நெகேமியா 4:1-23

4  நாங்கள் மதிலைத் திரும்பக் கட்டுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், சன்பல்லாத்+ கோபத்தில் கொதித்துப்போனான். அதனால், யூதர்களை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.  “கையாலாகாத இந்த யூதர்கள் என்ன செய்வதாக நினைக்கிறார்கள்? அவர்களாகவே மதிலைக் கட்டிவிடுவார்களோ? எரிந்து பாழாகக் கிடக்கிற கற்களை+ வைத்தே அதைக் கட்டி எழுப்புவார்களோ? ஒரே நாளில் வேலையை முடித்துவிட்டு பலி செலுத்துவார்களோ?” என்று தன்னுடைய சகோதரர்களுக்கும் சமாரியப் படைவீரர்களுக்கும் முன்னால் ஏளனமாகப் பேசினான்.  அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான+ தொபியா,+ “ஏதோ மதில் கட்டுகிறார்களாம், ஒரு குள்ளநரி ஏறினால்கூட அது பொலபொலவென்று இடிந்து விழுந்துவிடும்” என்று சொன்னான்.  அப்போது நான், “எங்கள் கடவுளே, கேளுங்கள். அந்த ஆட்கள் எங்களைக் கேவலப்படுத்துகிறார்கள்.+ அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் அவர்களுக்கே பலிக்கும்படி செய்யுங்கள்.+ சூறையாடப்பட்ட பொருளைப் போல அவர்களை எதிரிகளின் கையில் கொடுங்கள். அவர்களை வேறு தேசத்துக்குத் துரத்துங்கள்.  மதில் கட்டுகிறவர்களை அவர்கள் மட்டமாகப் பேசுகிறார்கள். அவர்களுடைய குற்றத்தைக் கண்டும்காணாமல் விட்டுவிடாதீர்கள், அவர்களுடைய பாவத்தை மன்னிக்காதீர்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.  பின்பு, நாங்கள் தொடர்ந்து மதிலைக் கட்டினோம். அதிலிருந்த எல்லா இடைவெளிகளையும் இணைத்து, பாதி உயரம்வரை கட்டி முடித்தோம். ஜனங்கள் முழு மூச்சோடு* வேலை செய்துகொண்டே இருந்தார்கள்.  எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை மும்முரமாக நடப்பதையும், அதன் இடைவெளிகள் அடைக்கப்பட்டு வருவதையும் சன்பல்லாத்தும் தொபியாவும்+ அரேபியர்களும்+ அம்மோனியர்களும் அஸ்தோத்தியர்களும்+ கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்தார்கள்.  கும்பலாகப் போய் எருசலேமைத் தாக்கி அங்கே கலவரம் உண்டாக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.  ஆனால், நாங்கள் எங்களுடைய கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, பாதுகாப்புக்காக ராத்திரி பகலாகக் காவலர்களை நிறுத்தினோம். 10  இருந்தாலும் யூதா ஜனங்கள், “வேலை செய்கிறவர்கள்* ரொம்பவே ஓய்ந்துவிட்டார்கள், அள்ள அள்ள கல்லும் மண்ணும் வந்துகொண்டே இருக்கிறது. மதிலை நம்மால் கட்டி முடிக்கவே முடியாது” என்று சொன்னார்கள். 11  எங்கள் எதிரிகள்கூட, “நாம் திடுதிப்பென்று போய் அவர்களைத் தீர்த்துக்கட்டிவிடலாம், அவர்களுடைய வேலையை முடக்குவதற்கு அதுதான் வழி” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 12  எதிரிகளைச் சுற்றி வாழ்ந்த யூதர்கள் எங்களிடம் வந்தபோதெல்லாம், “அந்த ஆட்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து தாக்கப்போகிறார்கள்!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். 13  மதிலுக்குப் பின்புறம் எதிரிகளுக்குச் சாதகமாக இருக்கிற மிகத் தாழ்வான இடங்களில் நான் காவலுக்கு ஆட்களை நிறுத்தினேன். வாள், ஈட்டி, வில் ஆகியவற்றோடு குடும்பம் குடும்பமாக அவர்களை நிற்க வைத்தேன். 14  அவர்கள் பயப்படுவதை நான் பார்த்தவுடனே, முக்கியப் பிரமுகர்களிடமும்+ துணை அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும், “எதிரிகளை நினைத்துப் பயப்படாதீர்கள்.+ அதிசயமானவரும் அற்புதமானவருமான யெகோவாவை+ நினைத்துப் பாருங்கள். உங்கள் சகோதரர்களுக்காகவும் மனைவி மக்களுக்காகவும் வீடுகளுக்காகவும் துணிந்து போராடுங்கள்” என்று சொன்னேன். 15  எதிரிகள் தங்களுடைய சதி அம்பலமானதையும் தங்களுடைய திட்டத்தை உண்மைக் கடவுள் குலைத்துவிட்டதையும் புரிந்துகொண்டார்கள். அதன்பின், நாங்கள் எல்லாரும் மதிலைக் கட்டும் வேலையில் மறுபடியுமாக இறங்கினோம். 16  அந்த நாளிலிருந்து, என்னுடைய ஆட்களில் பாதிப் பேர் வேலை செய்தார்கள்,+ மீதிப் பேர் ஈட்டியோடும் கேடயத்தோடும் வில்லோடும் உடல்கவசத்தோடும் நின்றார்கள். மதிலைக் கட்டிக்கொண்டிருந்த யூதா ஜனங்களுக்கு அவர்களுடைய தலைவர்கள்+ ஆதரவு தந்தார்கள்.* 17  சுமை சுமப்பவர்கள் ஒரு கையில் வேலை செய்தார்கள், இன்னொரு கையில் ஆயுதத்தைப் பிடித்திருந்தார்கள். 18  கட்டுமான வேலை செய்த ஒவ்வொருவரும் தங்களுடைய இடுப்பில் வாளைக் கட்டிக்கொண்டார்கள். ஊதுகொம்பை ஊத வேண்டியவன்+ எனக்குப் பக்கத்தில் நின்றான். 19  பின்பு, நான் முக்கியப் பிரமுகர்களிடமும் துணை அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும், “இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. நாம் மதிலைச் சுற்றிலும் தூரதூரமாக நிற்கிறோம். 20  அதனால், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்கும்போது எல்லாரும் இங்கே கூடிவர வேண்டும். நம்முடைய கடவுள் நமக்காகப் போர் செய்வார்”+ என்றேன். 21  அதனால், விடியற்காலையில் ஆரம்பித்து நட்சத்திரங்கள் தோன்றும்வரை எங்களில் பாதிப் பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள், மீதிப் பேர் ஈட்டிகளோடு நின்றுகொண்டிருந்தார்கள். 22  அப்போது நான் ஜனங்களைப் பார்த்து, “ராத்திரியில் ஆண்கள் தங்கள் உதவியாளருடன் எருசலேமுக்குள் தங்க வேண்டும். அவர்கள் ராத்திரியில் மாறிமாறி நம்மைக் காவல் காப்பார்கள், பகலில் வேலை செய்வார்கள்” என்று சொன்னேன். 23  நானும், என் சகோதரர்களும், என் உதவியாளர்களும்,+ என் பின்னால் வந்த காவலர்களும் எங்கள் உடைகளைக் கழற்றவே இல்லை; வலது கையில் ஆயுதத்தைப் பிடித்துக்கொண்டே இருந்தோம்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இதயப்பூர்வமாக.”
வே.வா., “சுமை சுமக்கிறவர்கள்.”
நே.மொ., “யூதா ஜனங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா