மத்தேயு எழுதியது 15:1-39
ஆராய்ச்சிக் குறிப்புகள்
கை கழுவுவதில்லையே: கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக அவற்றைக் கழுவுவதைப் பற்றி இங்கே சொல்லப்படவில்லை; பாரம்பரியத்தின்படி தூய்மைச் சடங்கு செய்வதைப் பற்றியே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை கழுவாமல் சாப்பிடுவது ஒரு விபச்சாரியோடு உறவுகொள்வதற்குச் சமம் என்று பாபிலோனிய தால்முட் (சோட்டா 4ஆ) பிற்பாடு குறிப்பிட்டது. கை கழுவுவதை அசட்டை செய்கிறவர்கள் “இந்த உலகத்திலிருந்தே அழிக்கப்படுவார்கள்” என்றும் அது குறிப்பிட்டது.
கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டேன்: பணத்தையோ, சொத்தையோ, வேறு ஏதாவது ஒன்றையோ கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டால் அது ஆலயத்துக்குச் சொந்தமாகிவிடும் என்று வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கற்பித்தார்கள். இந்தப் பாரம்பரியத்தின்படி, ஒரு மகன் எதையாவது கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு, அது ஆலயத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடிந்தது; ஆனால், அதைத் தன்னிடமே வைத்துக்கொண்டு தனக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சிலர் தங்களுடைய உடைமைகளை இப்படி அர்ப்பணிப்பதன் மூலம், பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தட்டிக்கழித்ததாகத் தெரிகிறது.—மத் 15:6.
வெளிவேஷக்காரர்களே: மத் 6:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உவமையை: வே.வா., “நீதிக் கதையை; உருவகக் கதையை.”—மத் 13:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மணத்துணைக்குத் துரோகம்: இதற்கான கிரேக்க வார்த்தை (மோய்க்கீயா) இங்கே பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், பல தடவை மணத்துணைக்குத் துரோகம் செய்வதைக் குறிக்கலாம்.—சொல் பட்டியலைப் பாருங்கள்.
பாலியல் முறைகேடு: இதற்கான கிரேக்க வார்த்தை (போர்னியா) இங்கே பன்மையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், பல தடவை பாலியல் முறைகேடு செய்வதைக் குறிக்கலாம்.—மத் 5:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் சொல் பட்டியலையும் பாருங்கள்.
பெனிக்கேய: வே.வா., “கானானிய.” கிரேக்கில், கானானையா. இயேசுவின் காலத்தில் “பெனிக்கேயா” என்று அழைக்கப்பட்ட பகுதி “கானான்” என்றும் அழைக்கப்பட்டது. ஏனென்றால், ஆரம்பத்தில் பெனிக்கேயாவில் குடியிருந்தவர்கள் நோவாவின் பேரனான கானானின் வம்சத்தாராக இருந்தார்கள்.—மாற் 7:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்; அந்த வசனத்தில் இந்தப் பெண் ‘சீரியாவிலுள்ள பெனிக்கேயில் பிறந்ததாக’ சொல்லப்பட்டிருக்கிறது.
தாவீதின் மகனே: மத் 1:1; 15:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
அவர் முன்னால் மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.” யூதர் அல்லாத அந்தப் பெண், இயேசுவை “தாவீதின் மகனே” (மத் 15:22) என்று அழைப்பதன் மூலம், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஒரு தெய்வமாக நினைத்து அல்ல, கடவுளுடைய பிரதிநிதியாக நினைத்து அவள் மண்டிபோட்டாள்.—மத் 2:2; 8:2; 14:33; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
பிள்ளைகளின் . . . நாய்க்குட்டிகளுக்கு: திருச்சட்டத்தின்படி நாய் அசுத்தமான விலங்காக இருந்ததால், நாய் என்ற வார்த்தையைத் தரக்குறைவான கருத்தில்தான் பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. (லேவி 11:27; மத் 7:6; பிலி 3:2, அடிக்குறிப்பு; வெளி 22:15) ஆனால், இயேசுவின் உரையாடலைப் பற்றிய மாற்குவின் பதிவிலும் சரி (7:27), மத்தேயுவின் பதிவிலும் சரி, ‘நாய்’ என்பதற்கான குறுமை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம், “நாய்க்குட்டி” அல்லது “வீட்டு நாய்.” மனதைப் புண்படுத்தாத விதத்தில் இந்த ஒப்புமையை இயேசு பயன்படுத்தினார் என்பதை இது காட்டுகிறது. ஒருவேளை, யூதர்கள் அல்லாத மற்ற தேசத்தார் தங்களுடைய செல்லப்பிராணிகளைப் பாசமாக அழைப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தையையே இயேசுவும் பயன்படுத்தியிருக்கலாம். இஸ்ரவேலர்களை ‘பிள்ளைகள்’ என்றும், மற்ற தேசத்தாரை ‘நாய்க்குட்டிகள்’ என்றும் சொல்வதன் மூலம், யாருக்கு முன்னுரிமை தரப்படும் என்பதை இயேசு சுட்டிக்காட்ட விரும்பியதாகத் தெரிகிறது. பிள்ளைகளும் நாய்களும் இருந்த வீடுகளில், பிள்ளைகளுக்குத்தான் முதலில் உணவு கொடுக்கப்பட்டது.
கைகால் ஊனமானவர்கள் குணமானதையும்: சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. ஆனால், அவற்றுக்கு முன்பு எழுதப்பட்ட பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகளிலும், அவற்றுக்குப் பின்பு எழுதப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளிலும் இவை இருக்கின்றன.
என் மனம் உருகுகிறது: வே.வா., “எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.”—மத் 9:36-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பெரிய கூடைகள்: வே.வா., “உணவுப் பொருள்களுக்கான கூடைகள்.” இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்ஃபிரிஸ். முன்பு ஒரு சமயத்தில் இயேசு சுமார் 5,000 ஆண்களுக்கு உணவளித்தபோது பயன்படுத்தப்பட்ட கூடைகளைவிடப் பெரிய கூடைகளை இவை குறிப்பதாகத் தெரிகிறது. (மத் 14:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர: இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்கும்போது மத்தேயு மட்டும்தான் பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். இயேசு அற்புதமாக உணவளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,000-க்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மக்தலா: சில பைபிள்களில், “மகத நாடு” என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று கலிலேயா கடலின் சுற்றுப்புறத்தில் மகத நாடு என்று எந்த இடமும் இல்லை. அதனால், இது திபேரியாவின் வடமேற்கில் (வடமேற்கின் வடப்பக்கத்தில்) சுமார் 6 கி.மீ. (3.5 மைல்) தூரத்தில் இருக்கும் மக்தலா பகுதியாக (கிர்பத் மஜ்தல் [மிக்தல்] என்று கருதப்படுகிற பகுதியாக) இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இதன் இணைவசனத்தில் (மாற் 8:10) இந்தப் பகுதி தல்மனூத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.
மீடியா
பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
4,000 ஆண்களுக்கும், பல பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் இயேசு உணவு தந்த பிறகு, அவரும் சீஷர்களும் படகில் ஏறி கலிலேயா கடலின் மேற்குக் கரையில் அமைந்திருந்த மக்தலா பகுதிக்குப் போனார்கள். மாற்குவின் பதிவில் இந்தப் பகுதி தல்மனூத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.—மாற் 8:10; இயேசுவின் ஊழியம் சம்பந்தப்பட்ட விரிவான வரைபடங்களுக்கு இணைப்பு A7-D-ஐப் பாருங்கள்.