நீதிமொழிகள் 13:1-25
13 ஞானமுள்ள மகன் தன்னுடைய அப்பாவின் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறான்.+ஆனால், கேலி செய்கிறவன் எச்சரிப்பை* காதில் வாங்குவது இல்லை.+
2 நல்ல வார்த்தைகளைப் பேசுகிறவன் நல்ல பலனை அனுபவிப்பான்.+ஆனால், துரோகியின் மனம் வன்முறையில் இறங்கவே ஆசைப்படும்.
3 தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+
4 சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை.+ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.*+
5 நீதிமான் பொய்களை வெறுக்கிறான்.+ஆனால், பொல்லாதவனின் செயல்கள் அவமானத்தையும் தலைகுனிவையும் கொண்டுவருகின்றன.
6 நேர்மையாக நடக்கிறவனை நீதி பாதுகாக்கிறது.+ஆனால், பாவியை அக்கிரமம் அழித்துவிடுகிறது.
7 ஒன்றுமே இல்லாவிட்டாலும் பணக்காரன்போல் காட்டிக்கொள்கிறவன் உண்டு.+ஏராளமாக இருந்தாலும் ஏழைபோல் காட்டிக்கொள்கிறவனும் உண்டு.
8 பணக்காரன் பணம் கொடுத்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறான்.+ஆனால், ஏழைக்கு மிரட்டல்கூட வருவதில்லை.+
9 நீதிமானின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசும்.+ஆனால், பொல்லாதவனின் விளக்கு அணைக்கப்படும்.+
10 அகங்காரமாக* நடப்பது சண்டையில்தான் கொண்டுபோய் விடும்.+ஆனால், ஆலோசனை கேட்கிறவர்களிடம்* ஞானம் இருக்கும்.+
11 திடீர்ப் பணக்காரனின் சொத்துகள் கரைந்துபோகும்.+ஆனால், சிறுகச் சிறுகச் சேர்க்கிறவனின் சொத்துகள் பெருகும்.
12 எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்.+ஆனால், ஆசை நிறைவேறும்போது அது வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கும்.+
13 அறிவுரையை அலட்சியம் செய்கிறவன் அதன் விளைவுகளை அனுபவிப்பான்.+ஆனால், கட்டளையை மதித்து நடக்கிறவன் பலன் பெறுவான்.+
14 ஞானமுள்ளவனின் போதனை* வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.+மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது.
15 மிகுந்த விவேகத்தோடு நடந்துகொண்டால் மற்றவர்களின் பிரியத்தைச் சம்பாதிக்கலாம்.ஆனால், துரோகிகளின் பாதை கரடுமுரடாக இருக்கிறது.
16 சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான்.+ஆனால், முட்டாள் தன் முட்டாள்தனத்தைக் காட்டிவிடுகிறான்.+
17 பொல்லாத தூதுவன் பிரச்சினைகளைக் கொண்டுவருகிறான்.+ஆனால், உண்மையுள்ள தூதுவன் நன்மைகளைக் கொண்டுவருகிறான்.+
18 புத்திமதியை ஒதுக்கித்தள்ளுகிறவனுக்கு வறுமையும் அவமானமும்தான் மிஞ்சும்.ஆனால், கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறவனுக்கு மதிப்புக் கிடைக்கும்.+
19 ஆசை நிறைவேறுவது இதயத்துக்கு இனிதாக இருக்கிறது.+ஆனால், தவறான பாதையைவிட்டு விலகுவது முட்டாளுக்கு வெறுப்பாக இருக்கிறது.+
20 ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.+ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.+
21 பாவிகளைத் துன்பம் துரத்திக்கொண்டே இருக்கும்.+ஆனால், நீதிமான்களுக்குக் கிடைக்கும் பலன் வளமான வாழ்வு.+
22 நல்லவன் தன் பேரப்பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுச்செல்கிறான்.ஆனால், பாவியின் சொத்துகள் நீதிமானுக்காகச் சேர்த்து வைக்கப்படும்.+
23 ஏழையின் வயல் நன்றாக விளையும்.ஆனால், அநியாயத்தின் காரணமாக அது* வாரிக்கொண்டு போகப்படலாம்.
24 பிரம்பைக் கையில் எடுக்காதவன்* தன் மகனை வெறுக்கிறான்.+ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு* கண்டித்துத் திருத்துகிறான்.+
25 நீதிமான் வயிறார சாப்பிடுகிறான்.+ஆனால், பொல்லாதவனின் வயிறு காய்ந்து கிடக்கிறது.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “தான் கண்டிக்கப்படுவதை.”
^ நே.மொ., “உழைப்பவன் புஷ்டியாவான்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
^ வே.வா., “ஒன்றுகூடி ஆலோசனை செய்கிறவர்களிடம்.”
^ வே.வா., “சட்டம்.”
^ வே.வா., “அவன்.”
^ வே.வா., “கண்டித்துத் திருத்தாதவன்; தண்டிக்காதவன்.”
^ அல்லது, “உடனடியாக.”