பிரசங்கி 10:1-20
10 செத்த ஈக்களால் வாசனைத் தைலம் கெட்டுப்போய் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும். அதேபோல், சின்ன முட்டாள்தனத்தால் ஒருவரின் ஞானமும் மதிப்பு மரியாதையும் கெட்டுவிடும்.+
2 ஞானமுள்ளவரின் இதயம் அவரை நேர் வழியில் கொண்டுபோகும், ஆனால் முட்டாளின் இதயம் அவனைக் குறுக்கு வழியில் கொண்டுபோகும்.+
3 முட்டாள் எந்த வழியில் போனாலும் புத்தி இல்லாமல்தான் நடக்கிறான்.+ தான் ஒரு முட்டாள் என்பதை எல்லாருக்கும் காட்டிவிடுகிறான்.+
4 ராஜா உன்மேல் கோபத்தில் சீறினால், உன்னுடைய இடத்தைவிட்டுப் போய்விடாதே.+ சாந்தமாக நடந்துகொண்டால், பெரிய பாவங்களைக்கூட தடுத்துவிடலாம்.+
5 சூரியனுக்குக் கீழே நடக்கிற ஒரு வேதனையான விஷயத்தைக் கவனித்தேன். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் செய்கிற இந்தத் தவறைப்+ பார்த்தேன்:
6 முட்டாள்களை அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் வைக்கிறார்கள், ஆனால் திறமைசாலிகளை* தாழ்ந்த நிலையிலேயே விட்டுவிடுகிறார்கள்.
7 வேலைக்காரர்கள் குதிரைமேல் உட்கார்ந்து போவதையும், இளவரசர்கள் வேலைக்காரர்களைப் போல் நடந்துபோவதையும் பார்த்தேன்.+
8 குழி வெட்டுகிறவன் அதே குழியில் விழுந்துவிடலாம்.+ கற்சுவரை உடைக்கிறவனைப் பாம்பு கொத்திவிடலாம்.
9 கற்களை உடைக்கிறவன் அவற்றால் காயப்படலாம், மரம் வெட்டுகிறவனுக்கு அதனால் ஆபத்து ஏற்படலாம்.*
10 மழுங்கிப்போன கோடாலியைத் தீட்டாவிட்டால், ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால், ஞானமாக நடந்தால் எல்லாவற்றையும் நல்லபடியாகச் செய்ய முடியும்.
11 மகுடி ஊதுவதற்கு முன்பே பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால், அவன் திறமையான பாம்பாட்டியாக இருந்தும் என்ன பிரயோஜனம்?
12 ஞானமுள்ளவரின் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் நல்லது செய்யும்,+ ஆனால் முட்டாளின் உதடுகள் அவனை அழித்துவிடும்.+
13 முதலில் அவன் பேசுகிற வார்த்தைகள் முட்டாள்தனமான வார்த்தைகள்;+ கடைசியில் அவன் பேசுகிற வார்த்தைகள் விபரீதத்தில் முடிகிற பைத்தியக்காரத்தனமான வார்த்தைகள்.
14 முட்டாள் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான்.+
அடுத்து என்ன நடக்கும் என்பது ஒரு மனுஷனுக்குத் தெரியாது; அப்படியானால், அவன் இறந்த பின்பு என்ன நடக்கும் என்பதை அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?+
15 முட்டாள் கடினமாக உழைத்துக் களைத்துப்போகிறான், ஆனால் ஊருக்குப் போகும் வழியைக்கூட கண்டுபிடிக்கத் தெரியாமல் திணறுகிறான்.
16 ராஜா சிறுபிள்ளையாக இருந்தால்+ நாடு எந்தளவுக்குச் சீரழியும்! அதிகாரிகள் காலையிலேயே விருந்து சாப்பிடுகிறவர்களாக இருந்தால் நாடு எந்தளவுக்குக் கெட்டுவிடும்!
17 ஆனால், ராஜா அரச குடும்பத்தில் பிறந்தவராக இருந்தால், நாடு எந்தளவுக்குச் செழிக்கும்! அதிகாரிகள் அளவுக்குமீறி குடிக்காமல்+ வேளாவேளைக்குச் சாப்பிட்டுத் தெம்புள்ளவர்களாக இருந்தால் நாடு எந்தளவுக்கு முன்னேறும்!
18 ஒருவன் படுசோம்பேறியாக இருந்தால் அவனுடைய வீட்டுக்கூரை சாய்ந்து தொங்கும், ஒருவன் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தால் வீடு ஒழுகும்.+
19 உணவு சிரித்து மகிழ்வதற்கு உதவும், திராட்சமது சந்தோஷமாக வாழ்வதற்கு உதவும்;+ ஆனால், பணம் எல்லாவற்றுக்குமே உதவும்.+
20 உன் உள்ளத்தில்கூட* ராஜாவைச் சபிக்காதே.+ உன் படுக்கை அறையில்கூட பணக்காரனைப் பழிக்காதே. நீ பேசியதை ஒரு பறவை போய் அவனிடம் சொல்லிவிடலாம், ஒரு சின்னப் பறவைகூட அதை அப்படியே அவனிடம் ஒப்பித்துவிடலாம்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “பணக்காரர்களை.”
^ அல்லது, “மரம் வெட்டுகிறவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
^ அல்லது, “படுக்கையில்கூட.”