மத்தேயு எழுதியது 24:1-51

24  ஆலயத்தைவிட்டு இயேசு புறப்பட்டுப் போனபோது, அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து ஆலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள்.  அப்போது அவர், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்களே, உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே நிச்சயமாகத் தரைமட்டமாக்கப்படும்”+ என்று அவர்களிடம் சொன்னார்.  பின்பு, அவர் ஒலிவ மலையில்+ உட்கார்ந்திருந்தார்; சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும்+ இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும்+ அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.  அதற்கு இயேசு, “உங்களை யாரும் ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+  ஏனென்றால், நிறைய பேர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நான்தான் கிறிஸ்து’ என்று சொல்லி நிறைய பேரை ஏமாற்றுவார்கள்.+  போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்; இருந்தாலும், திகிலடையாதீர்கள். இதெல்லாம் நடக்க வேண்டும், ஆனால் முடிவு அப்போதே வராது.+  ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும்* சண்டை போடும்,+ அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும்+ நிலநடுக்கங்களும்+ ஏற்படும்.  இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.  அப்போது மக்கள் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்,+ கொலையும் செய்வார்கள்;+ நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா தேசத்து மக்களும் உங்களை வெறுப்பார்கள்.+ 10  அதோடு, பலர் விசுவாசத்தைவிட்டு விலகிவிடுவார்கள், ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பார்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். 11  போலித் தீர்க்கதரிசிகள் பலர் வந்து நிறைய பேரை ஏமாற்றுவார்கள்;+ 12  அக்கிரமம் அதிகமாவதால் பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்.+ 13  ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.+ 14  கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்;+ பின்பு முடிவு வரும். 15  அதனால், தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டபடி, பாழாக்கும் அருவருப்பு பரிசுத்தமான இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது+ (வாசிப்பவர் பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைப் புரிந்துகொள்ளட்டும்), 16  யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்.+ 17  வீட்டு மாடியில் இருப்பவர் தன் வீட்டிலிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டு போவதற்காகக் கீழே இறங்கி வர வேண்டாம். 18  வயலில் இருப்பவர் தன் மேலங்கியை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம்.+ 19  அந்த நாட்களில் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஐயோ, ஆபத்து!+ 20  குளிர் காலத்திலோ ஓய்வுநாளிலோ ஓடிப்போக வேண்டிய நிலை உங்களுக்கு வந்துவிடக் கூடாதென்று ஜெபம் செய்துகொண்டிருங்கள். 21  ஏனென்றால், அப்போது மிகுந்த உபத்திரவம்+ உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை.+ 22  சொல்லப்போனால், அந்த நாட்கள் குறைக்கப்படவில்லை என்றால் யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்; ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக அந்த நாட்கள் குறைக்கப்படும்.+ 23  அப்போது யாராவது உங்களிடம், ‘இதோ! கிறிஸ்து இங்கே இருக்கிறார்,’+ ‘அதோ! அங்கே இருக்கிறார்’ என்று சொன்னால் நம்பாதீர்கள்.+ 24  ஏனென்றால், போலிக் கிறிஸ்துக்களும் போலித் தீர்க்கதரிசிகளும்+ வருவார்கள்; முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக்கூட ஏமாற்றுவதற்குப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.+ 25  இதோ! முன்கூட்டியே உங்களை எச்சரித்துவிட்டேன். 26  அதனால் யாராவது உங்களிடம், ‘அதோ! அவர் வனாந்தரத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், புறப்பட்டுப் போகாதீர்கள்; ‘இதோ! அவர் வீட்டின் உள்ளறைக்குள் இருக்கிறார்’ என்று சொன்னால், நம்பாதீர்கள்.+ 27  ஏனென்றால், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை மின்னுவதுபோல் மனிதகுமாரனின் பிரசன்னமும் இருக்கும்.+ 28  பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.+ 29  அந்த நாட்களின் உபத்திரவத்துக்குப் பின்பு, உடனடியாகச் சூரியன் இருண்டுவிடும்,+ சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.+ 30  பின்பு, மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும். பின்பு, பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தாரும் நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.+ அதோடு, மனிதகுமாரன்+ வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்* வானத்து மேகங்கள்மேல் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.+ 31  எக்காள சத்தம் முழங்க அவர் தன்னுடைய தேவதூதர்களை அனுப்புவார்; கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை, நான்கு திசைகளிலிருந்தும் அவர்கள் கூட்டிச்சேர்ப்பார்கள்.+ 32  அத்தி மர உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள்.+ 33  அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கதவுக்குப் பக்கத்திலேயே அவர் வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.+ 34  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது. 35  வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது.+ 36  அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர+ வேறு யாருக்கும் தெரியாது,+ பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது. 37  நோவாவின் நாட்களில் நடந்தது போலவே+ மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும்.+ 38  எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள்* நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள்.+ 39  பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை;+ மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும். 40  அப்போது, இரண்டு ஆண்கள் வயலில் இருப்பார்கள்; ஒருவன் அழைத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். 41  இரண்டு பெண்கள் கல்லில்* மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி அழைத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.+ 42  அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமான் எந்த நாளில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது.+ 43  ஆனால், ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: ராத்திரி எந்த நேரத்தில் திருடன் வருவான்+ என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து, வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் பார்த்துக்கொள்வார்.+ 44  அதனால், நீங்களும் தயாராக இருங்கள்;+ ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார். 45  ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?+ 46  எஜமான் வரும்போது அப்படிச் செய்துகொண்டிருக்கிற அடிமையே சந்தோஷமானவன்!+ 47  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார். 48  ஆனால், அந்த அடிமை பொல்லாதவனாக இருந்து, ‘என்னுடைய எஜமான் வரத் தாமதிக்கிறார்’ என்று தன் இதயத்தில் சொல்லிக்கொண்டு,+ 49  சக அடிமைகளை அடிக்கவும் குடிகாரர்களோடு சேர்ந்து சாப்பிட்டுக் குடிக்கவும் ஆரம்பித்தால் என்ன ஆகும்? 50  அவன் எதிர்பார்க்காத நாளில், அவனுக்குத் தெரியாத நேரத்தில் அவனுடைய எஜமான் வந்து,+ 51  அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்; வெளிவேஷக்காரர்கள் தள்ளப்படும் இடத்தில் அவனைத் தள்ளிவிடுவார். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி: இயேசுவின் தீர்க்கதரிசனம் கி.பி. 70-ல் குறிப்பிடத்தக்க விதத்தில் நிறைவேறியது. அப்போது ரோமர்கள் எருசலேமை அழித்தார்கள். அதன் மதிலில் சில பகுதிகள் தவிர, மற்ற எல்லா பகுதிகளையும் தரைமட்டமாக்கினார்கள்.

ஒலிவ மலையில்: இந்த மலை எருசலேமின் கிழக்கே அமைந்திருந்தது. இதற்கும் எருசலேம் நகரத்துக்கும் இடையில் கீதரோன் பள்ளத்தாக்கு இருந்தது. இயேசுவினாலும் அவருடைய சீஷர்களான ‘பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா’ ஆகியவர்களாலும், (மாற் 13:3, 4) இந்த மலையிலிருந்து நகரத்தையும் அதன் ஆலயத்தையும் பார்க்க முடிந்தது.

பிரசன்னத்துக்கும்: பிரசன்னம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, பரோஸியா. நிறைய பைபிள்கள் இதை “வருகை” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. இதன் நேரடி அர்த்தம், “பக்கத்தில் இருப்பது.” அவர் வருவதை மட்டுமே இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவர் வந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து இருப்பதையே அர்த்தப்படுத்துகிறது. இதைத்தான் மத் 24:37-39 காட்டுகிறது. அங்கே, ‘மனிதகுமாரனுடைய பிரசன்னம்,’ ‘நோவாவின் நாட்களோடு’ ஒப்பிடப்படுகிறது; அதாவது, ‘பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தோடு’ ஒப்பிடப்படுகிறது. பிலி 2:12-ல் இதே கிரேக்க வார்த்தையைத்தான் பவுல் பயன்படுத்தியிருக்கிறார். “நான் உங்களோடு இருந்த சமயத்தில் (பரோஸியா) மட்டுமல்ல, உங்களோடு இல்லாத இந்தச் சமயத்திலும்” என்று அவர் எழுதினார்.

இந்தச் சகாப்தத்தின்: சகாப்தம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஏயோன். இது ஒரு குறிப்பிட்ட காலத்தையோ காலகட்டத்தையோ சகாப்தத்தையோ மற்ற காலப்பகுதிகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற நிலைமைகளை அல்லது அம்சங்களைக் குறிக்கலாம்.—சொல் பட்டியலில் “சகாப்தம் (சகாப்தங்கள்)” என்ற தலைப்பைப் பாருங்கள்.

கடைசிக் கட்டத்துக்கும்: “கடைசிக் கட்டம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, சின்டீலீயா.‏ இதன் அர்த்தம், “ஒன்றுசேர்ந்து முடிவடைவது; ஒட்டுமொத்தமாக முடிவடைவது.” (மத் 13:39, 40, 49; 28:20; எபி 9:26) பல சம்பவங்கள் ஒன்றாக நடந்து, கடைசியில் ஒட்டுமொத்தமாக ஒரு ‘முடிவுக்கு’ வரும் காலப்பகுதியை இது குறிக்கிறது; இந்த ‘முடிவை’ பற்றித்தான் மத் 24:6, 14-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே, டீலாஸ் என்ற வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.​—மத் 24:6, 14-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பையும் பாருங்கள்.

கிறிஸ்து: கிரேக்கில், ஹோ கிறிஸ்டோஸ். இந்தக் கிரேக்கப் பட்டப்பெயருக்கான எபிரெயப் பட்டப்பெயர் “மேசியா” (மஷியாக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது). “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்பதுதான் இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம். கி.பி. முதல் நூற்றாண்டில், ரோமர்களுடைய ஒடுக்குதலிலிருந்து விடுதலை தருவதாகச் சிலர் சொல்லிக்கொண்டதாகவும், அவர்கள் தங்களைத் தீர்க்கதரிசிகள் அல்லது மீட்பர்கள் என்று சொல்லிக்கொண்டதாகவும் யூத சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் எழுதினார். அவர்களைப் பின்பற்றியவர்கள் அவர்களை அரசியல் மேசியாக்களாக அல்லது இரட்சகர்களாகக் கருதியிருப்பார்கள்.

முடிவு: வே.வா., “ஒட்டுமொத்த முடிவு.” இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை டீலாஸ். ஆனால், மத் 24:3-ல் ‘கடைசிக் கட்டம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்டீலீயா.​—மத் 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பையும் பாருங்கள்.

ஜனத்துக்கு: ஜனம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஈத்னோஸ். இது ஒரு குறிப்பிட்ட ஆட்சி எல்லைக்குள் அல்லது புவியியல் எல்லைக்குள் வாழ்கிற மக்களைக் குறிக்கலாம்; உதாரணத்துக்கு, ஒரு நாட்டின் மக்களைக் குறிக்கலாம். அதேசமயத்தில், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களையும் குறிக்கலாம்.​—மத் 24:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சண்டை போடும்: நே.மொ. “எழும்பும்.” வே.வா., “கிளர்ந்தெழும்; கொதித்தெழும்.” இதற்கான கிரேக்க வார்த்தை, “பகையினால் எதிர்ப்புக் காட்டுவது” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதனால், “ஆயுதங்களோடு எழும்பும்” அல்லது “போர் செய்யும்” என்றுகூட அதை மொழிபெயர்க்கலாம்.

வேதனைகளுக்கு: இதற்கான கிரேக்க வார்த்தை, குறிப்பாகப் பிரசவத்தின்போது ஏற்படும் கடும் வலியைக் குறிக்கிறது. ஆனால், இங்கே அது வேதனையையும் வலியையும் துன்பத்தையும் பொதுப்படையாகக் குறிக்கிறது. அதேசமயத்தில், மத் 24:21-ல் சொல்லப்பட்டிருக்கும் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பான காலப்பகுதியில், கஷ்டங்களும் துன்பங்களும் பிரசவ வலியைப் போல அதிகமாகிக்கொண்டே போகும் என்பதை இது குறிக்கலாம். அதாவது, பிரசவ நேரம் நெருங்க நெருங்க, வலி எப்படி இன்னும் அடிக்கடி வருமோ, இன்னும் கடுமையாகுமோ, இன்னும் அதிக நேரத்துக்கு இருக்குமோ, அப்படித்தான் கஷ்டங்களும் அதிகமாகும் என்பதைக் குறிக்கலாம்.

அக்கிரமம்: இதற்கான கிரேக்க வார்த்தை, சட்டங்களை மீறுவது, சட்டங்களை வெறுப்பது, ஏதோ சட்டங்களே இல்லாததுபோல் நடந்துகொள்வது போன்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. பைபிளில் இந்த வார்த்தை, கடவுளுடைய சட்டங்களை மதிக்காமல் நடந்துகொள்வதைக் குறிக்கிறது.—மத் 7:23; 2 தெ 2:3-7.

பெரும்பாலானவர்களின்: இதற்கான கிரேக்க வார்த்தை, “நிறைய பேரை” பொதுப்படையாகக் குறிப்பதில்லை. ஆனால், மத் 24:11, 12-ல் சொல்லப்பட்டுள்ள ‘போலித் தீர்க்கதரிசிகளாலும்’ ‘அக்கிரமத்தினாலும்’ பாதிக்கப்பட்ட “பெரும்பாலான” மக்களைக் குறிக்கிறது.

முடிவுவரை: மத் 24:6, 14-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

சகித்திருப்பவர்தான்: ‘சகித்திருப்பது’ என்பதற்கான கிரேக்க வினைச்சொல்லின் (ஹைப்போமீனோ) நேரடி அர்த்தம், “தொடர்ந்து இருப்பது (தங்குவது).” அது, “ஓடாமல் அதே இடத்தில் இருப்பது; உறுதியாக நிற்பது; விடாமுயற்சி செய்வது; நிலையாக இருப்பது” என்ற அர்த்தங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. (மத் 10:22; ரோ 12:12; எபி 10:32; யாக் 5:11) இந்த வசனத்தில், எதிர்ப்புகளின் மத்தியிலும் சோதனைகளின் மத்தியிலும் தொடர்ந்து கிறிஸ்துவின் சீஷர்களாக வாழ்வதைக் குறிக்கிறது.—மத் 24:9-12.

கடவுளுடைய அரசாங்கத்தை: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதும், “நல்ல செய்தி” என்பது (அடுத்த ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியையே பெரும்பாலும் குறிக்கிறது. இதுதான் இயேசு பிரசங்கித்த மற்றும் கற்பித்த முக்கிய செய்தியாக இருந்தது.​—மத் 3:2; 4:​23; லூ 4:​43-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

இந்த நல்ல செய்தி: நல்ல செய்தி என்பதற்கான கிரேக்க வார்த்தை, யூயாஜீலியான். இது, யூ என்ற வார்த்தையிலிருந்தும் (அர்த்தம், “நல்ல”) யாஜெல்லாஸ் என்ற வார்த்தையிலிருந்தும் (அர்த்தம், “செய்தி கொண்டுவருபவர்; அறிவிப்புச் செய்கிறவர்”) வந்திருக்கிறது. (சொல் பட்டியலைப் பாருங்கள்.) சில பைபிள்களில் இது “சுவிசேஷம்” அல்லது “நற்செய்தி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கிரேக்க வார்த்தையான யூயாஜீலிஸ்டெஸ், ‘நற்செய்தியாளர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், “நல்ல செய்தியை அறிவிப்பவர்.”—அப் 21:8; எபே 4:11, அடிக்குறிப்பு; 2தீ 4:5, அடிக்குறிப்பு.

உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும்: இந்த வார்த்தைகள், பிரசங்க வேலை எந்தளவுக்கு விரிவாகச் செய்யப்படும் என்பதை வலியுறுத்திக் காட்டுகின்றன. “உலகம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை (ஓய்கூமீனே), மனிதர்கள் குடியிருக்கிற இடமாகிய இந்தப் பூமியைப் பொதுப்படையாகக் குறிக்கிறது. (லூ 4:5; அப் 17:31; ரோ 10:18; வெளி 12:9; 16:14) முதல் நூற்றாண்டில், யூதர்கள் சிதறிப்போயிருந்த மாபெரும் ரோம சாம்ராஜ்யத்தைக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (அப் 24:5) தேசத்தார் என்பதற்கான கிரேக்க வார்த்தை ஈத்னோஸ். இது, பெரும்பாலும் இரத்த சொந்தங்களாகவும் ஒரே மொழி பேசுபவர்களாகவும் இருக்கிற தொகுதியினரைப் பொதுப்படையாகக் குறிக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தார் அல்லது இனத்தார் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிறார்கள்.

பிரசங்கிக்கப்படும்: வே.வா., “வெளிப்படையாக அறிவிக்கப்படும்.”​—மத் 3:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

முடிவு: வே.வா., “ஒட்டுமொத்த முடிவு; இறுதி முடிவு.”​—மத் 24:3, 6-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

பரிசுத்தமான இடத்தில்: இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் குறித்தது.​—மத் 4:5-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

யூதேயாவில்: அதாவது, “ரோம மாகாணமாகிய யூதேயாவில்.”

மலைகளுக்கு: நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திராசியரான யூசிபியஸ் சொல்கிறபடி, யூதேயாவிலும் எருசலேமிலும் இருந்த கிறிஸ்தவர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து பெல்லா நகரத்துக்குத் தப்பியோடினார்கள்; அந்த நகரம் தெக்கப்போலியில் இருந்த ஒரு மலைப்பிரதேசத்தில் அமைந்திருந்தது.

வீட்டு மாடியில்: இஸ்ரவேலர்களுடைய வீடுகளுக்கு மொட்டைமாடிகள் இருந்தன. அவை பொருள்களை வைப்பதற்கு (யோசு 2:6), ஓய்வு எடுப்பதற்கு (2சா 11:2), தூங்குவதற்கு (1சா 9:26), பண்டிகைகள் கொண்டாடுவதற்கு (நெ 8:16-18) என பல விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அதனால்தான் அவற்றுக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டியிருந்தது. (உபா 22:8) பொதுவாக, வீட்டின் வெளிப்பக்கத்தில் ஒரு படிக்கட்டு அல்லது ஏணி வைக்கப்பட்டிருந்தது. அதனால், மொட்டைமாடியிலிருந்து வீட்டுக்குள் வராமலேயே வெளியே இறங்கிப் போக முடிந்தது. இயேசு எச்சரித்தபடி தப்பியோடுவது எவ்வளவு அவசரம் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

குளிர் காலத்திலோ: குளிர் காலத்தில் கன மழை பெய்யும், வெள்ளம் பெருக்கெடுக்கும், குளிர் அதிகமாகும். அதனால், பயணம் செய்வது கஷ்டம். உணவும் தங்குமிடமும் கிடைப்பதுகூட கஷ்டம்.—எஸ்றா 10:9, 13.

ஓய்வுநாளிலோ: யூதேயா போன்ற பகுதிகளில், ஓய்வுநாள் சட்டத்தின் அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன; அதனால், ஓய்வுநாளின்போது ரொம்பத் தூரம் பயணம் செய்யவோ பொருள்களைச் சுமந்துகொண்டு போகவோ முடியவில்லை. அதோடு, ஓய்வுநாளில் நகரவாசல்கள் மூடப்பட்டிருந்தன.​—அப் 1:12-ஐயும் இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.

போலிக் கிறிஸ்துக்களும்: வே.வா., “போலி மேசியாக்களும்.” சூடோகிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தை இந்த வசனத்திலும் இதன் இணைவசனமான மாற் 13:22-லும் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. தங்களைக் கிறிஸ்துவாக அல்லது மேசியாவாக (நே.மொ., “அபிஷேகம் செய்யப்பட்டவராக”) தவறாகக் காட்டிக்கொள்கிற எல்லாரையும் அது குறிக்கிறது.​—மத் 24:5-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மனிதகுமாரனின்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பிரசன்னமும்: மத் 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்: வே.வா., “துக்கப்படுவார்கள்.” தாங்க முடியாத துக்கத்தினாலோ குற்றவுணர்வினாலோ வருத்தத்தினாலோ கைகளால் திரும்பத் திரும்ப நெஞ்சில் அடித்துக்கொள்வதைக் குறிக்கிறது.—ஏசா 32:12; நாகூ 2:7; லூ 23:48.

வானத்து மேகங்கள்மேல்: மேகங்கள் பொதுவாகப் பார்வையை மறைக்கும். ஆனால், மனக்கண்களில் பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.—அப் 1:9.

பார்ப்பார்கள்: இதற்கான கிரேக்க வினைச்சொல்லின் நேரடி அர்த்தம், “ஒரு பொருளைப் பார்ப்பது; கவனிப்பது.” அது உருவகமாகப் பயன்படுத்தப்படும்போது, மனக்கண்களில் பார்ப்பதைக் குறிக்கலாம்; அதாவது “புரிந்துகொள்வதை; பகுத்துணருவதை” குறிக்கலாம்.—எபே 1:18.

நான்கு திசைகளிலிருந்தும்: நே.மொ., “நான்கு காற்றுகளிலிருந்தும்.” திசைகாட்டியின் நான்கு திசைகளான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு மரபுத்தொடர். இது “நாலாபக்கமும்; எல்லா இடங்களிலும்” என்ற அர்த்தத்தைத் தருகிறது.—எரே 49:36; எசே 37:9; தானி 8:8.

உவமையிலிருந்து: வே.வா., “நீதிக் கதையிலிருந்து; உருவகக் கதையிலிருந்து.”​—மத் 13:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

வானமும் பூமியும் ஒழிந்துபோகும்: வானமும் பூமியும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மற்ற வசனங்கள் காட்டுகின்றன. (ஆதி 9:16; சங் 104:5; பிர 1:4) அதனால், இயேசு இங்கே உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்தியதாகப் புரிந்துகொள்ளலாம். நடக்கவே முடியாத ஒன்று நடந்தாலும், அதாவது வானமும் பூமியும் ஒழிந்தேபோனாலும், இயேசுவின் வார்த்தைகள் கண்டிப்பாக நிறைவேறும். (மத் 5:​18-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) அதேசமயத்தில், இங்கே வானமும் பூமியும் அடையாள அர்த்தமுடைய வானத்தையும் பூமியையும்கூட குறிக்கலாம். அவற்றை, “முந்தின வானமும் முந்தின பூமியும்” என்று வெளி 21:1 சொல்கிறது.

என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது: வே.வா., “என் வார்த்தைகள் கண்டிப்பாக ஒழிந்துபோகாது.” கிரேக்கில், ‘நடக்காது’ என்ற அர்த்தத்தைத் தரும் இரண்டு வார்த்தைகள் வினைச்சொல்லோடு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை, ஒரு விஷயம் நிச்சயமாகவே நடக்காது என்பதை வலியுறுத்துகின்றன. அதாவது, இயேசுவின் வார்த்தைகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை ஆணித்தரமாகக் காட்டுகின்றன.

பிரசன்னத்தின்போதும்: மத் 24:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பெருவெள்ளம்: வே.வா., “ஜலப்பிரளயம்; பேரழிவு.” இதற்கான கிரேக்க வார்த்தை, காட்டாக்ளிஸ்மாஸ். பேரழிவை உண்டாக்கும் மாபெரும் வெள்ளத்தை அது குறிக்கிறது. நோவாவின் நாளில் வந்த பெருவெள்ளத்தைப் பற்றிச் சொல்லும்போது பைபிள் அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.—மத் 24:39; லூ 17:27; 2பே 2:5.

பேழைக்குள்: பேழை என்பதற்கான கிரேக்க வார்த்தையை “பெட்டி” என்றும் மொழிபெயர்க்கலாம். பேழை ஒரு பெரிய பெட்டிபோல் இருந்ததை இது குறிக்கலாம்.

விழிப்புடன் இருங்கள்: இதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “தூங்காமல் இருப்பது.” ஆனால், நிறைய வசனங்களில், “கவனமாக இருப்பது; ஜாக்கிரதையாக இருப்பது” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு இந்த வார்த்தையை மத் 24:43; 25:13; 26:38, 40, 41 ஆகிய வசனங்களில் பயன்படுத்தியிருக்கிறார். விழிப்பாக இருப்பதற்கு ‘தயாராக இருப்பது’ அவசியம் என்பதை மத் 24:44-ல் அவர் காட்டியிருக்கிறார்.​—மத் 26:38-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தன்னுடைய வீட்டாருக்கு: வே.வா., “தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களுக்கு.” வீட்டார் என்பதற்கான கிரேக்க வார்த்தை, எஜமானின் வீட்டில் வேலை செய்கிற எல்லாரையும் குறிக்கிறது.

விவேகமும்: இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை புத்தியோடு நடந்துகொள்வதைக் குறிக்கிறது. அதாவது, ஆழமான புரிந்துகொள்ளுதல், முன்யோசனை, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நடைமுறை ஞானம் ஆகியவற்றோடு நடந்துகொள்வதைக் குறிக்கிறது. இதே கிரேக்க வார்த்தை மத் 7:24; 25:2, 4, 8, 9 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதி 41:33, 39-ல் யோசேப்பைப் பற்றிச் சொல்லும்போது இதே வார்த்தையை செப்டுவஜன்ட் பயன்படுத்தியுள்ளது.

அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்: நே.மொ., “அவனை இரண்டு துண்டாக வெட்டிப்போடுவார்.” இந்தத் தத்ரூபமான வார்த்தைகள், நிஜமாகவே வெட்டிப்போடுவதை குறிப்பதாகத் தெரியவில்லை. கடும் தண்டனை கொடுப்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

வெளிவேஷக்காரர்கள்: மத் 6:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அழுது அங்கலாய்ப்பான்: மத் 8:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

மீடியா

ஆலயப் பகுதியின் கற்கள்
ஆலயப் பகுதியின் கற்கள்

மேற்கு மதிலின் தென்பகுதியில் காணப்படும் இந்தக் கற்கள், முதல் நூற்றாண்டு ஆலயப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்களைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்ட கோர சம்பவத்தை நினைப்பூட்டுவதற்காக அவை இங்கே விடப்பட்டிருக்கின்றன.

ஒலிவ மலை
ஒலிவ மலை

ஒலிவ மலை (1) என்பது, எருசலேமின் கிழக்கே அமைந்திருக்கும் தொடர்ச்சியான சுண்ணாம்புக்கல் குன்றுகளைக் குறிக்கிறது. ஒலிவ மலைக்கும் எருசலேமுக்கும் இடையில் கீதரோன் பள்ளத்தாக்கு இருக்கிறது. ஆலயப் பகுதிக்கு (2) எதிரே இருந்த அதன் சிகரத்தின் அதிகபட்ச உயரம் சுமார் 812 மீ. (2,644 அடி). அதுதான் பைபிளில் பொதுவாக ஒலிவ மலை என்று அழைக்கப்படுகிறது. ஒலிவ மலையின் ஒரு பகுதியில்தான் இயேசு தன்னுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றித் தன் சீஷர்களுக்கு விளக்கினார்.

மேலங்கிகள்
மேலங்கிகள்

“மேலங்கி” என்பதற்கான கிரேக்க வார்த்தை ஹைமாட்டியான். அது ஒருவேளை சிம்லாஹ் என்ற எபிரெய வார்த்தைக்கு இணையான வார்த்தையாக இருக்கலாம். சிலசமயங்களில், அது தொளதொளவென்ற ஒரு அங்கியைக் குறித்ததாகத் தெரிகிறது. ஆனால், பெரும்பாலும் அது ஒரு செவ்வக வடிவத் துணியைக் குறித்தது. அது போட்டுக்கொள்வதற்கும் கழற்றுவதற்கும் சுலபமாக இருந்தது.

அத்தி மரம்
அத்தி மரம்

வசந்த காலத்தில் ஒரு அத்தி மரத்தின் கிளையில் இலைகள் துளிர்த்திருப்பதையும் முதல் காய்கள் காய்த்திருப்பதையும் இந்தப் படத்தில் பார்க்கிறோம். இஸ்ரவேலில், அத்தி மரம் முதலில் பிப்ரவரி மாதத்தில் காய் காய்க்கும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அல்லது மே மாதத்தில் அதில் இலைகள் துளிர்க்கும். கோடைக் காலம் நெருங்கிவிட்டதற்கு அது அடையாளமாக இருந்தது. (மத் 24:32) ஒவ்வொரு வருஷமும் இரண்டு பருவங்களில் அத்தி மரம் கனி தந்தது: முதல் பருவத்தின் அத்திகள் ஜூன் மாதத்தில் அல்லது ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். (ஏசா 28:4; எரே 24:2; ஓசி 9:10) இரண்டாம் பருவத்தின் அத்திகள் புதிய கிளைகளில் காய்க்கும்; இவை ஆகஸ்ட் மாதத்திலிருந்து பொதுவாக அறுவடைக்குத் தயாராக இருக்கும். அந்தப் பருவத்தில் அத்திகள்தான் முக்கியமாக அறுவடை செய்யப்பட்டன.

கைகளால் சுற்றப்பட்ட திரிகைக் கல்
கைகளால் சுற்றப்பட்ட திரிகைக் கல்

பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்ட மாவு அரைக்கும் கற்களில் இது ஒரு வகை. இதுபோன்ற கற்களில் பொதுவாக இரண்டு பெண்கள் மாவு அரைப்பார்கள். (லூ 17:35) அவர்கள் எதிரெதிரே உட்கார்ந்துகொண்டு, ஒரு கையை அந்தக் கல்லின் கைப்பிடிமேல் வைத்து, அதன் மேற்கல்லைச் சுற்றுவார்கள். மறு கையால் ஒரு பெண் கொஞ்சம் கொஞ்சமாகத் தானியத்தை அந்த மேற்கல்லின் ஓட்டைக்குள் போடுவாள், இன்னொரு பெண் பக்கத்திலுள்ள தட்டிலோ துணியிலோ நிரம்பி விழும் மாவை எடுப்பாள். பெண்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, அன்றன்றைக்குத் தேவைப்படும் ரொட்டிக்காக மாவு அரைப்பார்கள்.