மத்தேயு எழுதியது 19:1-30
ஆராய்ச்சிக் குறிப்புகள்
யோர்தானைக் கடந்து யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்கு: அநேகமாக, யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்த பெரேயாவைக் குறிக்கிறது. முக்கியமாக, யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் பக்கத்திலிருந்த பெரேயாவின் பகுதிகளைக் குறிக்கிறது. கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டிருந்த இயேசு, தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்புதான் மறுபடியும் அங்கே போனார்.—இணைப்பு A7-ஐயும், வரைபடம் 5-ஐயும் பாருங்கள்.
சேர்ந்திருப்பான்: இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வினைச்சொல்லின் நேரடி அர்த்தம், “பசைபோட்டு ஒட்டுவது; பின்னிப்பிணைவது; பற்றிக்கொள்வது.” கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற பந்தம் அடையாள அர்த்தத்தில் பசைபோல் இறுக ஒட்டிக்கொள்ளும் பந்தம் என்பதைக் காட்டுவதற்கு இந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே உடலாக: ஆதி 2:24-ல் பயன்படுத்தப்பட்ட எபிரெய வார்த்தை கிரேக்கில் “ஒரே சதையாக” என்று நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இதை “ஒரே உடலாக” அல்லது “ஒரே நபராக” என்றும் மொழிபெயர்க்கலாம். இரண்டு மனிதர்களுக்கு இடையில் எந்தளவுக்கு நெருக்கமான பந்தம் இருக்க முடியுமோ அந்தளவுக்கு நெருக்கமான பந்தத்தை இது குறிக்கிறது. தாம்பத்திய உறவை மட்டுமல்லாமல், திருமண உறவை மொத்தமாகவும் இது குறிக்கிறது; ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதையும் இணைபிரியாமல் இருப்பதையும் குறிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பந்தம் முறிந்துபோனால், அந்தப் பந்தத்தில் இணைந்திருக்கிற இருவருமே கண்டிப்பாகப் பாதிக்கப்படுவார்கள்.
விவாகரத்துப் பத்திரத்தை: வே.வா., “மணவிலக்குப் பத்திரத்தை.” விவாகரத்து செய்ய நினைத்த ஒருவர் சட்டப்பூர்வ ஆவணத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமென்றும், அநேகமாக மூப்பர்களைப் பார்த்துப் பேச வேண்டுமென்றும் திருச்சட்டம் சொன்னது. இப்படி, அந்த முக்கியமான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அவசரப்பட்டு விவாகரத்து செய்வதைத் தடுப்பதும், பெண்களுக்கு ஓரளவு சட்டப்பூர்வ பாதுகாப்பைக் கொடுப்பதும்தான் திருச்சட்டத்தின் நோக்கமாக இருந்ததென்று தெரிகிறது. (உபா 24:1) ஆனால் இயேசுவின் காலத்தில், சுலபமாக விவாகரத்து செய்துகொள்ள மதத் தலைவர்கள் மக்களை அனுமதித்தார்கள். “எந்தவொரு காரணத்துக்காகவும் (ஆண்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்)” விவாகரத்து செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாக முதல் நூற்றாண்டு சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் குறிப்பிட்டார்; அவர்கூட விவாகரத்து செய்துகொண்ட ஒரு பரிசேயர்தான்.—மத் 5:31-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பாலியல் முறைகேட்டை: கிரேக்கில், போர்னியா. மத் 5:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “பாலியல் முறைகேடு” என்ற தலைப்பையும் பாருங்கள்.
முறைகேடான உறவுகொள்கிறான்: சொல் பட்டியலில் “மணத்துணைக்குத் துரோகம்; முறைகேடான உறவு” என்ற தலைப்பைப் பாருங்கள்.
திருமணம் செய்ய முடியாத நிலையில்: நே.மொ., “அண்ணகர்களாக.” அதாவது, ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்களாக. இந்த வசனத்தில் இந்த வார்த்தைகளை நேரடி அர்த்தத்திலும் புரிந்துகொள்ளலாம், அடையாள அர்த்தத்திலும் புரிந்துகொள்ளலாம்.—சொல் பட்டியலில் “அண்ணகர்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்: நே.மொ., “அண்ணகர்களாக்கிக்கொள்கிறார்கள்.” இங்கே ‘அண்ணகர்கள்’ என்ற வார்த்தை ஆண்மை நீக்கம் செய்துகொண்டவர்களையோ தங்களுடைய உறுப்பைத் துண்டித்துக்கொண்டவர்களையோ குறிப்பதில்லை. சொந்த விருப்பத்தினால் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவர்களைத்தான் குறிக்கிறது.—சொல் பட்டியலில் “அண்ணகர்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நல்லவர் ஒருவர்தான் இருக்கிறார்: வே.வா., “நல்லவர் ஒருவர் இருக்கிறார்,” அவர்தான் கடவுள். எது நல்லது என்பதைத் தீர்மானிப்பவர் யெகோவா மட்டும்தான் என்பதை இயேசு இங்கே சுட்டிக்காட்டினார். கடவுள் தன் வார்த்தையாகிய பைபிளில், நல்லது எதுவென்று தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்.—மாற் 10:18; லூ 18:19.
மற்றவர்கள்மேலும்: மத் 22:39-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
குறையில்லாதவனாக: வே.வா., “பரிபூரணமாக.” இதற்கான கிரேக்க வார்த்தை “முழுமை” என்ற அர்த்தத்தைத் தரலாம்; அல்லது, ஒரு அதிகாரி ஏற்படுத்தியிருக்கும் தராதரங்களின்படி “குற்றமற்றவராக” இருப்பதை அர்த்தப்படுத்தலாம். (மத் 5:48-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) இங்கே சொல்லப்பட்டிருக்கும் வாலிபன், பொருள் உடைமைகளுக்கு முக்கியத்துவம் தந்ததால், கடவுளுக்குப் பரிபூரணமாக, அதாவது முழுமையாக, சேவை செய்ய முடியவில்லை.—லூ 8:14.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்: ஒரு குறிப்பைச் சொல்வதற்காக இயேசு இங்கே உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்துகிறார். ஒரு பணக்காரன், யெகோவாவோடு இருக்கும் தன் பந்தத்தைவிட பணம் பொருளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தால், ஒரு ஒட்டகத்தால் எப்படி ஒரு ஊசியின் காதுக்குள் நுழைய முடியாதோ, அப்படித்தான் அவனாலும் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய முடியாது. பணக்காரர்கள் யாருமே கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்க மாட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை; ஏனென்றால், “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்” என்று அவர் தொடர்ந்து சொன்னார்.—மத் 19:26.
எல்லாம் புதிதாக்கப்படுகிற காலத்தில்: நே.மொ., “புதிய படைப்பில்.” இதற்கான கிரேக்க வார்த்தை, பாலின்ஜீனிசையா. இதில் பாலின் என்பதன் அர்த்தம், “மறுபடியும்; புதிதாக; இன்னொரு முறை”; ஜீனிசிஸ் என்பதன் அர்த்தம், “பிறப்பு; ஆரம்பம்.” பழங்கால யூத எழுத்தாளரான ஃபைலோ, பெருவெள்ளத்துக்குப் பிறகு இந்த உலகம் புதுப்பிக்கப்பட்டதைப் பற்றிச் சொன்னபோது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். யூத சரித்திராசிரியரான ஜொசிஃபஸ், சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் மறுபடியும் தங்கள் தாயகத்துக்குத் திரும்பியதைப் பற்றிச் சொன்னபோது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். மத்தேயு எழுதிய இந்தப் பதிவில், கிறிஸ்துவும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்களும் இந்தப் பூமியைப் புதிதாக்கப்போகும் காலத்தை இது குறிக்கிறது. முதல் மனிதத் தம்பதி பாவம் செய்வதற்கு முன்பு இந்தப் பூமியில் இருந்த பரிபூரணமான நிலைமையை அவர்கள் மறுபடியும் கொண்டுவருவார்கள்.
மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நியாயந்தீர்ப்பீர்கள்: கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்கள் அவரோடு சேர்ந்து நியாயந்தீர்ப்பார்கள் என்று சொல்லும் வசனங்களோடு இது ஒத்துப்போகிறது. (1கொ 6:2; வெளி 20:4) பைபிளிலுள்ள சில வசனங்கள், ராஜாக்கள் தீர்ப்புகளை வழங்கியதாகவும், நீதிபதிகள் ஆட்சி செய்ததாகவும் சொல்கின்றன. பைபிள், ‘நியாயந்தீர்ப்பது’ என்ற வார்த்தையை ‘ஆட்சி செய்வது’ அல்லது ‘நிர்வாகம் செய்வது’ போன்ற பொதுப்படையான அர்த்தத்திலும் பயன்படுத்துகிறது.—நியா 2:18; 10:2; ஒப 21.
நூறு மடங்கு: பழமையான சில கையெழுத்துப் பிரதிகளில் “பல மடங்கு” என்று கொடுக்கப்பட்டிருந்தாலும், பழமையான பல கையெழுத்துப் பிரதிகளில் “நூறு மடங்கு” என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது.—ஒப்பிடுங்கள்: மாற் 10:30; லூ 18:30.
கிடைக்கும்: வே.வா., “சொந்தமாகும்.” மத் 25:34-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மீடியா
படத்தில் காட்டப்பட்டுள்ள விவாகரத்துப் பத்திரம் கி.பி. 71 அல்லது 72-ல் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டது. யூதேய பாலைவனத்தில் இருந்த ஒரு வறண்ட நதிப்படுகையின் (முராபாட் காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்) வடக்கில் அது கண்டெடுக்கப்பட்டது. யூதர்கள் கலகம் செய்த ஆறாவது வருஷத்தில், நாக்சன் என்பவரின் மகனான ஜோசஃப், மசாடா நகரத்தில் வாழ்ந்துவந்த ஜானத்தன் என்பவரின் மகளாகிய மிரியமை விவாகரத்து செய்ததாக அது குறிப்பிடுகிறது.
இயேசுவின் காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் வளர்க்கப்பட்ட விலங்குகளிலேயே ஒட்டகம்தான் மிகப் பெரியதாக இருந்தது. பைபிளில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கும் ஒட்டகம் அரபிய ஒட்டகமாக (காமெலஸ் டிரோமெடாரியஸ்) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கு ஒரேவொரு திமில்தான் இருக்கும். ஆபிரகாம் எகிப்தில் தற்காலிகமாகத் தங்கியதைப் பற்றிய பதிவில்தான், சுமை சுமக்கும் விலங்காகிய ஒட்டகத்தைப் பற்றி பைபிள் முதன்முதலில் குறிப்பிடுகிறது. எகிப்தில் ஆபிரகாமுக்கு நிறைய ஒட்டகங்கள் கிடைத்தன.—ஆதி 12:16.