பிரசங்கி 3:1-22
3 எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.இந்த உலகத்தில் நடக்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.
2 பிறப்பதற்கு* ஒரு நேரம் இருக்கிறது, இறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.நடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, நட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
3 கொல்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது, குணமாக்குவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.இடிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, கட்டுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
4 அழுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, சிரிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.ஒப்பாரி வைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, நடனம் ஆடுவதற்கு* ஒரு நேரம் இருக்கிறது.
5 கற்களைத் தூக்கியெறிவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, அவற்றை எடுத்து வைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.கட்டித்தழுவுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, கட்டித்தழுவாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
6 தேடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, கிடைக்காது என்று விட்டுவிடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.வைத்துக்கொள்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது, வீசியெறிவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
7 கிழிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது,+ தைப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது,+ பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.+
8 நேசிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, வெறுப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.+
போர் செய்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது, சமாதானம் செய்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
9 ஒருவன் கஷ்டப்பட்டுச் செய்கிற வேலைகளுக்கெல்லாம் என்ன லாபம் கிடைக்கிறது?+
10 மனுஷர்கள் மும்முரமாகச் செய்வதற்கென்று கடவுள் கொடுத்திருக்கிற வேலைகளைக் கவனித்தேன்.
11 கடவுள் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் அழகாக* செய்திருக்கிறார்.+ என்றென்றும் வாழும் எண்ணத்தையும் மனுஷர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார். இருந்தாலும், ஆரம்பம்முதல் முடிவுவரை உண்மைக் கடவுள் செய்திருக்கிற எல்லாவற்றையும் மனுஷர்களால் முழுமையாகத் தெரிந்துகொள்ளவே முடியாது.
12 மனுஷர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து, நல்ல காரியங்களைச் செய்து,+
13 சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இதைவிட மேலானது வேறு எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன். இது கடவுள் தரும் பரிசு.+
14 உண்மைக் கடவுள் செய்வதெல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ ஒன்றுமில்லை. மக்கள் தனக்குப் பயந்து நடக்க வேண்டும் என்பதற்காக உண்மைக் கடவுள் இப்படிச் செய்திருக்கிறார்.+
15 இப்போது நடப்பதெல்லாம் ஏற்கெனவே நடந்ததுதான், இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததுதான்.+ ஆனால், நாடித் தேடப்படுவதை* உண்மைக் கடவுள் தேடுகிறார்.
16 நான் வேறொன்றையும் சூரியனுக்குக் கீழே பார்த்தேன். நியாயம் இருக்க வேண்டிய இடத்தில் அநியாயமும், நீதி இருக்க வேண்டிய இடத்தில் அநீதியும் இருக்கிறது.+
17 “நீதிமான்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் கடவுள் தீர்ப்பு வழங்குவார்.+ ஏனென்றால், ஒவ்வொரு செயலுக்கும் நடவடிக்கைக்கும் ஒரு நேரம் இருக்கிறது” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
18 உண்மைக் கடவுள் மனுஷர்களைச் சோதித்துப் பார்த்து, அவர்கள் விலங்குகளைப் போலத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பார் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
19 ஏனென்றால், மனுஷர்களுக்கும் முடிவு வருகிறது, விலங்குகளுக்கும் முடிவு வருகிறது. எல்லா உயிர்களின் முடிவும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.+ விலங்குகள் சாவது போலத்தான் மனுஷர்களும் சாகிறார்கள். எல்லா உயிர்களுக்கும் உயிர்சக்தி ஒன்றுதான்.+ அதனால், விலங்குகளைவிட மனுஷன் உயர்ந்தவன் கிடையாது, எல்லாமே வீண்தான்.
20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+
21 மனுஷர்களின் உயிர்சக்தி மேலே போகிறதா, விலங்குகளின் உயிர்சக்தி கீழே போகிறதா என்று யாருக்குத் தெரியும்?+
22 வேலையில் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது வேறு எதுவும் இல்லை+ என்பதை நான் கவனித்தேன். அதுதான் மனுஷனுக்குக் கிடைக்கும் பலன். அவன் இறந்த பிறகு என்ன நடக்குமென்று பார்க்கும் திறனை அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்?+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “பெற்றெடுப்பதற்கு.”
^ நே.மொ., “துள்ளிக் குதிப்பதற்கு.”
^ வே.வா., “ஒழுங்காக; பொருத்தமாக; கச்சிதமாக.”
^ அல்லது, “கடந்துபோனதை.”