நீதிமொழிகள் 31:1-31
31 லேமுவேல் ராஜாவின் வார்த்தைகள்; அவருடைய அம்மா அவருக்குச் சொன்ன முக்கியமான அறிவுரைகள்:+
2 என் மகனே, என் வயிற்றில் பிறந்தவனே,என் நேர்த்திக்கடன்களின் பலனாகக் கிடைத்த மகனே,+நான் உனக்கு என்ன சொல்வேன்?
3 உன்னுடைய வீரியத்தைப் பெண்களிடம் வீணடிக்காதே.+ராஜாக்களை அழிவுக்குக் கொண்டுபோகிற வழிகளில் போகாதே.+
4 திராட்சமது குடிப்பது ராஜாக்களுக்கு நல்லதல்ல.லேமுவேலே, அது ராஜாக்களுக்கு நல்லதல்ல.“மதுபானம் எங்கே?” என்று கேட்பதும் அரசர்களுக்கு அழகல்ல.+
5 குடித்தால் அவர்கள் சட்டத்தை மறந்துவிடுவார்கள்,எளியவர்களின் உரிமைகளைப் பறித்துவிடுவார்கள்.
6 சாகப்போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடுங்கள்.+கடும் வேதனையில் இருப்பவர்களுக்குத் திராட்சமதுவை ஊற்றிக் கொடுங்கள்.+
7 அவர்கள் குடித்துவிட்டுத் தங்கள் வறுமையை மறக்கட்டும்;தங்கள் கவலைகளை நினைக்காமல் இருக்கட்டும்.
8 வாய் பேசாதவர்களுக்காக நீ பேசு.சாவின் விளிம்பில் இருக்கிறவர்களுடைய உரிமைகளுக்காகப் பாடுபடு.+
9 தயங்காமல் பேசு, நீதி வழங்கு.ஏழை எளியவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடு.*+
א [ஆலெஃப்]
10 திறமைசாலியான* மனைவியை யாரால் கண்டுபிடிக்க முடியும்?+
அவளுடைய மதிப்பு பவளங்களைவிட* மிக உயர்ந்தது.
ב [பேத்]
11 அவளுடைய கணவன் அவளை நெஞ்சார நம்புகிறான்.அருமையான எதுவும் அவனுக்குக் கிடைக்காமல் போவதில்லை.
ג [கீமெல்]
12 வாழ்நாள் முழுக்க அவள் அவனுக்கு நல்லதையே செய்கிறாள்.அவனுக்குக் கஷ்டம் கொடுப்பதே இல்லை.
ד [டாலத்]
13 கம்பளி நூலையும் நாரிழையையும்* அவள் சேகரிக்கிறாள்.தன் கைகளால் உற்சாகமாக வேலை செய்கிறாள்.+
ה [ஹே]
14 வியாபாரியின் கப்பல்களைப்+ போல அவள் இருக்கிறாள்.வெகு தூரத்திலிருந்து உணவுப் பொருள்களைக் கொண்டுவருகிறாள்.
ו [வா]
15 விடிவதற்கு முன்பே எழுந்துவிடுகிறாள்.வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கிறாள்.வேலைக்காரிகளுக்கு அவர்களுடைய பங்கைத் தருகிறாள்.+
ז [ஸாயின்]
16 கவனமாக யோசித்துப் பார்த்த பிறகு ஒரு வயலை வாங்குகிறாள்.தன் சம்பாத்தியத்தை வைத்து திராட்சைத் தோட்டம் போடுகிறாள்.
ח [ஹேத்]
17 கடினமாக உழைக்கத் தன்னைத் தயாராக்குகிறாள்.+தன் கையால் பாடுபட்டு வேலை செய்கிறாள்.
ט [டேத்]
18 வியாபாரத்தை லாபகரமாக நடத்துகிறாள்.ராத்திரியில்கூட அவளுடைய விளக்கு அணைவதில்லை.
י [யோத்]
19 நூற்புக் கோலையும் நூற்புக் கதிரையும்* பிடித்துதுணி நெய்கிறாள்.+
כ [காஃப்]
20 எளியவர்களுக்குக் கைகொடுக்கிறாள்.ஏழைகளுக்கு வாரி வழங்குகிறாள்.+
ל [லாமெத்]
21 பனிக்காலத்தில் தன்னுடைய குடும்பத்தாரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாள்.ஏனென்றால், அவர்கள் எல்லாரும் கதகதப்பான* உடைகளைப் போட்டிருக்கிறார்கள்.
מ [மேம்]
22 தன் படுக்கை விரிப்புகளை அவளே நெய்கிறாள்.
நாரிழையிலும் ஊதா நிற கம்பளி நூலிலும் நெய்த உடையை உடுத்தியிருக்கிறாள்.
נ [நூன்]
23 அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்.+ஊர்ப் பெரியோர்களோடு* சேர்ந்து உட்கார்ந்திருப்பவன்.
ס [சாமெக்]
24 அவள் நாரிழையில் உடைகளை* நெய்து விற்கிறாள்.இடுப்புவார்களை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
ע [ஆயின்]
25 பலத்தையும் அழகையும் ஆடைபோல் அணிந்திருக்கிறாள்.எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறாள்.
פ [பே]
26 அவளுடைய வாய் ஞானத்தை உதிர்க்கிறது.+அவளுடைய நாவில் அன்பின் சட்டம்* இருக்கிறது.
צ [சாதே]
27 வீட்டுக் காரியங்களைக் கண்ணும்கருத்துமாக அவள் கவனித்துக்கொள்கிறாள்.சோம்பேறித்தனம் என்பதே அவளிடம் கிடையாது.+
ק [கோஃப்]
28 அவளுடைய பிள்ளைகள் எழுந்து நின்று அவளைப் புகழ்கிறார்கள்.அவளுடைய கணவனும் எழுந்து நின்று அவளைப் பாராட்டுகிறான்.
ר [ரேஷ்]
29 “திறமைசாலியான* பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,ஆனால், நீதான் அவர்கள் எல்லாரையும்விட அருமையானவள்!”
ש [ஷீன்]
30 வசீகரம் பொய்யானது, அழகும் வீணானது,*+ஆனால், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்தான் புகழப்படுவாள்.+
ת [ட்டா]
31 அவள் செய்கிற எல்லாவற்றுக்கும் வெகுமதி கொடுங்கள்.+அவற்றைப் பற்றி நகரவாசல்களில் புகழ்ந்து பேசுங்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “ஏழை எளியவர்களுக்காக வாதாடு.”
^ வே.வா., “அருமையான.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ அதாவது, “லினனையும்.”
^ துணி நெய்ய இவை பயன்படுத்தப்பட்டன.
^ நே.மொ., “இரண்டு.”
^ வே.வா., “மூப்பர்களோடு.”
^ வே.வா., “உள்ளாடைகளை.”
^ வே.வா., “அன்பான போதனை; மாறாத அன்பின் சட்டம்.”
^ வே.வா., “அருமையான.”
^ வே.வா., “சீக்கிரத்தில் மறைந்துபோகலாம்.”