நீதிமொழிகள் 8:1-36
8 ஞானம் சத்தமாக அழைக்கிறது, அல்லவா?
பகுத்தறிவு உரத்த குரலில் கூப்பிடுகிறது, அல்லவா?+
2 அது சாலையோரமாக உள்ள உயரமான இடங்களிலும்,+சாலை சந்திப்புகளிலும் நின்று அழைக்கிறது.
3 நகரவாசல்களின் பக்கத்திலும் நுழைவாசல்களிலும் நின்று,சத்தமாக இப்படிக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது:+
4 “ஜனங்களே, உங்களைத்தான் சத்தமாக அழைக்கிறேன்.எல்லாரையும் உரத்த குரலில் கூப்பிடுகிறேன்.
5 அனுபவமில்லாதவர்களே, சாமர்த்தியமாக நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.+அறிவில்லாதவர்களே, புரிந்துகொள்ளும் இதயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
6 கேளுங்கள், நான் முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.என் உதடுகள் சரியானதையே பேசுகின்றன.
7 என் வாய் உண்மையைத்தான் பேசுகிறது.என் உதடுகள் கெட்ட விஷயங்களை அருவருக்கின்றன.
8 என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே நீதியானவை.
அவை பொய்யும் புரட்டும் இல்லாதவை.
9 அவையெல்லாம் பகுத்தறிவு உள்ளவர்களுக்குச் சட்டென்று புரியும்.அறிவை அடைந்தவர்களுக்குச் சரியாகத் தோன்றும்.
10 வெள்ளிக்குப் பதிலாக என் புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.சொக்கத்தங்கத்துக்குப் பதிலாக அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.+
11 ஏனென்றால், ஞானம் பவளங்களைவிட* சிறந்தது.வேறெந்தப் பொக்கிஷமும் அதற்கு ஈடாகாது.
12 நான்தான் ஞானம், நான் சாமர்த்தியத்தோடு குடியிருக்கிறேன்.நான் அறிவையும் யோசிக்கும் திறனையும் பெற்றிருக்கிறேன்.+
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+
அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+
அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
14 நல்ல ஆலோசனையும் ஞானமும்* என்னிடம் இருக்கின்றன.+புரிந்துகொள்ளும் திறனும்+ பலமும்+ எனக்குச் சொந்தமானவை.
15 என்னாலேயே ராஜாக்கள் ஆட்சி செய்துவருகிறார்கள்,உயர் அதிகாரிகள் நீதியான சட்டங்களைக் கொடுக்கிறார்கள்.+
16 என்னாலேயே அதிபதிகள் ஆட்சி செய்துவருகிறார்கள்,தலைவர்கள் நீதியான தீர்ப்பு சொல்கிறார்கள்.
17 என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்.என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.+
18 செல்வமும் மகிமையும் என்னிடம் இருக்கின்றன.அழியாத சொத்தும்* நீதியும் என்னிடம் இருக்கின்றன.
19 நான் தரும் பலன் தங்கத்தைவிடவும் சொக்கத்தங்கத்தைவிடவும் மேலானது.என்னால் கிடைக்கும் பலன் சுத்தமான வெள்ளியைவிட அருமையானது.+
20 நான் நீதியான வழியில் நடக்கிறேன்.நியாயமான பாதையின் நடுவிலேயே நடக்கிறேன்.
21 என்னை நேசிக்கிறவர்களுக்கு விலைமதிப்புள்ள சொத்துகளைக் கொடுக்கிறேன்.அவர்களுடைய சேமிப்புக் கிடங்குகளை நிரப்புகிறேன்.
22 யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார்.+படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.+
23 ஆரம்பத்திலேயே, பூமி படைக்கப்படுவதற்கு முன்பே,+எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பே நான் ஏற்படுத்தப்பட்டேன்.+
24 ஆழ்கடல்கள் எதுவும் இல்லாத காலத்தில்+ நான் உண்டாக்கப்பட்டேன்.*பொங்கி வரும் நீரூற்றுகள் இல்லாத சமயத்தில் உருவாக்கப்பட்டேன்.
25 மலைகள் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்டேன்.குன்றுகள் உண்டாக்கப்படுவதற்கு முன்னால் உயிர்பெற்றேன்.
26 அவர் பூமியையும் அதன் வயல்வெளிகளையும்,பூமியின் முதல் மண்கட்டிகளையும் உருவாக்குவதற்கு முன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
27 அவர் வானத்தைப் படைத்தபோது+ நான் இருந்தேன்.அவர் நீர்ப்பரப்புக்கு மேலாக அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோதும்,+
28 மேகங்களை வானத்தில் நிலைநிறுத்தியபோதும்,ஆழத்திலுள்ள ஊற்றுகளை உருவாக்கியபோதும்,
29 அவர் கடலுக்கு எல்லை வகுத்து,அதைத் தாண்டக் கூடாது என்று அதன் தண்ணீருக்கு உத்தரவு போட்டபோதும்,+பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோதும்,
30 நான் அவருக்குப் பக்கத்தில் கைதேர்ந்த கலைஞனாக இருந்தேன்.+
நித்தமும் நான் அவருக்குச் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.+அவர்முன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்.+
31 மனுஷர்களுக்காக அவர் படைத்த பூமியைப் பார்த்தபோது எனக்குச் சந்தோஷமாக இருந்தது.நான் மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தேன்.
32 என் மகன்களே, இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்.எப்போதும் என் வழியில் நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.
33 புத்திமதியைக் கேட்டு,+ ஞானம் அடையுங்கள்.அதை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்.
34 தினமும் விடியற்காலையில் என் வீட்டு வாசலுக்கு வந்து,*என் கதவுக்குப் பக்கத்தில் காத்திருந்து,நான் சொல்வதைக் கேட்பவன் சந்தோஷமானவன்.
35 என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைவான்,+யெகோவாவின் கருணையையும்* பெறுவான்.
36 ஆனால், என்னை உதறித்தள்ளுகிறவன் தனக்குத்தானே கேடு வரவழைத்துக்கொள்கிறான்.என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தை விரும்புகிறார்கள்.”+
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ அதாவது, “நடைமுறை ஞானமும்.”
^ வே.வா., “நெறிமுறைகளும்.”
^ வே.வா., “பிரசவ வலியோடு பிறப்பிக்கப்பட்டேன்.”
^ வே.வா., “தினமும் என் வீட்டு வாசலில் விழித்திருந்து.”
^ வே.வா., “அங்கீகாரத்தையும்.”