மத்தேயு எழுதியது 26:1-75
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
பேசி முடித்த பின்பு: மத் 26:1-5-ல் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் நிசான் 12-ஆம் தேதி நடந்தது; ஏனென்றால், “இன்னும் இரண்டு நாட்களில் [நிசான் 14-ல்] பஸ்கா பண்டிகை வரப்போகிறது” என்று வசனம் 2 சொல்கிறது.—இணைப்புகள் A7, B12-ஐயும், மத் 26:6-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும் பாருங்கள்.
பஸ்கா: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்படுவதற்கு முந்தின நாள் சாயங்கால வேளையில் இந்தப் பண்டிகை முதன்முதலில் ஆரம்பமானது. (“பஸ்கா” என்பதற்கான கிரேக்க வார்த்தை, பாஸ்க்கா. இது பேஸாக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது; இந்த எபிரெய வார்த்தை பாஸாக் என்ற வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது; இதன் அர்த்தம், “கடந்துபோகுதல்; தாண்டிப்போகுதல்”) இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்ததையும், எகிப்தின் தலைமகன்களை யெகோவா கொன்றபோது இஸ்ரவேலர்களின் தலைமகன்களை ‘கடந்துபோனதையும்’ நினைத்துப் பார்ப்பதற்காக அது கொண்டாடப்பட்டது.—யாத் 12:14, 24-47; சொல் பட்டியலைப் பாருங்கள்.
மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படுவதற்கு: மத் 20:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “மரக் கம்பம்”; “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.
முதன்மை குருமார்களும்: மத் 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “முதன்மை குரு” என்ற தலைப்பையும் பாருங்கள்.
பெரியோர்களும்: மத் 16:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
தலைமைக் குருவாகிய: இஸ்ரவேல் ஒரு சுதந்திர தேசமாக இருந்தபோது, தலைமைக் குரு தன் வாழ்நாள் முழுவதும் குருத்துவச் சேவை செய்தார். (எண் 35:25) ஆனால், ரோமர்கள் இஸ்ரவேலைக் கைப்பற்றிய பிறகு, அவர்கள் நியமித்த ஆட்சியாளர்களுக்கு தலைமைக் குருவை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் இருந்தது.—சொல் பட்டியலில் “தலைமைக் குரு” என்ற தலைப்பைப் பாருங்கள்.
காய்பா: இவர் ரோமர்களால் நியமிக்கப்பட்ட ஒரு தலைமைக் குரு. இவர் அரசியல் விவகாரங்களை நடத்துவதில் சாமர்த்தியசாலியாக இருந்தார்; அதனால், தனக்கு முன்பிருந்த பலரைவிட நிறைய காலத்துக்குத் தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். இவர் சுமார் கி.பி. 18 முதல் சுமார் கி.பி. 36 வரை சேவை செய்தார்.—காய்பாவின் வீடு எங்கு இருந்திருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இணைப்பு B12-ஐப் பாருங்கள்.
பெத்தானியாவில் . . . இயேசு: மத் 26:6-13-ல் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் நிசான் 9 ஆரம்பமான பிறகு (அந்தச் சாயங்காலத்துக்குப் பிறகு) அநேகமாக நடந்திருக்கும். யோவான் புத்தகத்திலுள்ள இதன் இணைவசனம் இதைக் காட்டுகிறது. “பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு” இயேசு பெத்தானியாவுக்கு வந்துசேர்ந்தார் என்று அது சொல்கிறது. (யோவா 12:1) நிசான் 8-ல் ஓய்வுநாள் ஆரம்பமாவதற்கு (அந்தச் சாயங்காலத்துக்கு) முன்பு அவர் அங்கு போய்ச் சேர்ந்திருப்பார். அதற்கு அடுத்த நாளில்தான், அதாவது நிசான் 9-ல்தான், அவர் சீமோனின் வீட்டில் விருந்து சாப்பிட்டார்.—யோவா 12:2-11; இணைப்பு A7-ஐயும் B12-ஐயும் பாருங்கள்.
தொழுநோயாளியாக இருந்த சீமோனின்: இந்த சீமோனைப் பற்றி இந்த வசனத்திலும் இதன் இணைவசனமாகிய மாற் 14:3-லும் மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இவர், இயேசு குணப்படுத்திய தொழுநோயாளியாக இருந்திருக்கலாம்.—மத் 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பையும் பாருங்கள்.
ஒரு பெண்: யோவா 12:3-ன்படி, மார்த்தாளுக்கும் லாசருவுக்கும் சகோதரியாக இருந்த மரியாள்தான் இந்தப் பெண்.
விலை உயர்ந்த வாசனை எண்ணெயை: இது ஒரு ராத்தல் அளவுள்ள ‘சுத்தமான . . . சடாமாஞ்சி’ எண்ணெய் என்றும், 300 தினாரியு மதிப்புள்ளது என்றும் மாற்குவும் யோவானும் பதிவு செய்திருக்கிறார்கள். 300 தினாரியு என்பது கிட்டத்தட்ட ஒரு வருஷ வேலைக்காக ஒரு சாதாரண கூலியாளுக்குக் கொடுக்கப்பட்ட கூலி. (மாற் 14:3-5; யோவா 12:3-5) இந்த வாசனை எண்ணெய் இமய மலைப்பகுதியில் காணப்படும் ஒரு நறுமணச் செடியிலிருந்து (நார்டோஸ்டாகிஸ் ஜட்டமான்ஸி) தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இது பெரும்பாலும் கலப்படம் செய்யப்பட்டது. சில சமயம், போலியான சடாமாஞ்சி எண்ணெய் விற்கப்பட்டது. ஆனால், இயேசுமீது ‘சுத்தமான சடாமாஞ்சி எண்ணெய்’ ஊற்றப்பட்டதாக மாற்குவும் யோவானும் பதிவு செய்திருக்கிறார்கள்.
வெண்சலவைக்கல் குப்பி: சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள்: அந்தப் பெண் அந்த எண்ணெயை இயேசுவின் தலையில் ஊற்றியதாக மத்தேயுவும் மாற்குவும் பதிவு செய்திருக்கிறார்கள். (மாற் 14:3) பல வருஷங்களுக்குப் பிறகு அதைப் பற்றி எழுதிய யோவான், இயேசுவின் பாதங்களிலும் அந்தப் பெண் எண்ணெயை ஊற்றியதாகச் சொல்லியிருக்கிறார். (யோவா 12:3) அவளுடைய அந்த அன்பான செயல், அடையாள அர்த்தத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு இயேசுவைத் தயார்செய்ததாக இயேசுவே சொன்னார்.—மத் 26:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சீஷர்கள்: விலை உயர்ந்த எண்ணெயை மரியாள் பயன்படுத்தியதைப் பற்றிக் குறைசொன்னது யூதாஸ் இஸ்காரியோத்து என்பதை யோவான் மட்டும்தான் பதிவு செய்திருக்கிறார். (யோவா 12:4-7) யூதாஸ் சொன்னது நியாயம் என்பதுபோல் தெரிந்ததால் மற்ற அப்போஸ்தலர்கள் அதை வெறுமனே ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது.
இந்தப் பெண் என்னுடைய உடல்மேல் இந்த வாசனை எண்ணெயை ஊற்றி: இயேசுமேல் வைத்திருந்த அன்பினாலும் மதிப்பினாலும்தான் அந்தப் பெண் (மத் 26:7-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்) தாராள மனதோடு அப்படிச் செய்தாள். ஆனால் அவளுக்கே தெரியாமல், அடக்கம் செய்யப்படுவதற்கு இயேசுவை அவள் தயார்செய்ததாக இயேசுவே விளக்கினார். ஏனென்றால், அப்படிப்பட்ட வாசனை எண்ணெய்களும் தைலங்களும் பொதுவாக இறந்தவர்களின் உடலில் பூசப்பட்டன.—2நா 16:14.
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உலகில் எங்கெல்லாம் . . . பிரசங்கிக்கப்படுகிறதோ: மத் 24:14-ல் உள்ள தீர்க்கதரிசனத்தைப் போலவே இந்த வசனத்திலும், நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார்; இந்தப் பெண் காட்டிய பக்தியைப் பற்றியும் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு சொன்னார். இந்தப் பெண் செய்ததைப் பற்றி எழுதும்படி மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களைக் கடவுள் தன் சக்தியால் தூண்டினார்.—மாற் 14:8, 9; யோவா 12:7; மத் 24:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பின்பு: அதாவது, “நிசான் 12-ஆம் தேதியில்.” அதே நாளில்தான் மத் 26:1-5-ல் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்தன.—இணைப்பு A7-ஐயும், B12-ஐயும், மத் 26:1, 6-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பாருங்கள்.
யூதாஸ் இஸ்காரியோத்து: மத் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
30 வெள்ளிக் காசுகள்: இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்குக் கொடுக்கப்பட்ட தொகையைப் பற்றி சுவிசேஷ எழுத்தாளர்களில் மத்தேயு மட்டும்தான் எழுதியிருக்கிறார். அது ஒருவேளை தீருவில் தயாரிக்கப்பட்ட 30 வெள்ளி சேக்கலாக இருந்திருக்கலாம். இயேசுவை முதன்மை குருமார்கள் எந்தளவு துச்சமாக நினைத்தார்கள் என்பதை இந்தத் தொகை காட்டுகிறது; ஏனென்றால், திருச்சட்டத்தின்படி அது ஒரு அடிமையின் விலையாக இருந்தது. (யாத் 21:32) அதேபோல், சகரியா கடவுளுடைய தீர்க்கதரிசியாகச் சேவை செய்ததற்கு விசுவாசமில்லாத இஸ்ரவேலர்களிடம் கூலி கேட்டபோது, அவர்கள் “30 வெள்ளிக் காசுகளை” அளந்து கொடுத்தார்கள். அவரை வெறும் ஒரு அடிமையாக அவர்கள் கருதியதை இது காட்டுகிறது.—சக 11:12, 13.
புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதலாம் நாளில்: புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை பஸ்கா பண்டிகைக்கு (நிசான் 14) அடுத்த நாள், அதாவது நிசான் 15-ஆம் தேதி ஆரம்பமாகி, ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டது. (இணைப்பு B15-ஐப் பாருங்கள்.) ஆனால் இயேசுவின் காலத்தில், பஸ்காவும் இந்தப் பண்டிகையும் பின்னிப்பிணைந்துவிட்டன; அதனால், நிசான் 14-ஆம் தேதி உட்பட அந்த எட்டு நாட்களும் சேர்த்து, “புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை” என்று சிலசமயங்களில் அழைக்கப்பட்டது. (லூ 22:1) இந்த வசனத்தில், “முதலாம் நாளில்” என்ற வார்த்தைகளை “முந்தின நாளில்” என்றும் மொழிபெயர்க்கலாம். (யோவா 1:15, 30-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்; “அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்” என்று அந்த வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது; ‘முன்பிருந்தே’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள ப்ரோட்டாஸ் என்ற கிரேக்க வார்த்தைதான் இந்த வசனத்தில் ‘முதலில்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) அதனால், மூல கிரேக்க வார்த்தைகளையும் யூதர்களின் வழக்கத்தையும் வைத்துப் பார்க்கும்போது, நிசான் 13-ஆம் தேதியில் சீஷர்கள் அந்தக் கேள்வியை இயேசுவிடம் கேட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நிசான் 13-ன் பகல் நேரத்தில் சீஷர்கள் பஸ்காவுக்காக ஏற்பாடுகளைச் செய்தார்கள். “சாயங்காலம் ஆனபோது,” அதாவது நிசான் 14 ஆரம்பமானபோது, பஸ்காவைக் கொண்டாடினார்கள்.—மாற் 14:16, 17.
சாயங்காலம் ஆனபோது: அதாவது, “நிசான் 14 ஆரம்பமானபோது.”—இணைப்பு A7-ஐயும் B12-ஐயும் பாருங்கள்.
என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான்: நே.மொ., “என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்துக்குள் கையை விடுகிறவன்தான்.” அன்று மக்கள் பொதுவாகத் தங்கள் கையால் சாப்பிட்டார்கள் அல்லது ரொட்டியை ஒரு தேக்கரண்டிபோல் பயன்படுத்தினார்கள். கிரேக்கில் உள்ள வார்த்தைகள், “உணவை ஒன்றுசேர்ந்து சாப்பிடுவது” என்ற அர்த்தத்தைத் தரும் ஒரு மரபுத்தொடராகவும் இருந்திருக்கலாம். ஒருவரோடு சேர்ந்து சாப்பிடுவது நெருங்கிய நட்புக்கு அடையாளமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நெருங்கிய நண்பருக்கு எதிராக எதையாவது செய்வது, மகா மட்டமான துரோகமாகக் கருதப்பட்டது.—சங் 41:9; யோவா 13:18.
அதை நீயே சொல்லிவிட்டாய்: இது ஒரு யூத மரபுத்தொடர். கேள்வி கேட்டவர் சொன்ன ஒரு விஷயம் உண்மை என்பதை உறுதிப்படுத்துவதற்கு இயேசு இந்த மரபுத்தொடரைப் பயன்படுத்தினார். “நீயே அதைச் சொல்லிவிட்டாய், நீ சொல்வது உண்மைதான்” என்று இயேசு சொல்லாமல் சொன்னார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கப்போவதை யூதாஸ் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டதை இயேசு சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. கொஞ்ச நேரம் கழித்து, யூதாஸ் அந்த அறையைவிட்டுப் போயிருப்பான்; அதன் பிறகுதான் எஜமானின் இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைத்தார். யோவா 13:21-30-ல் உள்ள பதிவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மத்தேயுவின் இந்தப் பதிவில், யூதாசைப் பற்றி அடுத்ததாக மத் 26:47-ல்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் ஒரு கூட்டத்தோடு கெத்செமனே தோட்டத்துக்கு வந்ததாக அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
ரொட்டியை எடுத்து, . . . அதைப் பிட்டு: “பிட்டு” என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு, “உடைத்து.” பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகளில் ரொட்டிகள் மெலிதாக இருந்தன. புளிப்பில்லாத ரொட்டிகள் மொரமொரப்பாக இருந்தன. இயேசு ரொட்டிகளை உடைத்துக் கொடுத்ததில் எந்தவொரு விசேஷ அர்த்தமும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட ரொட்டிகள் பொதுவாக அப்படித்தான் உடைத்துக் கொடுக்கப்பட்டன.—மத் 14:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஜெபம் செய்து: “ஆசீர்வாதத்தைக் கேட்டு.” இதற்கான கிரேக்க வார்த்தை, கடவுளைப் புகழ்ந்தும், அவருக்கு நன்றி சொல்லியும் ஜெபம் செய்வதைக் குறிப்பதாகத் தெரிகிறது.
குறிக்கிறது: கிரேக்கில், ஈஸ்ட்டீன். இந்த வசனத்தில் இதன் அர்த்தம், “சுட்டிக்காட்டுகிறது; அடையாளப்படுத்துகிறது; பிரதிநிதித்துவம் செய்கிறது.” இந்த அர்த்தம் அப்போஸ்தலர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவின் பரிபூரண உடல் அவர்களுடைய கண்ணெதிரிலேயே இருந்தது; அவர்கள் சாப்பிடவிருந்த புளிப்பில்லாத ரொட்டியும் அவர்களுடைய கண் முன்னால் இருந்தது. அதனால், அந்த ரொட்டி இயேசுவின் நிஜமான உடலாக இருந்திருக்க முடியாது. இதே கிரேக்க வார்த்தை மத் 12:7-லும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. “கருத்து,” “பொருள்” என்றெல்லாம் சில பைபிள்களில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை: யெகோவாவுக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் இயேசுவுடைய பலியின் மூலம் அமலுக்கு வந்தது. (எபி 8:10) ஒரு மத்தியஸ்தராக சீனாய் மலையில் இஸ்ரவேலர்களோடு திருச்சட்ட ஒப்பந்தத்தைச் செய்தபோது மோசே பயன்படுத்திய அதே வார்த்தைகளைத்தான் இயேசு இங்கே பயன்படுத்தியிருக்கிறார். (யாத் 24:8; எபி 9:19-21) கடவுளுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையிலான திருச்சட்ட ஒப்பந்தத்தைக் காளைகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் எப்படி செல்லுபடியாக்கியதோ, அப்படித்தான் ஆன்மீக இஸ்ரவேலர்களோடு யெகோவா செய்யவிருந்த புதிய ஒப்பந்தத்தை இயேசுவின் இரத்தம் செல்லுபடியாக்கும். அந்த ஒப்பந்தம் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் அமலுக்கு வந்தது.—எபி 9:14, 15.
புதிய திராட்சமதுவை: பைபிளில் திராட்சமது சிலசமயங்களில் சந்தோஷத்துக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.—சங் 104:15; பிர 10:19.
பாடல்கள்: வே.வா., “சங்கீதங்கள்.” ஒரு பழங்கால யூதப் பதிவின்படி, பஸ்கா விருந்தின்போது முதல் ‘அல்லேல் சங்கீதங்கள்’ (113, 114) பாடப்பட்டன. பஸ்கா விருந்தின் முடிவில் மீதி நான்கு ‘அல்லேல் சங்கீதங்கள்’ (115-118) பாடப்பட்டன. இந்தக் கடைசி நான்கு சங்கீதங்களில் மேசியாவைப் பற்றிய சில தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன. சங் 118-ன் ஆரம்பத்திலும் முடிவிலும், “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. (சங் 118:1, 29) இயேசு, தான் இறப்பதற்கு முந்தின ராத்திரி உண்மையுள்ள தன் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து கடவுளைப் புகழ்ந்து பாடியது அதுவே கடைசி முறையாக இருந்திருக்கலாம்.
சேவல் கூவுவதற்கு முன்பு: நான்கு சுவிசேஷ புத்தகங்களிலுமே இந்த வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால், சேவல் இரண்டு தடவை கூவும் என்ற கூடுதலான விவரம் மாற்குவின் பதிவில் மட்டும்தான் இருக்கிறது. (மத் 26:74, 75; மாற் 14:30, 72; லூ 22:34, 60, 61; யோவா 13:38; 18:27) இந்தச் சம்பவத்தைப் பற்றிய பைபிள் பதிவுகளை மிஷ்னாவும் ஆதரிக்கிறது; ஏனென்றால், இயேசுவின் காலத்தில் எருசலேமில் சேவல்கள் வளர்க்கப்பட்டதாக அது சொல்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், விடிவதற்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்பே சேவல் கூவியதாகத் தெரிகிறது.
கெத்செமனே: அநேகமாக இந்தத் தோட்டம், எருசலேமுக்குக் கிழக்கே, கீதரோன் பள்ளத்தாக்குக்கு அப்பால், ஒலிவ மலைமேல் இருந்தது. அங்கே ஒலிவ எண்ணெய் ஆலை இருந்ததாகத் தெரிகிறது. ஏனென்றால் இந்தத் தோட்டத்தின் பெயர், “எண்ணெய் ஆலை” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தைகளிலிருந்து (காத் ஷேமானே) வந்திருக்கிறது. இந்தத் தோட்டம் சரியாக எங்கே இருந்தது என்று சொல்ல முடியாதென்றாலும், பாரம்பரிய நம்பிக்கையின்படி, இது ஒலிவ மலையின் அடிவாரத்தில், அதன் மேற்குச் சரிவிலுள்ள சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் இருந்தது.—இணைப்பு B12-ஐப் பாருங்கள்.
நான்: இதற்கான கிரேக்க வார்த்தை சைக்கீ. சில பைபிள்களில் இது “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில் இது ஒரு நபரை முழுமையாகக் குறிக்கிறது. அதனால், “என் ஜீவன்” அல்லது வெறுமனே “நான்” என்று இதை மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும்.—சொல் பட்டியலில், “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
விழித்திருங்கள்: இயேசு எந்த நாளில் அல்லது நேரத்தில் வருவார் என்பது சீஷர்களுக்குத் தெரியாது. அதனால், அவர்கள் ஆன்மீக ரீதியில் விழித்திருக்க வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருந்தார். (மத் 24:42; 25:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்) அதே அறிவுரையை இயேசு இந்த வசனத்திலும் மறுபடியும் மத் 26:41-லும் சொல்லியிருக்கிறார். மத் 26:41-ல், ஆன்மீக ரீதியில் விழித்திருக்க வேண்டும் என்பதை, தொடர்ந்து ஜெபம் செய்வதோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கிறார். இதேபோன்ற அறிவுரைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதிலும் இருக்கின்றன; உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் கவனமாகவும் இருப்பது எவ்வளவு அவசியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.—1கொ 16:13; கொலோ 4:2; 1தெ 5:6; 1பே 5:8; வெளி 16:15.
மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து: ஒருவேளை, கைகளை அல்லது முழங்கைகளை அவர் தரையில் ஊன்றியிருக்கலாம். சிலர் நின்றுகொண்டு அல்லது மண்டிபோட்டுக்கொண்டு அல்லது வேறு நிலைகளில் ஜெபம் செய்ததாக பைபிள் சொல்கிறது. ஆனால், ஊக்கமாக ஜெபம் செய்யும் ஒருவர் சாஷ்டாங்கமாக விழுந்துகூட ஜெபம் செய்திருக்கலாம்.
இந்தக் கிண்ணம் . . . நீங்கும்படி செய்யுங்கள்: பைபிளில், “கிண்ணம்” என்பது அடையாள அர்த்தத்தில் கடவுளுடைய சித்தத்தை, அதாவது ஒருவருக்கு “நியமிக்கப்படும் பங்கை,” குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. (மத் 20:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) தெய்வ நிந்தனையும் தேசத் துரோகமும் செய்த குற்றவாளி என்ற பெயரோடு சாவது கடவுளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கிவிடுமோ என்று இயேசு மிகவும் கவலைப்பட்டார்; அதனால்தான், இந்தக் “கிண்ணம்” தன்னைவிட்டு நீங்க வேண்டுமென்று ஜெபம் செய்தார்.
உங்களால்: கிரேக்கில் இந்த சுட்டுப்பெயர் முன்னிலை பன்மை வடிவில் இருப்பதால், பேதுருவிடம் மட்டுமல்லாமல் மற்ற சீஷர்களிடமும் இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டார் என்பது தெரிகிறது.
உள்ளம்: கிரேக்கில், நியூமா. இந்த வசனத்தில், ஏதோவொரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ ஒருவருடைய இதயத்தில் ஏற்படும் தூண்டுதலைக் குறிக்கிறது.—சொல் பட்டியலில் “ரூவக்; நியூமா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
உடலோ: நே.மொ., “சதையோ.” பைபிளில், இந்த வார்த்தை பாவ இயல்புள்ள மனிதனைக் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதோ: மத் 1:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மென்மையாக முத்தம் கொடுத்தான்: மத் 26:48-ல் “முத்தம் கொடுக்கிறேனோ” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல்லின் வலிமையான வடிவம்தான் இங்கே “மென்மையாக முத்தம் கொடுத்தான்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யூதாஸ் இந்தளவுக்குக் கனிவோடும் நட்போடும் இயேசுவை வாழ்த்தியது, அவன் எந்தளவுக்கு வெளிவேஷம் போட்டு, போலித்தனமாக நடந்துகொண்டான் என்பதைக் காட்டியது.
லேகியோனுக்கும்: ‘லேகியோன்’ என்பது அந்தக் காலத்தில் ரோமப் படையின் முக்கியப் பிரிவு. கி.பி. முதல் நூற்றாண்டில், அது கிட்டத்தட்ட 6,000 வீரர்களைக் கொண்ட பிரிவாக இருந்தது. இந்த வசனத்தில் ‘12 லேகியோன்’ என்பது எண்ணவே முடியாத ஒரு பெரும் எண்ணிக்கையைக் குறிப்பதாகத் தெரிகிறது. தன் தகப்பனிடம் கேட்டால், தேவதூதர்களைத் தேவைக்கும் அதிகமாகவே அனுப்பித் தன்னைப் பாதுகாப்பார் என்றுதான் இயேசு சொல்லிக்கொண்டிருந்தார்.
வேதவசனங்கள்: இந்த வார்த்தை, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட எபிரெய வேதாகமம் முழுவதையும் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தீர்க்கதரிசிகள் எழுதிவைத்த வசனங்கள் நிறைவேறும்படியே: மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
தலைமைக் குருவான காய்பாவிடம்: மத் 26:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
முதன்மை குருமார்களும்: இவர்கள் குருத்துவச் சேவை செய்த முக்கியமான ஆட்கள்.—மத் 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “முதன்மை குரு” என்ற தலைப்பையும் பாருங்கள்.
நியாயசங்க: நியாயசங்கம் என்பது எருசலேமில் இருந்த யூத உயர் நீதிமன்றம். இதற்கான கிரேக்க வார்த்தையின் (சினெடிரியோன்) நேரடி அர்த்தம், “சேர்ந்து உட்காருதல்.” அது ஒரு கூட்டத்தை அல்லது பேரவையைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக இருந்தது; ஆனாலும், இஸ்ரவேலில் அது பெரும்பாலும் மத சம்பந்தப்பட்ட நீதி விசாரணைக் குழுவை அல்லது நீதிமன்றத்தைக் குறித்தது.—மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “நியாயசங்கம்” என்ற தலைப்பையும் பாருங்கள்; நியாயசங்க மன்றம் எங்கே இருந்திருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.
கிறிஸ்துவா: மத் 11:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்: காய்பாவின் கேள்வியை இயேசு தட்டிக்கழிக்கவில்லை. ஏனென்றால், உண்மைகளைக் கடவுள்மேல் ஆணையாகச் சொல்லும்படி கேட்கத் தலைமைக் குருவுக்கு அதிகாரம் இருந்ததை இயேசு புரிந்துவைத்திருந்தார். (மத் 26:63) சொல்லப்பட்ட ஒரு விஷயம் உண்மை என்பதை உறுதிசெய்ய இயேசு ஒரு யூத மரபுத்தொடரைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. மாற்குவின் பதிவிலுள்ள இதன் இணைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது. “நான் கிறிஸ்துதான்” என்று இயேசு பதில் அளித்ததாக அந்த வசனம் சொல்கிறது.—மாற் 14:62; மத் 26:25; 27:11-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
மனிதகுமாரன் . . . வானத்து மேகங்கள்மேல் வருவதையும்: தானி 7:13, 14-ல் உள்ள மேசியானிய தீர்க்கதரிசனத்தை இயேசு இங்கே மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்; இப்படி, தான் கடவுளுடைய சன்னிதிக்குப் போக அனுமதி பெறப்போவதையும், பரலோகத்தில் அரசாட்சியைப் பெறப்போவதையும் உறுதிப்படுத்தினார்.—சொல் பட்டியலில் “மனிதகுமாரன்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில்: ஒரு ஆட்சியாளரின் வலது பக்கத்தில் இருப்பது, அவருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பதைக் குறித்தது. (சங் 110:1; அப் 7:55, 56) கிரேக்கில், இங்கே “வல்லமை” என்ற வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசனத்தில் இந்த வார்த்தை கடவுளைக் குறிக்கலாம் என்பதால் இதை ‘வல்லமையுள்ளவர்’ என்று மொழிபெயர்த்திருப்பது சரி என்று சொல்லலாம். இதன் இணைவசனமான லூ 22:69-லும் இந்த கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ஆனால், ‘கடவுள்’ என்பதற்கான வார்த்தையும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், “வல்லமையுள்ள கடவுளின்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில்” என்ற வார்த்தைகள், வல்லமையுள்ளவரான கடவுளுடைய வலது பக்கத்தில் இருப்பதால் இயேசுவுக்கு வல்லமை கொடுக்கப்படும், அதாவது அதிகாரம் கொடுக்கப்படும், என்பதையும் குறிக்கலாம்.
தன் மேலங்கியைக் கிழித்து: கோபத்தைக் காட்டுவதற்காக இப்படிச் செய்யப்பட்டது. காய்பா ஏதோ பெரிய பக்திமான்போல், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொதித்துப்போனதைக் காட்டுவதற்காக தன் அங்கியின் கழுத்துப்பகுதியைக் கிழித்ததாகத் தெரிகிறது.
தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல்: எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும்படி அல்ல, தன்னை அடித்தது யாரென்று தெய்வீக சக்தியால் சொல்லும்படிதான் இயேசுவிடம் கேட்டார்கள். இதன் இணைவசனங்களான மாற் 14:65-ம் லூ 22:64-ம், அவர்கள் இயேசுவின் முகத்தை மூடியதாகச் சொல்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, அவரை அடித்தது யாரென்று சொல்லும்படி அவர்கள் ஏன் கிண்டலாகக் கேட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
வாசல் மண்டபத்துக்கு: நே.மொ., “வாசலுக்கு.” மாற்குவின் பதிவில், ‘வாசல் மண்டபம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “நுழைவாசலை” அல்லது “நுழைவு மண்டபத்தை” குறிக்கலாம்; அது வெறுமனே ஒரு வாசல்கதவைக் குறிக்கவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது. (மாற் 14:68) அது அநேகமாக, முற்றத்திலிருந்து தெருவை ஒட்டியிருந்த வெளிக்கதவுகள்வரை சென்ற ஒரு நடைக்கூடமாக அல்லது நுழைவு அறையாக இருந்திருக்கலாம்.
உன் பேச்சே: வே.வா., “உன் உச்சரிப்பே; நீ பேசும் விதமே.” கலிலேயாவில் பேசப்பட்ட எபிரெய மொழியை பேதுரு பேசியிருக்கலாம்; அங்கு புழக்கத்தில் இருந்த வார்த்தைகளை அல்லது உச்சரிப்பை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அது யூதேயாவில் பேசப்பட்ட எபிரெய மொழியிலிருந்து வித்தியாசமாக இருந்தது. வெளிநாட்டு தாக்கத்தினால் கலிலேயாவில் எபிரெய மொழி வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கலாம் அல்லது உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
சத்தியம் செய்ய: வே.வா., “சத்தியம் செய்யவும் ஆணையிட்டுக் கொடுக்கவும்.” பேதுரு பயத்தினால், தான் சொல்வது உண்மைதான் என்று மற்றவர்களை நம்பவைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். சத்தியம் செய்வதன் மூலம், தான் சொல்வது உண்மை என்றும், அது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்றும் சொல்லி ஆணையிட்டுக் கொடுத்தார்.
மீடியா
வாசனை எண்ணெயை ஊற்றி வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சிறிய ஜாடிகள், எகிப்திலுள்ள அலபாஸ்ட்ரான் என்ற இடத்துக்குப் பக்கத்தில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டன. அது ஒரு விதமான சுண்ணாம்புக் கல். பிற்பாடு அது அலபாஸ்ட்ரான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. படத்தில் காட்டப்பட்டிருக்கும் குப்பி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. அது கி.மு. 150-க்கும் கி.பி. 100-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அதைவிட விலை குறைந்த ஜிப்சம் போன்ற பொருள்கள், அதே விதமான குப்பிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவையும் வெண்சலவைக்கல் குப்பிகள் என்றே அழைக்கப்பட்டன. ஏனென்றால், அவையும் அதே காரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், விலை உயர்ந்த தைலங்களுக்கும் வாசனை எண்ணெய்களுக்கும் அசல் வெண்சலவைக்கல் குப்பிகள் பயன்படுத்தப்பட்டன. இரண்டு சந்தர்ப்பங்களில், அதாவது கலிலேயாவில் ஒரு பரிசேயரின் வீட்டிலும், பெத்தானியாவில் முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டிலும், அப்படிப்பட்ட அசல் குப்பிகளிலிருந்த எண்ணெய்தான் இயேசுவின் தலையில் ஊற்றப்பட்டது.
பஸ்காவின்போது சாப்பிட வேண்டியிருந்த உணவுகள் இவைதான்: நெருப்பில் வாட்டப்பட்ட ஆட்டுக்குட்டி (எந்த எலும்புகளும் முறிக்கப்படாத ஆட்டுக்குட்டி) (1); புளிப்பில்லாத ரொட்டி (2); கசப்பான கீரை (3). (யாத் 12:5, 8; எண் 9:11) இந்தக் கசப்பான கீரை, எகிப்தில் அடிமைகளாக இருந்த கசப்பான அனுபவத்தை இஸ்ரவேலர்களுக்கு அநேகமாக ஞாபகப்படுத்தியிருக்கும். புளிப்பில்லாத ரொட்டியை இயேசு தன்னுடைய பரிபூரணமான மனித உடலுக்கு அடையாளமாகப் பயன்படுத்தினார். (மத் 26:26) அப்போஸ்தலன் பவுல் இயேசுவை “நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார். (1கொ 5:7) முதல் நூற்றாண்டில், பஸ்கா உணவு பரிமாறப்பட்டபோது திராட்சமதுவும் (4) பரிமாறப்பட்டது. மனிதர்களுக்காக சிந்திய தன் இரத்தத்துக்கு அடையாளமாக இயேசு திராட்சமதுவைப் பயன்படுத்தினார்.—மத் 26:27, 28.