மத்தேயு எழுதியது 2:1-23
ஆராய்ச்சிக் குறிப்புகள்
ஏரோது: அதாவது, “மகா ஏரோது.”—சொல் பட்டியலைப் பாருங்கள்.
யூதேயாவிலுள்ள பெத்லகேமில்: யூதாவில் (யூதேயாவில்) இருந்த பெத்லகேம், அடிக்கடி இப்படி அழைக்கப்பட்டது (நியா 17:7-9; 19:1, 2, 18); ஏனென்றால், செபுலோன் பகுதியில் இன்னொரு பெத்லகேம் இருந்தது. (யோசு 19:10, 15). யூதேயாவில் இருந்த பெத்லகேம் முதலில் எப்பிராத் அல்லது எப்பிராத்தா என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால்தான், ‘எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லகேமில்’ மேசியா தோன்றுவார் என்று மீ 5:2 சொல்கிறது.—ஆதி 35:19; 48:7.
ஜோதிடர்கள்: கிரேக்கில், மேகாய் (மேகாஸ் என்பதன் பன்மை வடிவம்). அநேகமாக, பைபிளில் கண்டனம் செய்யப்பட்டிருக்கும் ஜோதிடத்திலும் மற்ற மாயமந்திர பழக்கவழக்கங்களிலும் நிபுணர்களாக இருந்தவர்களைக் குறிக்கிறது. (உபா 18:10-12) இந்த வசனத்தில் ஜோதிடர்களின் எண்ணிக்கையை பைபிள் குறிப்பிடுவதில்லை. இதே கிரேக்க வார்த்தை அப் 13:6, 8-ல் “சூனியக்காரன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தானி 2:2, 10-ல் ‘மாயவித்தைக்காரன்’ என்பதற்கான எபிரெய மற்றும் அரமேயிக் வார்த்தைகளை மொழிபெயர்க்க இதே கிரேக்க வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது.
நாங்கள் கிழக்கிலே இருந்தபோது: “கிழக்கு” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம் “உதயம்.” அந்த நட்சத்திரம் கிழக்கு வானில் தெரிந்ததையோ ‘உதயமானதையோ’ ஜோதிடர்கள் பார்த்ததை இது அர்த்தப்படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனாலும், ஜோதிடர்கள் எந்த இடத்தில் இருந்தபோது அந்த நட்சத்திரத்தைப் பார்த்தார்கள் என்பதையே இந்த வார்த்தை இந்த வசனத்தில் குறிக்கிறது.
நட்சத்திரத்தை: இது நிஜமான நட்சத்திரத்தையோ கிரகங்களின் சேர்க்கையையோ பெரும்பாலும் குறிப்பதில்லை. ஜோதிடர்கள் மட்டும்தான் அந்த நட்சத்திரத்தைப் ‘பார்த்தார்கள்.’
தலைவணங்க: வே.வா., “மண்டிபோட.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில், “யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்?” என்றுதான் அந்த ஜோதிடர்கள் கேட்டார்கள். அதனால், ஒரு தெய்வத்துக்கு முன்னால் அல்ல, ஒரு மனித ராஜாவுக்கு முன்னால் தலைவணங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது. மாற் 15:18, 19-லும் இதே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில படைவீரர்கள் இயேசுவை “யூதர்களுடைய ராஜாவே” என்று கேலியாக அழைத்து, அவர் முன்னால் “தலைவணங்கினார்கள்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—மத் 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
முதன்மை குருமார்களையும்: இதற்கான கிரேக்க வார்த்தை ஒருமையில் கொடுக்கப்பட்டிருக்கும்போது “தலைமைக் குரு” என்று மொழிபெயர்க்கப்படுகிறது; கடவுளுக்கு முன் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய நபரை இது குறிக்கிறது. ஆனால், இந்த வசனத்தில் இந்த வார்த்தை பன்மையில் கொடுக்கப்பட்டிருப்பதால், குருத்துவச் சேவை செய்த முக்கியமான ஆட்களைக் குறிக்கிறது. இவர்களில், முன்னாள் தலைமைக் குருமார்களும், அநேகமாக 24 குருத்துவப் பிரிவுகளின் தலைவர்களும்கூட இருந்தார்கள்.
வேத அறிஞர்களையும்: வே.வா., “எழுத்தர்களையும்.” ஆரம்பத்தில் இந்த வார்த்தை, வேதாகமத்தை நகலெடுப்பவர்களைக் குறித்தது. ஆனால் இயேசுவின் காலத்தில், திருச்சட்ட நிபுணர்களாகவும் போதகர்களாகவும் இருந்தவர்களைக் குறித்தது.
கிறிஸ்து: கிரேக்கில், “கிறிஸ்து” என்ற பட்டப்பெயருக்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேசியாவாக இயேசு வகிக்கும் பொறுப்பை வலியுறுத்துவதற்காக இது அநேகமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
பெத்லகேமில்: ‘பெத்லகேம்’ என்ற பெயர், “ரொட்டி வீடு” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெயப் பெயரிலிருந்து வந்திருக்கிறது. பெத்லகேம் தாவீதின் சொந்த ஊராக இருந்தது; அதனால் சிலசமயங்களில் ‘தாவீதின் ஊர்’ என்று அழைக்கப்பட்டது.—லூ 2:4, 11; யோவா 7:42.
அற்பமான நகரமே கிடையாது: மீ 5:2-ல் உள்ள தீர்க்கதரிசனம் இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஜனத்தொகையையும் (யோவா 7:42-ல் கிராமம் என்று அழைக்கப்படுகிறது) ஆட்சி அதிகாரத்தையும் பொறுத்தவரை பெத்லகேம் அற்பமான நகரமாக இருந்தபோதிலும், கடவுளுடைய மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும் மாபெரும் தலைவர் அங்கிருந்து வருவார் என்பதால் அது மிக முக்கியமான நகரமாக ஆகவிருந்தது.
தலைவணங்குகிறேன்: வே.வா., “கௌரவிக்கிறேன்; மரியாதை செலுத்துகிறேன்.” இங்கே ஏரோது, ஒரு தெய்வத்தை வணங்க விரும்புவதாகச் சொல்லவில்லை; ஒரு மனித ராஜாவுக்கு மரியாதை செலுத்த விரும்புவதாகத்தான் சொல்கிறார்.—இதற்கான கிரேக்க வார்த்தையைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, மத் 2:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வீட்டுக்குள்: ஜோதிடர்கள் இயேசுவைப் பார்க்கப் போனபோது, அவர் ஒரு பச்சைக்குழந்தையாகத் தீவனத் தொட்டியில் படுக்க வைக்கப்பட்டிருக்கவில்லை, ஒரு வீட்டுக்குள் இருந்தார் என்பதை இது காட்டுகிறது.
அந்தப் பிள்ளை: லூ 2:12, 16 வசனங்களைப் போல இந்த வசனம் இயேசுவை ‘குழந்தை’ என்று சொல்வதில்லை.
தலைவணங்கினார்கள்: இந்த வார்த்தை வணங்குவதை அல்ல, ராஜாவைப் போன்ற ஒரு மனிதருக்கு மரியாதை செலுத்துவதைப் பெரும்பாலும் குறிக்கிறது.—மத் 2:2; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
சாம்பிராணியையும்: சொல் பட்டியலில் “சாம்பிராணி” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வெள்ளைப்போளத்தையும்: சொல் பட்டியலில் “வெள்ளைப்போளம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அன்பளிப்பாக: 40 நாள் குழந்தையாக இருந்த இயேசுவை ஆலயத்துக்குக் கொண்டுபோனபோது (லூ 2:22-24; லேவி 12:6-8), யோசேப்பும் மரியாளும் ஏழைகளாக இருந்தார்கள்; அதனால், இந்த அன்பளிப்புகள் அதற்குப் பிறகு ஏதோவொரு சமயத்தில்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த சமயத்தில், இந்த அன்பளிப்புகள் அவர்களுடைய செலவுகளுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.
யெகோவாவின் தூதர்: மத் 1:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் இணைப்பு C-ஐயும் பாருங்கள்.
எகிப்துக்கு: எருசலேமில் ஆண் குழந்தைகளைக் கொல்ல வேண்டுமென்று ஏரோது கட்டளை போட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் எகிப்துக்குப் போக வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் எகிப்து ஒரு ரோம மாகாணமாக இருந்தது. அங்கே நிறைய யூதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எருசலேம் பெத்லகேமுக்கு வடகிழக்கில் சுமார் 9 கி.மீ. (6 மைல்) தொலைவில் இருந்தது. அதனால், யோசேப்பும் மரியாளும் எருசலேம் வழியாகப் போகாமலேயே தென்மேற்காக எகிப்துக்குப் பயணம் செய்ய முடிந்தது.
எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்: பெத்லகேமிலிருந்து எகிப்து குறைந்தபட்சம் 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் இருந்திருக்கலாம்.
ஏரோது சாகும்வரை: ஏரோது அநேகமாக கி.மு. 1-ல் இறந்திருக்கலாம்.
தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னது நிறைவேறும்படியே: மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
யெகோவா: இந்த வசனத்திலுள்ள மேற்கோள் ஓசி 11:1-லிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது; இதை யெகோவாதான் சொல்கிறார் என்பதை ஓசி 11:1-11 வசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோட்டான்: மகா ஏரோது இதுபோன்ற பல கொலைகளைச் செய்ததாகச் சரித்திராசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தன்னுடைய எதிரி ஒருவனுக்கு ஆதரவாக இருந்தவர்களில் குறைந்தபட்சம் 45 பேரை அவன் கொலை செய்தான். அதோடு, சந்தேகத்தின் காரணமாகத் தன்னுடைய மனைவி மரியாம்னே (I), மூன்று மகன்கள், மனைவியின் சகோதரர், அவளுடைய தாத்தா (ஹிர்கானஸ்) ஆகியவர்களையும், நெருங்கிய நண்பர்களாக இருந்திருந்த பலரையும், இன்னும் நிறைய பேரையும் கொன்றான். தான் சாகும்போது எல்லாருக்கும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது; அதனால், மற்றவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுப்பதற்காக, தான் சாகும்போது பிரபலமான யூத ஆண்களும் கொல்லப்பட வேண்டும் என்று அவன் கட்டளை போட்டதாகச் சொல்லப்படுகிறது.
ராமாவில்: எருசலேமின் வடக்கே பென்யமீன் பகுதியில் இருந்த ஒரு நகரம். கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது, யூதர்கள் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவதற்கு முன்பு ராமாவில் ஒன்றுதிரட்டப்பட்டதாகத் தெரிகிறது. (அப்போது அவர்களில் சிலர் ஒருவேளை கொலையும் செய்யப்பட்டிருக்கலாம்.) இந்த வசனத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் எரே 31:15 இதைப் பற்றித்தான் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
ராகேல்: இஸ்ரவேலில் இருந்த எல்லா தாய்மார்களுக்கும் அடையாளமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெத்லகேமுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த ராகேல், தன் மகன்கள் எதிரி தேசத்துக்குப் பிடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து அழுவதாக எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எதிரி தேசத்திலிருந்து அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற ஆறுதலான வாக்குறுதியும் எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. (எரே 31:16) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இந்தத் தீர்க்கதரிசனத்தை மத்தேயு மேற்கோள் காட்டியிருப்பது, இறந்தவர்கள் திரும்பி வருவார்கள் என்பதை, அதாவது உயிர்த்தெழுதலின் மூலம் மரணம் என்ற எதிரியின் பிடியிலிருந்து விடுபடுவார்கள் என்பதை, குறிப்பதாக நம்பப்படுகிறது.
யெகோவாவின் தூதர்: மத் 1:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் இணைப்பு C-ஐயும் பாருங்கள்.
இந்தப் பிள்ளையை: நே.மொ., “இந்தப் பிள்ளையின் உயிரை.” இங்கே ‘உயிர்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை சைக்கீ. இந்த வசனத்தில்தான் இந்த வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில பைபிள்களில் இது “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில் இது உயிரைக் குறிக்கிறது.—சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அர்கெலாயு: மகா ஏரோதுவின் மகன். கொடூரமான ராஜாவாக இருந்ததால், தன் அப்பாவைப் போலவே யூதர்களின் வெறுப்பைச் சம்பாதித்தான். ஒரு கலவரத்தை அடக்குவதற்காக ஆலய வளாகத்துக்குள் 3,000 பேரை வெட்டிச் சாய்க்கும்படி கட்டளை போட்டான். யோசேப்பு எகிப்திலிருந்து திரும்பிவந்தபோது இந்த ஆபத்தைப் பற்றிக் கடவுள் அவரை எச்சரித்தார். அதனால், கலிலேயாவில் இருந்த நாசரேத்தில் யோசேப்பு தன் குடும்பத்தோடு தங்கிவிட்டார். அது அர்கெலாயுவின் ஆட்சிப் பகுதிக்கு வெளியே இருந்தது.
நாசரேத்: அநேகமாக இதன் அர்த்தம், “தளிர்-ஊர்.” இது, கீழ் கலிலேயாவில் இருந்த ஒரு ஊர். இயேசு பூமியில் இருந்தபோது இங்குதான் தன் வாழ்நாளில் பெரும்பாலான காலத்தைச் செலவழித்தார்.
“அவர் நாசரேத்தூரார் என அழைக்கப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளின் மூலம் சொல்லப்பட்டது: ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்தை (ஏசா 11:1) அநேகமாகக் குறிக்கலாம். வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவை ‘ஈசாயின் வேர்களிலிருந்து முளைக்கும் ஒரு தளிர் [எபிரெயுவில், நீட்ஸர்]’ என்று அது குறிப்பிடுகிறது. ‘தீர்க்கதரிசிகள்’ என்று பன்மையில் மத்தேயு சொல்லியிருப்பதால், அவர் எரேமியாவையும் சகரியாவையும் பற்றிக்கூட குறிப்பிட்டிருக்கலாம். ஏனென்றால், தாவீதின் வம்சத்தில் துளிர்க்கும் “ஒரு நீதியான தளிரை” பற்றி எரேமியா எழுதினார். (எரே 23:5; 33:15) “தளிர் என்ற பெயருடைய ஒருவர்” ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்யப்போவதாக சகரியா எழுதினார். (சக 3:8; 6:12, 13) “நாசரேத்தூரார்” என்ற வார்த்தை, இயேசுவுக்கும் பிற்பாடு அவருடைய சீஷர்களுக்கும் ஒரு அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டது.
மீடியா
இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது. ஏனென்றால், நவம்பர்முதல் மார்ச்வரை பெத்லகேமில் குளிராக இருக்கும், மழையும் பெய்யும். குளிர்காலத்தில், அங்கே பனியும் பெய்யலாம். அப்படிப்பட்ட காலத்தில் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியில் தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள். (லூ 2:8) பெத்லகேம், யூதேயாவின் மேட்டுநிலப் பகுதியில் அமைந்திருக்கிறது; அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 780 மீ. (2,550 அடி) உயரத்தில் இருக்கிறது.