மத்தேயு எழுதியது 22:1-46

22  இயேசு மறுபடியும் உவமைகளைப் பயன்படுத்திப் பேசினார்; அவர்களிடம்,  “பரலோக அரசாங்கம், மகனுடைய திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒரு ராஜாவைப் போல் இருக்கிறது.+  திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரச் சொல்லி அவர் தன்னுடைய அடிமைகளை அனுப்பினார்; ஆனால், அழைக்கப்பட்டவர்கள் வர விரும்பவில்லை.+  அவர் மறுபடியும் வேறு அடிமைகளைக் கூப்பிட்டு, ‘அழைக்கப்பட்டவர்களிடம் நீங்கள் போய், “இதோ! நான் மதிய விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன், காளைகளையும் கொழுத்த மிருகங்களையும் அடித்துச் சமைத்து வைத்திருக்கிறேன், எல்லாம் தயாராக இருக்கிறது; திருமண விருந்துக்கு வாருங்கள்” என நான் அழைப்பதாகச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.  ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டை செய்து, ஒருவன் தன்னுடைய வயலுக்குப் போய்விட்டான், வேறொருவன் தன்னுடைய வியாபாரத்தைக் கவனிக்கப் போய்விட்டான்.+  மற்றவர்களோ, அவருடைய அடிமைகளைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொன்றுபோட்டார்கள்.  ராஜாவுக்குப் பயங்கர கோபம் வந்தது; அதனால், தன் படைவீரர்களை அனுப்பி அந்தக் கொலைகாரர்களைக் கொன்றுபோட்டார், அவர்களுடைய நகரத்தையும் கொளுத்தினார்.+  பின்பு தன் அடிமைகளிடம், ‘திருமண விருந்து தயாராக இருக்கிறது, ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அதற்குத் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.+  அதனால், நகரத்துக்கு வெளியே செல்லும் சாலைகளுக்குப் போய், யாரையெல்லாம் பார்க்கிறீர்களோ அவர்களையெல்லாம் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’+ என்று சொன்னார். 10  அதன்படியே, அந்த அடிமைகள் அந்தச் சாலைகளுக்குப் போய், அவர்கள் பார்த்த நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாரையும் அழைத்து வந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பி வழிந்தது. 11  விருந்தாளிகளைப் பார்வையிட ராஜா உள்ளே வந்தபோது, திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாத ஒருவன் அங்கே இருப்பதைப் பார்த்தார். 12  அதனால் அவனிடம், ‘திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாமல் நீ எப்படி உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. 13  அப்போது ராஜா தன் வேலையாட்களிடம், ‘அவனுடைய கை கால்களைக் கட்டி, வெளியே இருட்டில் வீசியெறியுங்கள். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்’ என்று சொன்னார். 14  இப்படியாக, அழைக்கப்படுகிறவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் சிலர்” என்றார். 15  பின்பு அந்தப் பரிசேயர்கள் அங்கிருந்து போய், அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக ஒன்றுகூடி சதித்திட்டம் போட்டார்கள்.+ 16  அதன்படி, தங்களுடைய சீஷர்களையும் ஏரோதுவின் ஆதரவாளர்களையும் அவரிடம் அனுப்பி,+ “போதகரே, நீங்கள் எப்போதும் உண்மை பேசுகிறவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர், யாருடைய தயவையும் எதிர்பார்க்காதவர், மனுஷர்களுடைய வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும். 17  அதனால் எங்களுக்குச் சொல்லுங்கள், ரோம அரசனுக்கு வரி கட்டுவது சரியா இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 18  ஆனால் இயேசு அவர்களுடைய கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொண்டு, “வெளிவேஷக்காரர்களே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? 19  வரிக் காசு ஒன்றை என்னிடம் காட்டுங்கள்” என்று சொன்னார். அப்போது அவர்கள் ஒரு தினாரியுவை அவரிடம் கொண்டுவந்தார்கள். 20  “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்டார். 21  அப்போது அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அப்படியானால், அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்”+ என்று சொன்னார். 22  அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு, அவரைவிட்டுப் போனார்கள். 23  உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர்கள்+ அன்று அவரிடம் வந்து,+ 24  “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும்’ என மோசே சொன்னார்.+ 25  எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். அதனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டான். 26  இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரை அப்படியே நடந்தது. 27  கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். 28  அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அந்த ஏழு பேரில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லாருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்றார்கள். 29  அதற்கு இயேசு, “உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது; ஏனென்றால், உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை.+ 30  உயிரோடு எழுப்பப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.+ 31  இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசித்ததில்லையா? 32  ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று அவர் சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”+ என்று சொன்னார். 33  அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் மலைத்துப்போனார்கள்.+ 34  அவர் சதுசேயர்களுடைய வாயை அடைத்துவிட்டார் என்பதை பரிசேயர்கள் கேள்விப்பட்டபோது, கூட்டமாக அவரிடம் வந்தார்கள். 35  அவர்களில் திருச்சட்ட அறிஞன் ஒருவன் அவரைச் சோதிப்பதற்காக அவரிடம், 36  “போதகரே, திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?”+ என்று கேட்டான். 37  அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+ 38  இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை. 39  இதோடு சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டளை இதுதான்: ‘உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.’+ 40  இந்த இரண்டு கட்டளைகள்தான் திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன”+ என்று சொன்னார். 41  பரிசேயர்கள் ஒன்றுகூடியிருந்தபோது இயேசு அவர்களிடம்,+ 42  “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தாவீதின் மகன்”+ என்று சொன்னார்கள். 43  அப்போது அவர், “அப்படியானால், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது+ அவரை எஜமான் என்று அழைத்தது எப்படி? 44  ‘யெகோவா என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ என தாவீது சொன்னாரே. 45  தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?”+ என்று அவர்களிடம் கேட்டார். 46  யாராலும் ஒரு வார்த்தைகூட பதில் சொல்ல முடியவில்லை; அன்றுமுதல் அவரிடம் கேள்வி கேட்பதற்கு யாருக்குமே துணிச்சல் வரவில்லை.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

உவமைகளை: வே.வா., “நீதிக் கதைகளை; உருவகக் கதைகளை.”​—மத் 13:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையை: நே.மொ., “திருமண உடையை.” இது ராஜா வீட்டுக் கல்யாணம் என்பதால், ராஜா தன் விருந்தாளிகளுக்கு விசேஷ உடையைக் கொடுத்திருக்கலாம். அப்படியென்றால், அதை உடுத்தாமல் இருப்பது ராஜாவை மிகவும் அவமதிப்பதாக இருக்கும்.

அழுது அங்கலாய்ப்பான்: மத் 8:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவரைச் சிக்க வைப்பதற்காக: நே.மொ., “அவரைக் கண்ணியில் மாட்ட வைப்பதற்காக.” பறவையை வலையில் சிக்க வைப்பதைப் போல் சிக்க வைப்பதைக் குறிக்கிறது. (பிர 9:12-ஐ ஒப்பிடுங்கள்; அந்த வசனத்தில், “கண்ணி வைத்துப் பிடிப்பது; கண்ணியில் மாட்ட வைப்பது” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் எபிரெய வார்த்தைக்கு, வேட்டையாடுவதைக் குறிக்கும் இதே கிரேக்க வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியுள்ளது.) பரிசேயர்கள் இயேசுவைப் போலியாகப் புகழ்ந்தார்கள்; இயேசுவை அவர் வாயாலேயே சிக்க வைப்பதற்காக அவரிடம் தந்திரமான கேள்விகளைக் கேட்டார்கள்.—மத் 22:16, 17.

ஏரோதுவின் ஆதரவாளர்களையும்: சொல் பட்டியலில் “ஏரோதுவின் ஆதரவாளர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

ரோம அரசனுக்கு: நே.மொ., “சீஸருக்கு.” இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது ரோமப் பேரரசராக இருந்தவர் திபேரியு. ஆனால் சீஸர் என்ற வார்த்தை, ஆட்சியில் இருந்த அரசரை மட்டுமே குறிக்கவில்லை. அந்த வார்த்தை, ரோம அரசாங்கத்தையும் அது நியமித்த பிரதிநிதிகளையும்கூட குறித்திருக்கலாம். அவர்களை ‘உயர் அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ என்று பவுல் குறிப்பிட்டார்; அவர்களை ‘ராஜா’ என்றும், ராஜாவின் ‘ஆளுநர்கள்’ என்றும் பேதுரு குறிப்பிட்டார்.—ரோ 13:1-7; 1பே 2:13-17; தீத் 3:1; சொல் பட்டியலில் “சீஸர்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

வரி: நே.மொ., “தலைவரி.” இது வருஷா வருஷம் செலுத்தப்பட்ட வரி. அநேகமாக, ஒரு தினாரியுவாக, அதாவது ஒருநாள் கூலியாக, இது இருந்திருக்கலாம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெயர்ப்பதிவு செய்யப்பட்ட எல்லாரிடமிருந்தும் இந்தத் தொகையைத் தலைவரியாக ரோமர்கள் வசூலித்தார்கள்.—லூ 2:1-3.

வெளிவேஷக்காரர்களே: மத் 6:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தினாரியுவை: தினாரியு என்பது ரோம வெள்ளிக் காசு. அதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. ரோமர்கள் யூதர்களிடமிருந்து ஒரு தினாரியுவை ‘வரியாக’ வசூலித்தார்கள். (மத் 22:17) இயேசுவின் காலத்தில், ஒரு நாளுக்கு 12 மணிநேரம் வயலில் வேலை செய்தவர்களுக்குப் பொதுவாக ஒரு தினாரியு கூலி கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், சில பொருள்களின் விலையைச் சொல்வதற்கு அடிக்கடி தினாரியுவைப் பயன்படுத்துகிறது. (மத் 20:2; மாற் 6:37; 14:5; வெளி 6:6) இஸ்ரவேலில் பல விதமான செம்புக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் பயன்படுத்தப்பட்டன. தீருவில் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் காசுகள் ஆலய வரி செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் ரோமர்களுக்கு வரி செலுத்த, ரோம அரசனின் உருவத்தைக் கொண்ட வெள்ளி தினாரியுவை மக்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.​—சொல் பட்டியலில் “தினாரியு” என்ற தலைப்பையும், இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.

உருவமும் பட்டப்பெயரும்: அந்தச் சமயத்தில் புழக்கத்தில் இருந்த தினாரியுவின் முன்பக்கத்தில், புன்னை இலைக் கிரீடம் அணிந்த ரோமப் பேரரசன் திபேரியுவின் உருவம் இருந்தது. (இவர் கி.பி. 14-லிருந்து கி.பி. 37 வரை ஆட்சி செய்தார்.) அதோடு, லத்தீனில் இப்படி எழுதப்பட்டிருந்தது: “தெய்வமாக வணங்கப்படும் அகஸ்துவின் மகனாகிய ரோம அரசன் திபேரியு அகஸ்து.”​—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

அரசனுடையதை அரசனுக்கும்: இந்த வசனத்தையும் இதன் இணைவசனங்களையும் (மாற் 12:17; லூ 20:25) தவிர, வேறெங்கும் ரோமப் பேரரசனைப் பற்றி இயேசு குறிப்பிட்டதாகச் சொல்லப்படவில்லை. ‘அரசனுடையது’ என்பது, அரசாங்க சேவைகளுக்காகச் செலுத்தப்படும் பணத்தைக் குறிக்கிறது; அதோடு, அரசாங்க அதிகாரிகளுக்குக் காட்ட வேண்டிய மதிப்பையும், கடவுளுடைய சட்டங்களுக்கு முரணாக இல்லாத விஷயங்களில் அவர்களுக்குக் காட்ட வேண்டிய கீழ்ப்படிதலையும்கூட குறித்தது.—ரோ 13:1-7.

கடவுளுடையதைக் கடவுளுக்கும்: முழு இதயத்தோடு கடவுளை வணங்குவதையும், முழு மூச்சோடு அவர்மேல் அன்பு காட்டுவதையும், எப்போதுமே அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதையும் இது குறிக்கிறது.—மத் 4:10; 22:37, 38; அப் 5:29; ரோ 14:8.

உயிர்த்தெழுதல்: கிரேக்கில், அனஸ்டாசிஸ். இதன் நேரடி அர்த்தம், “எழுவது, நிற்பது.” உயிர்த்தெழுதல் சம்பந்தமாக கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சுமார் 40 தடவை இந்த வார்த்தையைக் பயன்படுத்தியுள்ளது. (மத் 22:31; அப் 4:2; 24:15; 1கொ 15:12, 13) ஏசா 26:19-ல் “இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள்” என்ற வார்த்தைகள் வருகின்றன. இங்கே “உயிர்பெறுதல்” என்பதற்கான எபிரெய வினைச்சொல்லுக்கு அனஸ்டாசிஸ் என்பதன் வினை வடிவத்தை செப்டுவஜன்ட் பயன்படுத்தியுள்ளது.​—சொல் பட்டியலைப் பாருங்கள்.

வேதவசனங்களும்: வேதவசனங்கள் என்ற வார்த்தை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட எபிரெய வேதாகமம் முழுவதையும் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயிரோடு எழுப்பப்படுவது: மத் 22:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கடவுள் . . . சொன்னதை: சுமார் கி.மு. 1514-ல் மோசேயிடம் யெகோவா பேசியதைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார். (யாத் 3:2, 6) அந்தச் சமயத்தில், ஆபிரகாம் இறந்து 329 வருஷங்களும், ஈசாக்கு இறந்து 224 வருஷங்களும், யாக்கோபு இறந்து 197 வருஷங்களும் ஆகியிருந்தன. ஆனாலும், ‘நான் அவர்களுடைய கடவுளாக இருந்தேன்’ என்று யெகோவா சொல்லவில்லை. ‘நான் அவர்களுடைய கடவுளாக இருக்கிறேன்’ என்றுதான் சொன்னார்.—மத் 22:32.

இறந்தவர்களின் கடவுளாக அல்ல: மிகவும் பழமையான மற்றும் நம்பகமான பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகளில் இப்படிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில கையெழுத்துப் பிரதிகளில், “கடவுள்” என்ற வார்த்தை இன்னொரு தடவை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, “கடவுள் இறந்தவர்களின் கடவுளாக அல்ல” என்று கொடுக்கப்பட்டுள்ளது. சில பைபிள்கள் இதன்படி மொழிபெயர்த்திருக்கின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எபிரெயுவில் மொழிபெயர்த்திருக்கும் ஒரு பைபிள் (இணைப்பு C-ல் J18என்று குறிப்பிடப்பட்டுள்ளது), கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களை இங்கே பயன்படுத்தியிருக்கிறது; அதன்படி, “யெகோவா இறந்தவர்களின் கடவுளாக அல்ல” என்று மொழிபெயர்க்கலாம்.—யாத் 3:6, 15-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்: மாற் 12:27-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

வாயை அடைத்துவிட்டார்: இதற்கான கிரேக்க வினைச்சொல்லை, “பேச முடியாதபடி செய்துவிட்டார் (நே.மொ., “வாயைக் கட்டிவிட்டார்”) என்றும் மொழிபெயர்க்கலாம். கெட்ட எண்ணத்தோடு கேள்வி கேட்கப்பட்டதால் இந்த வார்த்தைகள் பொருத்தமாக இருக்கின்றன. இயேசு மிகவும் திறமையாகப் பதில் சொன்னதால், சதுசேயர்களால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.—1பே 2:15.

யெகோவாமேல்: இந்த வசனம் உபா 6:5-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.​—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

இதயத்தோடும்: வே.வா., “உள்ளத்தோடும்.” ‘இதயம்’ என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது, ஒருவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைப் பொதுப்படையாகக் குறிக்கிறது. ஆனால், ‘மூச்சு,’ ‘மனம்’ ஆகிய வார்த்தைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படும்போது, குறிப்பாக ஒருவருடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் அர்த்தப்படுத்துவதாகத் தெரிகிறது. இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் மூன்று வார்த்தைகளும் (இதயம், மூச்சு, மனம்), முற்றிலும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்கும் வார்த்தைகள் அல்ல; அவை ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட வார்த்தைகள்தான். கடவுள்மேல் முற்றும் முழுமையாக அன்பு காட்ட வேண்டும் என்பதை எந்தளவுக்கு வலிமையோடு வலியுறுத்த முடியுமோ, அந்தளவுக்கு வலிமையோடு வலியுறுத்துவதற்காக அவை சேர்த்து சொல்லப்பட்டிருக்கின்றன.

மூச்சோடும்: வே.வா., “முழு ஜீவனோடும்.”​—சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.

மனதோடும்: அதாவது, “அறிவுத்திறனோடும்.” ஒருவர் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவர்மேல் அன்பை வளர்த்துக்கொள்ளவும் தன்னுடைய அறிவுத்திறனைப் பயன்படுத்த வேண்டும். (யோவா 17:3; ரோ 12:1) இந்த வசனம் உபா 6:5-ஐ மேற்கோள் காட்டுகிறது. அதன் மூல எபிரெயப் பதிவில், ‘இதயம், மூச்சு, பலம்’ ஆகிய மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கிரேக்க மொழியில் உள்ள மத்தேயுவின் பதிவில், ‘பலம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘மனம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, பழங்கால எபிரெய மொழியில் ‘மனம்’ என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட வார்த்தையும் இருக்கவில்லை; அதோடு, ‘இதயம்’ என்ற எபிரெய வார்த்தை பெரும்பாலும் மனதையும் குறித்தது. ‘இதயம்’ என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது, ஒருவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது; அதாவது, அவருடைய யோசனைகள், உணர்ச்சிகள், மனப்பான்மை, நோக்கம் போன்ற எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. (உபா 29:4, அடிக்குறிப்பு; சங் 26:2; 64:6; இதயத்தோடும் என்ற வார்த்தைக்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அதனால்தான், எபிரெயப் பதிவில் ‘இதயம்’ என்று வரும் இடங்களில், ‘மனம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தையை செப்டுவஜன்ட் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறது. (ஆதி 8:21; 17:17; நீதி 2:10; ஏசா 14:13) உபா 6:5-ஐ மேற்கோள் காட்டும்போது, ‘பலம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘மனம்’ என்ற வார்த்தையை மத்தேயு பயன்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். ‘பலம்’ என்பதற்கான எபிரெய வார்த்தை உடல் பலத்தை மட்டுமல்லாமல், மனோபலத்தை அல்லது அறிவுத்திறனைக்கூட குறிக்கும். எப்படியிருந்தாலும், எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் இப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவையாக இருந்ததால்தான், உபாகமம் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியபோது சுவிசேஷ எழுத்தாளர்கள் அதே வார்த்தையைப் பயன்படுத்தாமல் வேறு வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.​—மத் 22:37; லூ 10:27-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

இரண்டாம்: பரிசேயன் கேட்ட கேள்விக்கு இயேசு சொன்ன நேரடியான பதிலைப் பற்றி மத் 22:37 சொல்கிறது. அப்படி நேரடியாகப் பதில் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூடுதலாக இரண்டாவது கட்டளையையும் இயேசு மேற்கோள் காட்டியதை (லேவி 19:18) பற்றி இந்த வசனம் சொல்கிறது. இயேசு அந்த இரண்டு கட்டளைகளையுமே குறிப்பிடுவதன் மூலம், அவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருந்ததைக் காட்டினார்; அவைதான் திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் சாராம்சம் என்பதையும் காட்டினார்.—மத் 22:40.

மற்றவர்கள்மேலும்: வே.வா., “சக மனிதர்மேலும்.” இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “பக்கத்தில் இருப்பவர்.” அந்த வார்த்தை, ஒருவருக்குப் பக்கத்தில் வாழ்கிறவர்களை மட்டுமல்ல, அவர் யாரையெல்லாம் சந்திக்கிறாரோ அவர்கள் எல்லாரையும் குறிக்கலாம்.—லூ 10:29-37; ரோ 13:8-10; மத் 5:43-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும்: மத் 5:17-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அடிப்படையாக இருக்கின்றன: இதற்கான கிரேக்க வினைச்சொல்லின் நேரடி அர்த்தம், “உறுதியாகப் பிடித்துக்கொண்டு இருக்கின்றன.” பத்துக் கட்டளைகள் அடங்கிய திருச்சட்டத்துக்கு மட்டுமல்லாமல், எபிரெய வேதாகமம் முழுவதற்குமே அன்புதான் அடிப்படை என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.—ரோ 13:9.

கிறிஸ்துவை: வே.வா., “மேசியாவை.”​—மத் 1:1; 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

யெகோவா: இந்த வசனம் சங் 110:1-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.​—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

உன் காலடியில் வீழ்த்தும்வரை: அதாவது, “உன் அதிகாரத்துக்கு அடிபணிய வைக்கும்வரை.”

மீடியா

ரோம அரசன் திபேரியு
ரோம அரசன் திபேரியு

திபேரியு கி.மு. 42-ல் பிறந்தான். கி.பி. 14-ல் அவன் ரோமப் பேரரசின் இரண்டாவது அரசனாக ஆனான். கி.பி. 37, மார்ச் மாதம்வரை அவன் வாழ்ந்தான். இயேசு ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவன்தான் அரசனாக இருந்தான். அதனால், ‘அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்’ என்று வரி கட்டுவது சம்பந்தமாக இயேசு சொன்னபோது திபேரியுதான் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான்.—மாற் 12:14-17; மத் 22:17-21; லூ 20:22-25.