மத்தேயு எழுதியது 23:1-39
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்: வே.வா., “மோசேயின் இடத்தில் தங்களை நியமித்துக்கொண்டார்கள்.” மோசேயைப் போல் கடவுளுடைய சட்டத்தை விளக்கும் அதிகாரம் தங்களுக்கு இருந்ததாக அகங்காரத்தோடு சொல்லிக்கொண்டார்கள்.
பாரமான சுமைகளை: அநேகமாக, மக்களுக்குப் பாரமாக இருந்த சட்டதிட்டங்களையும் வாய்மொழி பாரம்பரியங்களையும் குறிக்கிறது.
தங்களுடைய விரலினால்கூட அவற்றைத் தொடுவதற்கு: மதத் தலைவர்கள் மக்கள்மேல் பாரமான சுமைகளைச் சுமத்தினார்கள். அவர்களுடைய பாரத்தைக் குறைக்க ஒரு சின்ன சட்டதிட்டத்தைக்கூட நீக்க அவர்கள் தயாராக இல்லாததை இந்த வார்த்தைகள் குறிக்கலாம்.
தாங்கள் கட்டியிருக்கிற வேதாகமத் தாயத்துகளை: தோலினால் செய்யப்பட்டிருந்த இந்தச் சிறு பைகளுக்குள் திருச்சட்டத்தின் நான்கு பகுதிகள் (யாத் 13:1-10, 11-16; உபா 6:4-9; 11:13-21) வைக்கப்பட்டிருந்தன. யூத ஆண்கள் இவற்றைத் தங்கள் நெற்றியிலும் இடது கையிலும் கட்டியிருந்தார்கள். யாத் 13:9, 16; உபா 6:8; 11:18 ஆகிய வசனங்களில் கடவுள் கொடுத்த அறிவுரையை இஸ்ரவேலர்கள் நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டதால் இந்த வழக்கம் ஆரம்பமானது. மதத் தலைவர்கள் மற்றவர்களைக் கவருவதற்காகத் தங்கள் வேதாகமத் தாயத்துகளைப் பெரிதாக்கினார்கள். அதோடு, ஏதோ மந்திரப்பொருள் போல அவை தங்களைப் பாதுகாக்கும் என்று தவறாக நினைத்தார்கள். அதனால், இயேசு அவர்களைக் கண்டனம் செய்தார்.
ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள்: எண் 15:38-40-ல், இஸ்ரவேலர்கள் தங்கள் அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்கள் வைக்க வேண்டுமென்று கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால் வேத அறிஞர்களும் பரிசேயர்களும், மற்றவர்களுடைய அங்கிகளில் இருந்ததைவிட நீளமான தொங்கல்களைப் பகட்டுக்காக வைத்துக்கொண்டார்கள்.
முன்வரிசை இருக்கைகளிலும்: வே.வா., “மிகச் சிறந்த இருக்கைகளிலும்.” அநேகமாக, ஜெபக்கூடத் தலைவர்களும் முக்கிய விருந்தாளிகளும், எல்லாருடைய பார்வையிலும் படுகிறபடி ஜெபக்கூடத்தின் முன்பக்கத்தில், வேதாகமச் சுருள்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்கள். அப்படிப்பட்ட முக்கியப் பிரமுகர்களுக்காகவே அந்த மதிப்புக்குரிய இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
சந்தைகளில்: வே.வா., “கூடிவரும் இடங்களில்.” சந்தை என்பதற்கான கிரேக்க வார்த்தை, அகோரா. பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகளையும், கிரேக்க நாட்டையும், ரோமையும் சேர்ந்த நகரங்களிலும் ஊர்களிலும் இருந்த திறந்தவெளிப் பகுதிகளை இங்கே குறிக்கிறது. அவை, பொருள்கள் வாங்கப்படுகிற அல்லது விற்கப்படுகிற வியாபார மையங்களாகவும், மக்கள் பொதுவாகக் கூடிவந்த இடங்களாகவும் இருந்தன.
ரபீ: இதன் நேரடி அர்த்தம், “என் மதிப்புக்குரியவர்.” இது, “மதிப்புக்குரிய” அல்லது “மிகச் சிறந்த” என்ற அர்த்தத்தைத் தரும் ராவ் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. “ரபீ” என்ற வார்த்தை “போதகரே” (யோவா 1:38) என்ற அர்த்தத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பிற்பாடு அது ஒரு கௌரவப் பட்டப்பெயராகப் பயன்படுத்தப்பட்டது. கல்வி கற்றவர்களிலும், வேத அறிஞர்களிலும், திருச்சட்டப் போதகர்களிலும் சிலர் அந்தப் பட்டப்பெயரால் மக்கள் தங்களை அழைக்க வேண்டுமென்று கேட்டார்கள்.
தந்தை: வே.வா., “ஃபாதர்.” இந்த வார்த்தையை ஒரு சம்பிரதாய அல்லது மதப் பட்டப்பெயராகவோ கௌரவப் பட்டப்பெயராகவோ மனிதர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று இயேசு இங்கே சொல்கிறார்.
தலைவர் என்றும்: தலைவர் என்பதற்கான கிரேக்க வார்த்தையும், வசனம் 8-ல் வரும் “போதகர்” என்ற வார்த்தையும் இணைச்சொற்களாக இருக்கின்றன. இந்த வசனத்தில், தலைவர் என்ற வார்த்தை வழிநடத்துதலும் அறிவுரையும் தருகிற ஆன்மீகத் தலைவரைக் குறிக்கிறது. இது அநேகமாக ஒரு மதப் பட்டப்பெயராகப் பயன்படுத்தப்பட்டது.
கிறிஸ்து: இந்தப் பட்டப்பெயரின் அர்த்தம், “அபிஷேகம் செய்யப்பட்டவர்.” கிரேக்கில் இந்த வசனத்தில் “கிறிஸ்து” என்ற வார்த்தைக்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா, அதாவது விசேஷ அர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டிருந்த ஒருவர், என்பதை இது காட்டுகிறது.—மத் 1:1; 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
உங்கள் தலைவர்: பாவ இயல்புள்ள எந்த மனிதரும் உண்மைக் கிறிஸ்தவர்களுடைய ஆன்மீகத் தலைவராக இருக்க முடியாது; அதனால், இயேசுவுக்கு மட்டும்தான் இந்தப் பட்டப்பெயர் பொருந்துகிறது.—இந்த வசனத்துக்கான முதல் ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சேவை செய்கிறவராக: வே.வா., “வேலையாளாக.”—மத் 20:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வெளிவேஷக்காரர்களான: மத் 6:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உங்களுக்குக் கேடுதான் வரும்!: அன்று இருந்த மதத் தலைவர்களை வெளிவேஷக்காரர்கள் என்றும், குருட்டு வழிகாட்டிகள் என்றும் இயேசு கண்டனம் செய்தார். அவர்களுக்குக் கேடுதான் வருமென்று அடுத்தடுத்து ஏழு தடவை அவர் சொன்னார். அதில் முதல் தடவை இதுதான்.
சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன: “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஏனென்றால், விதவைகளுடைய வீடுகளை விழுங்கிவிடுகிறீர்கள்; மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீண்ட ஜெபம் செய்கிறீர்கள்; அதனால், உங்களுக்கு மிகப் பெரிய தண்டனை கிடைக்கும்.” ஆனால், மிகவும் பழமையான மற்றும் முக்கியமான பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் இல்லை. இருந்தாலும், இதேபோன்ற வார்த்தைகள் மாற் 12:40; லூ 20:47 ஆகிய வசனங்களில் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டிருக்கின்றன.—இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
உங்கள் மதத்துக்கு மாற்றுவதற்காக: இதற்கான கிரேக்க வார்த்தை, ப்ரோசீலைட்டோஸ். மற்ற தேசத்தாரை யூத மதத்துக்கு மாற்றுவதைப் பற்றி இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி யூத மதத்துக்கு மாற்றப்பட்ட ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது.
கெஹென்னாவுக்கு ஆளாக்குகிறீர்கள்: நே.மொ., “கெஹென்னாவின் மகனாக்குகிறீர்கள்.” அதாவது, நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டியவர்களாக ஆக்குகிறீர்கள்.—சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
முட்டாள்களே! குருடர்களே!: வே.வா., “குருட்டு முட்டாள்களே!” பைபிளில் ‘முட்டாள்’ என்ற வார்த்தை, முன்பின் யோசிக்காமல் புத்திகெட்ட வழியில் போகிறவர்களை, அதாவது கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு முரணாக நடக்கிறவர்களை, பொதுவாகக் குறிக்கிறது.
புதினாவிலும், சதகுப்பையிலும், சீரகத்திலும் பத்திலொரு பாகத்தை: திருச்சட்டத்தின்படி, இஸ்ரவேலர்கள் தங்களுடைய விளைச்சலில் பத்திலொரு பாகத்தைச் செலுத்த வேண்டியிருந்தது. (லேவி 27:30; உபா 14:22) புதினா, சதகுப்பை, சீரகம் போன்ற மூலிகைகளில் பத்திலொரு பாகத்தைக் கொடுக்க வேண்டுமென்று திருச்சட்டம் குறிப்பாகச் சொல்லவில்லை என்றாலும், அந்தப் பாரம்பரியத்துக்கு எதிராக இயேசு பேசவில்லை. அதற்குப் பதிலாக, வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் அவர் கண்டனம் செய்தார். ஏனென்றால், அவர்கள் திருச்சட்டத்தின் நுணுக்கமான விவரங்களுக்குக் கவனம் செலுத்திவிட்டு, அதற்கு அடிப்படையாக இருந்த முக்கியமான நியமங்களை, அதாவது நியாயம், இரக்கம், விசுவாசம் போன்றவற்றை, அலட்சியம் செய்தார்கள்.
கொசுவை வடிகட்டிவிட்டு, ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறீர்கள்!: இஸ்ரவேலர்களுக்குத் தெரிந்த அசுத்தமான உயிரினங்களில் மிகச் சிறியது கொசு, மிகப் பெரியது ஒட்டகம். (லேவி 11:4, 21-24) இயேசு இங்கே உயர்வு நவிற்சி அணியைக் கொஞ்சம் நக்கலாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு கொசுவினால் தீட்டுப்படாமல் இருப்பதற்காக மதத் தலைவர்கள் தங்களுடைய பானங்களை வடிகட்டினார்கள்; ஆனால், திருச்சட்டத்தில் இருந்த மிக முக்கியமான கட்டளைகளை அவர்கள் ஒரேயடியாக அலட்சியம் செய்தார்கள்; அது, ஒட்டகத்தை விழுங்குவதுபோல் இருந்தது.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளை: இஸ்ரவேலில் கல்லறைகளை வெள்ளையடிப்பது வழக்கமாக இருந்தது. அந்தப் பக்கமாக வந்துபோகிற யாரும் தற்செயலாக அதைத் தொட்டு, தீட்டுப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அது வெள்ளையடிக்கப்பட்டது. (எண் 19:16) வருஷா வருஷம், பஸ்காவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அது வெள்ளையடிக்கப்பட்டதாக யூதர்களின் மிஷ்னா (ஷெக்கலிம் 1:1) சொல்கிறது. வெளிவேஷத்துக்கு உருவகமாக இயேசு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
அக்கிரமமும்தான்: மத் 24:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சமாதிகளை: வே.வா., “நினைவுக் கல்லறைகளை.”—சொல் பட்டியலில் “நினைவுக் கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.
உங்கள் முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த காரியங்களை நீங்கள் முடித்துவிடுங்கள்: இந்த மரபுத்தொடரின் நேரடி அர்த்தம், “இன்னொருவர் நிரப்ப ஆரம்பித்த அளவையை நிரப்பி முடிப்பது.” யூதத் தலைவர்கள் தங்களுடைய முன்னோர்கள் ஆரம்பித்ததை முடிக்க வேண்டுமென்று இயேசு சொல்லவில்லை. அவர்களுடைய முன்னோர்கள் பழங்காலத் தீர்க்கதரிசிகளை எப்படிக் கொன்றார்களோ அப்படியே இவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதைத்தான் கொஞ்சம் நக்கலாகச் சொன்னார்.
பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே: “பழைய பாம்பாகிய” (வெளி 12:9) சாத்தான், அடையாள அர்த்தத்தில், உண்மை வணக்கத்தை எதிர்ப்பவர்களின் மூதாதையாக இருக்கிறான். அதனால், இயேசு இந்த மதத் தலைவர்களை, “பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே” என்று சொன்னதில் நியாயம் இருக்கிறது. (யோவா 8:44; 1யோ 3:12) அவர்களுடைய அக்கிரமத்தினாலும் ஆன்மீக ரீதியில் அவர்கள் செய்த பயங்கரமான கெடுதலினாலும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். யோவான் ஸ்நாகரும் அவர்களை “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று அழைத்தார்.—மத் 3:7.
கெஹென்னாவின்: மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பையும் பாருங்கள்.
போதகர்களையும்: வே.வா., “அறிஞர்களையும்.” இதற்கான கிரேக்க வார்த்தை, ஃக்ராம்மாட்டியஸ். திருச்சட்டத்தைப் போதித்த யூதர்களைக் குறிக்கும்போது அது “வேத அறிஞர்கள்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் இந்த வசனத்தில், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக அனுப்பப்படவிருந்த தன் சீஷர்களைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
ஜெபக்கூடங்களில்: சொல் பட்டியலில் “ஜெபக்கூடம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல், . . . சகரியாவின் இரத்தம்வரை: யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருந்தவர்களில் கொலை செய்யப்பட்ட எல்லாரையும் இயேசு அர்த்தப்படுத்தினார்; அதாவது, எபிரெய வேதாகமத்தின் முதல் புத்தகத்தில் (ஆதி 4:8) சொல்லப்படும் ஆபேல் முதற்கொண்டு, 2நா 24:20-ல் சொல்லப்படும் சகரியா வரைக்கும் எல்லாரையும் அர்த்தப்படுத்தினார். யூதர்களுடைய பாரம்பரிய அதிகாரப்பூர்வ பட்டியலில் கடைசி புத்தகம் சகரியாதான். அதனால், ‘ஆபேல்முதல் . . . சகரியாவரை’ என்று இயேசு சொன்னபோது, ‘முதலில் கொல்லப்பட்டவரிலிருந்து கடைசியில் கொல்லப்பட்டவர்வரை’ என்று அர்த்தப்படுத்தினார்.
பரகியாவின் மகனும்: 2நா 24:20-ன்படி, இந்த சகரியா “குருவாகிய யோய்தாவின் மகன்.” பைபிளில் வரும் மற்ற நபர்களைப் போலவே யோய்தாவுக்கும் இரண்டு பெயர்கள் இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். (மத் 9:9-ஐ மாற் 2:14 வசனத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அல்லது, பரகியா என்பவர் சகரியாவின் தாத்தாவாகவோ மூதாதையாகவோ இருந்திருக்கலாம் என்றுகூட சொல்கிறார்கள்.
பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே: 2நா 24:21-ன்படி, சகரியா “யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரத்தில்” கொலை செய்யப்பட்டார். தகன பலிக்கான பலிபீடம் உட்பிரகாரத்தில் இருந்தது; அதாவது, ஆலயத்தின் முக்கியக் கட்டிடத்துக்கு வெளியே, அதன் நுழைவாசலுக்கு முன்பக்கத்தில் இருந்தது. (இணைப்பு B8-ஐப் பாருங்கள்.) அதனால், பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே சகரியா கொல்லப்பட்டதாக இயேசு சொன்னது சரியாக இருக்கிறது.
நீங்கள் கொலை செய்தவருமான: அந்த யூத மதத் தலைவர்கள் சகரியாவைக் கொலை செய்யவில்லை என்றாலும், அவர்கள்தான் சகரியாவின் சாவுக்குப் பொறுப்பாளிகள் என்று இயேசு சொன்னார். ஏனென்றால், அவர்களுடைய முன்னோர்களைப் போலவே அவர்களும் கொலைவெறியோடு இருந்தார்கள்.—வெளி 18:24.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
இதோ!: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வீடு: அதாவது, “ஆலயம்.”
ஒதுக்கித்தள்ளப்பட்டு உங்களிடமே விடப்படும்: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில், “பாழாக்கப்பட்டு” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
யெகோவாவின்: இந்த வசனம் சங் 118:26-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
மீடியா
தோலினால் செய்யப்பட்டிருந்த இந்தச் சிறு பைகளுக்குள் திருச்சட்டத்தின் நான்கு பகுதிகள் (யாத் 13:1-10, 11-16; உபா 6:4-9; 11:13-21) வைக்கப்பட்டிருந்தன. யூதர்கள் பாபிலோனிலிருந்து விடுதலையாகி வந்த கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, காலைநேர ஜெபங்களின்போது ஆண்கள் வேதாகமத் தாயத்துகளை அணியும் வழக்கம் ஆரம்பமானது. பண்டிகை நாட்களிலும் ஓய்வுநாளிலும் மட்டும் அவர்கள் அவற்றை அணியவில்லை. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அசல் வேதாகமத் தாயத்தின் போட்டோதான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. கும்ரான் குகைகள் ஒன்றில் அது கண்டெடுக்கப்பட்டது. அந்த வேதாகமத் தாயத்து புதிதாக இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டுகிறது.
முதல் நூற்றாண்டில், மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடது முழங்கையை ஒரு திண்டுமேல் அல்லது தலையணைமேல் வைத்துக்கொண்டு, வலது கையால் சாப்பிட்டார்கள். கிரேக்க-ரோம வழக்கத்தின்படி, சாப்பாட்டு அறையில் தாழ்வான ஒரு மேஜையும், அதைச் சுற்றி உட்காருவதற்கு மூன்று மெத்தைகளும் இருந்தன. இப்படிப்பட்ட சாப்பாட்டு அறையை ரோமர்கள் ட்ரைக்லீனியம் என்று அழைத்தார்கள். (இந்த லத்தீன் வார்த்தை, “மூன்று மெத்தைகள் கொண்ட அறை” என்ற அர்த்தத்தைத் தருகிற ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.) ஆரம்பத்தில், இப்படிப்பட்ட மேஜையைச் சுற்றி ஒன்பது பேர் உட்காருவது வழக்கமாக இருந்தது; ஒவ்வொரு மெத்தையிலும் மூன்று பேர் உட்கார்ந்தார்கள். ஆனால் பிற்பாடு, அதைவிட அதிகமானவர்கள் உட்காருவதற்கு வசதியாக இன்னும் நீளமான மெத்தைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய மதிப்பு கூடியதாகவோ குறைந்ததாகவோ நம்பப்பட்டது. முதல் மெத்தைக்கு மிகவும் குறைந்த மதிப்பு இருந்ததாகவும் (A), இரண்டாவது மெத்தைக்கு ஓரளவு மதிப்பு இருந்ததாகவும் (B), மூன்றாவது மெத்தைக்கு மிக அதிக மதிப்பு இருந்ததாகவும் (C) நம்பப்பட்டது. ஒவ்வொரு மெத்தையிலும்கூட எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பு கூடியது அல்லது குறைந்தது. ஒருவர் தன்னுடைய வலது பக்கத்தில் இருந்தவரைவிட அதிக மதிப்புள்ளவராகவும், தன்னுடைய இடது பக்கத்தில் இருந்தவரைவிட குறைந்த மதிப்புள்ளவராகவும் கருதப்பட்டார். விருந்து கொடுப்பவர் மிகவும் தாழ்வான மெத்தையின் முதல் இடத்தில் (1) பொதுவாக உட்கார்ந்தார். நடுவிலிருந்த மெத்தையின் மூன்றாவது இடம் (2) மிகவும் மதிப்புள்ளதாக இருந்தது. இந்த வழக்கத்தை யூதர்கள் எந்தளவுக்குப் பின்பற்றினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை; ஆனாலும், மனத்தாழ்மையின் அவசியத்தைப் பற்றி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது இந்த வழக்கத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இந்த அனிமேஷன் வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் காட்சி, காம்லாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நூற்றாண்டு ஜெபக்கூடத்தின் இடிபாடுகளை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. காம்லா என்பது கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் அமைந்திருந்த ஒரு நகரம். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லா ஜெபக்கூடங்களுமே காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன. அதனால், அன்று ஜெபக்கூடம் எப்படி இருந்தது என்று சரியாகத் தெரியவில்லை. இந்த அனிமேஷனில் காட்டப்படுகிற சில அம்சங்கள், அந்தக் காலத்திலிருந்த நிறைய ஜெபக்கூடங்களில் இருந்ததாகத் தெரிகிறது.
1. பேச்சாளர் நிற்கும் மேடையில் அல்லது அதற்குப் பக்கத்தில் ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள், அதாவது முக்கிய இருக்கைகள், இருந்திருக்கலாம்.
2. போதகர் மேடையில் நின்றுகொண்டுதான் திருச்சட்டத்தை வாசித்திருப்பார். மேடை இருந்த இடம் ஒவ்வொரு ஜெபக்கூடத்திலும் வித்தியாசமாக இருந்திருக்கலாம்.
3. சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்கள் சுவர்பக்கமாக இருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருக்கலாம். மற்றவர்கள் தரையில் பாய்களை விரித்து உட்கார்ந்திருக்கலாம். காம்லாவில் இருந்த ஜெபக்கூடத்தில் நான்கு வரிசைகளில் இருக்கைகள் இருந்ததாகத் தெரிகிறது.
4. பரிசுத்த சுருள்களைக் கொண்ட பெட்டி, பின்பக்கச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கலாம்.
ஜெபக்கூடத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்த விதம், சிலருக்கு மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இருந்ததை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. இந்த விஷயத்தைப் பற்றித்தான் இயேசுவின் சீஷர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்தார்கள்.—மத் 18:1-4; 20:20, 21; மாற் 9:33, 34; லூ 9:46-48.
கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் இருக்கும் காம்லா என்ற இடத்தில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெபக்கூடம் இருக்கிறது. அதில் காணப்படும் சில அம்சங்களை இந்தப் படம் சித்தரிக்கிறது. இது, பழங்காலத்தில் ஒரு ஜெபக்கூடம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய உதவுகிறது.
கிரேக்கில் கெஹென்னா என்று அழைக்கப்பட்ட இன்னோம் பள்ளத்தாக்கு, பழங்கால எருசலேமின் தெற்கிலும் தென்மேற்கிலும் இருந்த ஒரு பள்ளத்தாக்கு. இயேசுவின் காலத்தில் அது குப்பைகூளங்களை எரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதனால், முழுமையான அழிவுக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கெஹென்னா என்று அழைக்கப்படும் இன்னோம் பள்ளத்தாக்கு (1). ஆலயப் பகுதி (2). முதல் நூற்றாண்டில் யூதர்களுடைய ஆலயம் இங்குதான் இருந்தது. இன்று இங்கு மிகவும் பிரபலமான ஒரு மசூதி இருக்கிறது. அது பாறை மாடக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.—இணைப்பு B12-ல் உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.
பழங்காலத்திலிருந்தே, மருந்து தயாரிப்பதற்கும் உணவுக்குச் சுவை சேர்ப்பதற்கும் புதினா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கிரேக்க வார்த்தை ஹிடையோஸ்மோன் (நேரடி அர்த்தம், “இனிய வாசனைகொண்டது”). இது இஸ்ரவேலிலும் சீரியாவிலும் பொதுவாகக் காணப்படும் ஹார்ஸ்மின்ட் (மென்த்தா லாங்கிஃபோலியா) போன்ற பல வகையான புதினாக்களைக் குறிக்கிறது. சதகுப்பை செடி (அனெத்தம் கிராவியோலென்ஸ்), வாசனையான விதைகளுக்காகப் பயிர் செய்யப்படுகிறது. அதன் விதைகள் உணவில் சேர்க்கப்படும் வாசனைப் பொருளாகவும், வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சீரகச் செடி (க்யூமினம் சைமினம்), கேரட் அல்லது பார்ஸ்லி குடும்பத்தைச் சேர்ந்தது. வாசனையான விதைகளுக்கு அது பேர்போனது. மத்தியக் கிழக்கு நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் ரொட்டி, கேக், கூழ் ஆகியவற்றிலும், மதுபானங்களிலும்கூட சுவைக்காகவும் வாசனைக்காகவும் அந்த விதைகள் சேர்க்கப்படுகின்றன.
இயேசுவின் காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் வளர்க்கப்பட்ட விலங்குகளிலேயே ஒட்டகம்தான் மிகப் பெரியதாக இருந்தது. பைபிளில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கும் ஒட்டகம் அரபிய ஒட்டகமாக (காமெலஸ் டிரோமெடாரியஸ்) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கு ஒரேவொரு திமில்தான் இருக்கும். ஆபிரகாம் எகிப்தில் தற்காலிகமாகத் தங்கியதைப் பற்றிய பதிவில்தான், சுமை சுமக்கும் விலங்காகிய ஒட்டகத்தைப் பற்றி பைபிள் முதன்முதலில் குறிப்பிடுகிறது. எகிப்தில் ஆபிரகாமுக்கு நிறைய ஒட்டகங்கள் கிடைத்தன.—ஆதி 12:16.
யோவான் ஸ்நானகரும் சரி, இயேசுவும் சரி, வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று அழைத்தார்கள். ஏனென்றால், ஆன்மீக ரீதியில் அவர்கள் செய்த கெடுதல், அப்பாவி மக்களுக்குக் கொடிய விஷம்போல் இருந்தது. (மத் 3:7; 12:34) படத்தில் காட்டப்பட்டிருப்பது கொம்பு விரியன். அதனுடைய இரண்டு கண்களுக்கும் மேலே கூர்மையான ஒரு சின்ன கொம்பு இருப்பது அதன் விசேஷம். இஸ்ரவேலில் பொதுவாகக் காணப்படும் மற்ற கொடிய விரியன்கள் இவைதான்: யோர்தான் பள்ளத்தாக்கில் இருக்கும் மணல் விரியன் (வைப்பெரா அம்மோடைட்டிஸ்); பாலஸ்தீனிய விரியன் (வைப்பெரா பாலஸ்ட்டீனா).
சாட்டையடி கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மிகப் பயங்கரமான கருவி ஃப்ளஜெல்லம் என்று அழைக்கப்பட்டது. இந்தச் சாட்டையில், நிறைய கயிறுகளோ பின்னப்பட்ட தோல் வார்களோ ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்பட்டிருந்தன. வலியைக் கூட்டுவதற்காக அந்தத் தோல் வார்களில் கூர்மையான எலும்புகளோ உலோகப் பொருள்களோ இணைக்கப்பட்டிருந்தன.
ஒரு கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே பாதுகாப்பது போல எருசலேம் மக்களைப் பாதுகாக்க தான் விரும்பியதாக இயேசு சொன்னார். மனதைத் தொடும் இந்த உவமையும், அப்பாவிடம் முட்டையைக் கேட்கும் மகனைப் பற்றிய உதாரணமும் (லூ 11:11, 12), முதல் நூற்றாண்டு இஸ்ரவேலில் கோழிகள் பொதுவாக வீட்டில் வளர்க்கப்பட்டதைக் காட்டுகின்றன. மத் 23:37 மற்றும் லூ 13:34-ல் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையான ஆர்னிஸ், எந்தவொரு காட்டுப் பறவையையோ வீட்டுப் பறவையையோ குறிக்கலாம் என்றாலும், இந்த உவமையில் அது கோழியைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. பறவைகளிலேயே அதுதான் மிக அதிகமாக வளர்க்கப்பட்டது, மிகப் பிரயோஜனமாகவும் இருந்தது.