிதியோன் பெயர் வைத்தார். 32  யோவாசின் மகனாகிய கிதியோன் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்தபின் இறந்துபோனார். அபியேசரின் வம்சத்தார் வாழ்ந்த ஒப்ராவில்,+ தன்னுடைய அப்பா யோவாசின் கல்லறையில் கிதியோன் அடக்கம் செய்யப்பட்டார். 33  கிதியோன் இறந்த உடனேயே, இஸ்ரவேலர்கள் மறுபடியும் பாகால்களை வணங்கி கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ பாகால்-பேரீத்தைத் தங்களுடைய தெய்வமாக வைத்துக்கொண்டார்கள்.+ 34  சுற்றியிருந்த எதிரிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றிய+ அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவை மறந்துவிட்டார்கள்.+ 35  அவர்களுக்காக யெருபாகால் என்ற கிதியோன் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவருடைய குடும்பத்தாருக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கவில்லை.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அபியேசர் அறுவடை செய்த திராட்சைகளைவிட எப்பிராயீம் எடுத்துக்கொண்ட மீதியான திராட்சைகள் சிறந்தவை அல்லவா?”
வே.வா., “மூப்பர்களிடம்.”
வே.வா., “கோபுரத்தை.”
கணவாய் என்பது இரண்டு மலைகளுக்கு இடையில் இயற்கையாக அமைந்துள்ள பாதை.
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நீ சரியான ஆண்மகன் என்றால்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா