நீதிமொழிகள் 5:1-23
5 என் மகனே, நான் சொல்கிற ஞானமான வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.
பகுத்தறிவை நான் போதிக்கும்போது கவனமாகக் கேள்.+
2 அப்போது, யோசிக்கும் திறனை நீ பாதுகாத்துக்கொள்வாய்.உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.+
3 நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+
4 ஆனால், அவளுடைய சகவாசம் முடிவில் எட்டியை* போலக் கசக்கும்.+இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கும் வாளைப் போலக் குத்தும்.+
5 அவளுடைய கால் சவக்குழிக்குள் இறங்கும்.
அவளுடைய காலடிகள் நேராகக் கல்லறைக்குப் போகும்.
6 வாழ்வின் பாதையைப் பற்றி அவள் யோசிப்பதே இல்லை.
எங்கு போகிறாள் என்றே தெரியாமல் மனம்போன போக்கில் போகிறாள்.
7 என் மகன்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.என் வார்த்தைகளைவிட்டு விலகாதீர்கள்.
8 மகனே, அவளைவிட்டு நீ தூரமாக விலகியிரு.அவளுடைய வீட்டு வாசல் பக்கம்கூட போகாதே.+
9 அப்போதுதான், உன் பெயரைக் கெடுத்துக்கொள்ள மாட்டாய்.+வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட மாட்டாய்.+
10 இல்லையென்றால், உன் சொத்துகளை முன்பின் தெரியாதவர்கள் சுரண்டிக்கொள்வார்கள்.+நீ கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததெல்லாம் அன்னியர்களின் வீட்டுக்குப் போய்விடும்.
11 உன் வாழ்க்கையின் முடிவிலே உன் பலம் குறைந்து,உன் உடல் உருக்குலையும்போது நீ வேதனையில் முனகுவாய்.+
12 அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே!
கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே!
13 என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே!
14 இப்போது என் வாழ்க்கையே நாசமாய்ப் போய்விட்டதே.முழு சபைக்கும் முன்னால் தலைகுனியும் நிலைமை வந்துவிட்டதே!”+ என்று புலம்புவாய்.
15 உன் தொட்டியில் இருக்கும் தண்ணீரை மட்டும் குடி.உன் கிணற்றில் ஊறும் தண்ணீரை மட்டும் குடி.+
16 உன் நீரூற்றுகள் ஏன் வெளியே பாய்ந்தோட வேண்டும்?உன் நீரோடைகள் ஏன் பொது சதுக்கங்களில் வழிந்தோட வேண்டும்?+
17 அவை உனக்கு மட்டும்தான் சொந்தம்.முன்பின் தெரியாதவர்களோடு அவற்றைப் பங்குபோட்டுக்கொள்ளாதே.+
18 உன்னுடைய நீரூற்றே உனக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு.+
19 அவள் பாசமான ஒரு பெண் மான், அழகான வரையாடு.+அவளுடைய மார்புகள் எப்போதும் உன்னை மகிழ்விக்கட்டும்.அவளுடைய அன்பில் நீ எப்போதும் மயங்கியிரு.+
20 என் மகனே, நடத்தைகெட்ட பெண்ணிடம் நீ ஏன் மயங்க வேண்டும்?ஒழுக்கங்கெட்ட பெண்ணின் மார்பை ஏன் தழுவ வேண்டும்?+
21 மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கின்றன.அவனுடைய பாதைகளையெல்லாம் அவர் ஆராய்கிறார்.+
22 பொல்லாதவன் செய்கிற குற்றங்களே அவனைக் கண்ணிபோல் பிடித்துக்கொள்ளும்.அவன் செய்கிற பாவங்களே அவனைக் கயிறுபோல் இறுகச் சுற்றிக்கொள்ளும்.+
23 அவன் புத்திமதியைக் கேட்காததால் செத்துப்போவான்.அடிமுட்டாளாக இருப்பதால் வழிதவறிப் போவான்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “உதடுகள்.”
^ நே.மொ., “வாய்.”
^ மூலமொழியில், பாலஸ்தீனாவில் வளரும் ஒரு கசப்பான செடி குறிப்பிடப்பட்டுள்ளது.