பிரசங்கி 12:1-14

12  உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை.+ வேதனையான காலம் வருவதற்கு முன்னால்,+ “எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று நீ சொல்லும் காலம் வருவதற்கு முன்னால், அவரை நினை.  சூரியனும் வெளிச்சமும் சந்திரனும் நட்சத்திரங்களும் இருண்டுபோவதற்கு+ முன்னால், மழைக்குப் பின்பு* மேகங்கள் திரும்பி வருவதற்கு முன்னால்,  வீட்டுக் காவலாளிகள் நடுநடுங்கும் நாளுக்கு முன்னால், பலசாலிகள் தளர்ந்துபோவதற்கு முன்னால், பெண்கள் எண்ணிக்கையில் குறைந்துபோய் அரைக்கும் வேலையை நிறுத்திவிடுவதற்கு முன்னால், ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரிவதற்கு+ முன்னால்,  தெருவாசலின் கதவுகள் மூடப்படுவதற்கு முன்னால், மாவு அரைக்கிற கல்லின் சத்தம் குறைந்துவிடுவதற்கு முன்னால், பறவையின் சத்தம்கூட தூக்கத்தைக் கலைப்பதற்கு முன்னால், பாடல் சத்தமெல்லாம்* அடங்குவதற்கு+ முன்னால்,  உயரங்கள் பயத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால், தெருவில் நடப்பது திகிலூட்டுவதற்கு முன்னால், வாதுமை மரம் பூப்பூப்பதற்கு+ முன்னால், வெட்டுக்கிளி ஊர்ந்து ஊர்ந்து போவதற்கு முன்னால், பசியைத் தூண்டுகிற பழத்தைச் சாப்பிட்டால்கூட பசியெடுக்காமல் போவதற்கு முன்னால், மனுஷன் தன்னுடைய நிரந்தர வீட்டுக்குப் போவதற்கு முன்னால்,+ துக்கம் அனுசரிக்கிறவர்கள் வீதியில் நடந்துபோவதற்கு முன்னால்,+  வெள்ளிக்கயிறு அறுந்துவிடுவதற்கு முன்னால், தங்கக் கிண்ணம் நொறுங்குவதற்கு முன்னால், நீரூற்றின் பக்கத்திலே ஜாடி உடைந்துவிடுவதற்கு முன்னால், கிணற்றின் உருளை* நொறுங்குவதற்கு முன்னால் அவரை நினை.  மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணுக்கே திரும்புவான்,+ அவனுடைய உயிர்சக்தி அதைக் கொடுத்த உண்மைக் கடவுளிடமே திரும்பிவிடும்.+  “வீணிலும் வீண்!” என்று பிரசங்கி+ சொல்கிறார். “எல்லாமே வீண்!”+  பிரசங்கி ஞானமுள்ளவராக இருந்ததோடு, தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.+ நிறைய பழமொழிகளை*+ தொகுப்பதற்காக* விஷயங்களை ஆழமாக யோசித்தார், அவற்றை அலசி ஆராய்ந்தார். 10  இனிமையான வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும்,+ உண்மையான வார்த்தைகளைத் திருத்தமாக எழுதுவதற்கும் முயற்சி செய்தார். 11  ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் தார்க்கோல்களுக்கு* சமம்.+ அவர்களுடைய பொன்மொழிகள் பசுமரத்தில் பதிந்த ஆணிகளுக்குச் சமம். அவையெல்லாம் ஒரே மேய்ப்பரிடமிருந்து வந்திருக்கின்றன. 12  என் மகனே, மற்றவர்கள் இவற்றைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், இந்த எச்சரிப்பை மனதில் வை: புத்தகங்கள் எழுதுவதற்கு முடிவே இல்லை. ஆனால், அதிக படிப்பு உடலுக்குக் களைப்பு.+ 13  இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+ 14  மனுஷனின் ஒவ்வொரு செயலையும், அவன் மறைவாகச் செய்கிற செயல்களையும்கூட, நல்லதா கெட்டதா என்று உண்மைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “மழையோடு.”
நே.மொ., “பாடலின் மகள்களெல்லாம்.”
வே.வா., “கப்பி.”
வே.வா., “நீதிமொழிகளை.”
வே.வா., “வரிசைப்படுத்துவதற்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா