நெகேமியா 6:1-19

6  நான் மதிலைத் திரும்பக் கட்டி+ அதன் எல்லா இடைவெளிகளையும் அடைத்துவிட்ட விஷயத்தை சன்பல்லாத்தும், தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்,+ மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டார்கள். (ஆனாலும், நுழைவாசல்களில் அதுவரை நான் கதவுகளைப் பொருத்தவில்லை.)+  சன்பல்லாத்தும் கேஷேமும் உடனடியாக என்னிடம் ஆட்களை அனுப்பி, “ஓனோ சமவெளியில் உள்ள+ கிராமப்புறத்தில் நாம் சந்தித்துப் பேசலாம், வா” என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள்.  அதனால் நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். அதை விட்டுவிட்டு உங்களைப் பார்க்க வந்தால் வேலை நின்றுபோகும். என்னால் வர முடியாது” என்று சொன்னேன்.  நான்கு தடவை அவர்கள் அதே விஷயத்தைச் சொல்லி அனுப்பினார்கள், ஒவ்வொரு தடவையும் நான் அதே பதிலைச் சொல்லி அனுப்பினேன்.  அதன்பின், ஐந்தாவது தடவையாக சன்பல்லாத் அதே விஷயத்தை ஒரு கடிதத்தில் எழுதி, அதற்கு முத்திரை போடாமல் தன் உதவியாளனிடம் கொடுத்து அனுப்பினான்.  அதில், “நீ மற்ற யூதர்களோடு சேர்ந்து கலகம் செய்யத் திட்டம் போட்டிருப்பதாகவும்,+ அதற்காகத்தான் மதிலைக் கட்டுவதாகவும் சுற்றியுள்ள எல்லா தேசத்தாரும் பேசிக்கொள்கிறார்கள். கேஷேம்கூட+ அப்படித்தான் சொல்கிறான். கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நீ எந்த நேரத்திலும் அவர்களுடைய ராஜாவாகிவிடுவாய்.  அதனால்தான், ‘யூதாவை ஆள ராஜா வந்துவிட்டார்!’ என்று எருசலேம் முழுக்க உன்னைப் பற்றி அறிவிப்பதற்கு தீர்க்கதரிசிகளை நியமித்திருக்கிறாய். இதெல்லாம் ராஜாவின் காதுக்கு எட்டப்போகிறது. அதனால், நீ வந்து எங்களைச் சந்தித்துப் பேசு” என்று எழுதியிருந்தான்.  அதற்கு நான், “நீ சொல்வது எதுவுமே உண்மையில்லை. சும்மா கதை அளக்காதே” என்று பதில் அனுப்பினேன்.  அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப் பார்த்தார்கள். “யூதர்கள் சோர்ந்துபோய் வேலையை விட்டுவிடுவார்கள், அவர்களால் மதிலைக் கட்டி முடிக்கவே முடியாது”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான், “கடவுளே, எனக்குப் பலம் கொடுங்கள்”*+ என்று ஜெபம் செய்தேன். 10  பின்பு, மெகேதபேலின் பேரனும் தெலாயாவின் மகனுமான செமாயாவைப் பார்க்கப் போனேன். அவன் அவனுடைய வீட்டில் அடைபட்டுக் கிடந்தான். என்னைப் பார்த்ததும், “எதிரிகள் உங்களைக் கொலை செய்ய வருகிறார்கள், அதுவும் இன்றைக்கு ராத்திரியே வரப்போகிறார்கள். அதனால், நாம் உண்மைக் கடவுளுடைய ஆலயத்துக்குள் போய்க் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக இருக்கலாம்” என்று சொன்னான். 11  ஆனால் நான், “என்னை மாதிரி ஒரு ஆள் இப்படி ஓடி ஒளிந்துகொள்ளலாமா? என்னைப் போல ஒருவன் ஆலயத்துக்குள் போனால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?+ நான் வர மாட்டேன்!” என்று சொன்னேன். 12  கடவுள் அவனை அனுப்பியிருக்க முடியாது என்றும், எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல தொபியாவும் சன்பல்லாத்தும்தான்+ அவனுக்குக் கூலி கொடுத்திருக்க வேண்டும் என்றும் நான் புரிந்துகொண்டேன். 13  என்னைப் பயமுறுத்தி பாவம் செய்ய வைக்கத்தான் அவர்கள் அவனுக்குக் கூலி கொடுத்திருந்தார்கள். என் பெயரைக் கெடுத்து, என்னைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். 14  “என் கடவுளே, தொபியாவும்+ சன்பல்லாத்தும் செய்கிற அநியாயங்களைப் பாருங்கள். நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும்கூட என்னை எப்போதும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சும்மா விடாதீர்கள்” என்று நான் ஜெபம் செய்தேன். 15  மொத்தம் 52 நாட்களில், அதாவது எலூல்* மாதம் 25-ஆம் நாளில், மதில் கட்டி முடிக்கப்பட்டது. 16  அதைக் கேள்விப்பட்ட எதிரிகளும், அதைப் பார்த்த சுற்றுவட்டார ஜனங்களும் ரொம்பவே அவமானப்பட்டுப்போனார்கள்.+ எங்கள் கடவுளுடைய உதவியால்தான் இந்த வேலையை முடித்தோம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். 17  அந்த நாட்களில், யூதாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்+ தொபியாவுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தார்கள், தொபியாவும் அவர்களுக்குப் பதில் அனுப்பி வைத்தான். 18  யூதாவில் நிறைய பேர் அவனை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், அவன் ஆராகின் மகனாகிய+ செக்கனியாவுக்கு மருமகனாக இருந்தான். அதோடு, அவனுடைய மகன் யெகோனான், பெரகியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்தான். 19  அந்த முக்கியப் பிரமுகர்கள் தொபியாவைப் பற்றி என்னிடம் புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பின்பு, நான் சொன்னதை அவனுக்குத் தெரியப்படுத்துவார்கள். உடனே, தொபியா என்னை மிரட்டி கடிதங்கள் அனுப்புவான்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “என் கைகளைப் பலப்படுத்துங்கள்.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா