மாற்கு எழுதியது 12:1-44
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
இஸ்ரவேலில் திராட்சைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டன. திராட்சையின் வகையைப் பொறுத்தும் அந்தப் பகுதியின் சீதோஷ்ணத்தைப் பொறுத்தும் அறுவடைக் காலம் மாறுபட்டது. அவை பொதுவாக சுண்ணாம்புக்கல் தொட்டிகளில் அல்லது பாறைகளில் வெட்டப்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டன. ஆண்கள் பொதுவாகப் பாட்டு பாடிக்கொண்டே வெறுங்காலில் திராட்சைகளை மிதித்தார்கள்.—ஏசா 16:10; எரே 25:30; 48:33.
1. அறுவடை செய்யப்பட்ட திராட்சைகள்
2. திராட்சரச ஆலை
3. வடிகால்
4. திராட்சரசம் வடிவதற்கான கீழ்த் தொட்டி
5. திராட்சமதுவுக்கான மண் ஜாடிகள்
திபேரியு கி.மு. 42-ல் பிறந்தான். கி.பி. 14-ல் அவன் ரோமப் பேரரசின் இரண்டாவது அரசனாக ஆனான். கி.பி. 37, மார்ச் மாதம்வரை அவன் வாழ்ந்தான். இயேசு ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவன்தான் அரசனாக இருந்தான். அதனால், ‘அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்’ என்று வரி கட்டுவது சம்பந்தமாக இயேசு சொன்னபோது திபேரியுதான் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான்.—மாற் 12:14-17; மத் 22:17-21; லூ 20:22-25.
இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.
முதல் நூற்றாண்டில், மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடது முழங்கையை ஒரு திண்டுமேல் அல்லது தலையணைமேல் வைத்துக்கொண்டு, வலது கையால் சாப்பிட்டார்கள். கிரேக்க-ரோம வழக்கத்தின்படி, சாப்பாட்டு அறையில் தாழ்வான ஒரு மேஜையும், அதைச் சுற்றி உட்காருவதற்கு மூன்று மெத்தைகளும் இருந்தன. இப்படிப்பட்ட சாப்பாட்டு அறையை ரோமர்கள் ட்ரைக்லீனியம் என்று அழைத்தார்கள். (இந்த லத்தீன் வார்த்தை, “மூன்று மெத்தைகள் கொண்ட அறை” என்ற அர்த்தத்தைத் தருகிற ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.) ஆரம்பத்தில், இப்படிப்பட்ட மேஜையைச் சுற்றி ஒன்பது பேர் உட்காருவது வழக்கமாக இருந்தது; ஒவ்வொரு மெத்தையிலும் மூன்று பேர் உட்கார்ந்தார்கள். ஆனால் பிற்பாடு, அதைவிட அதிகமானவர்கள் உட்காருவதற்கு வசதியாக இன்னும் நீளமான மெத்தைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய மதிப்பு கூடியதாகவோ குறைந்ததாகவோ நம்பப்பட்டது. முதல் மெத்தைக்கு மிகவும் குறைந்த மதிப்பு இருந்ததாகவும் (A), இரண்டாவது மெத்தைக்கு ஓரளவு மதிப்பு இருந்ததாகவும் (B), மூன்றாவது மெத்தைக்கு மிக அதிக மதிப்பு இருந்ததாகவும் (C) நம்பப்பட்டது. ஒவ்வொரு மெத்தையிலும்கூட எங்கே உட்கார்ந்தார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பு கூடியது அல்லது குறைந்தது. ஒருவர் தன்னுடைய வலது பக்கத்தில் இருந்தவரைவிட அதிக மதிப்புள்ளவராகவும், தன்னுடைய இடது பக்கத்தில் இருந்தவரைவிட குறைந்த மதிப்புள்ளவராகவும் கருதப்பட்டார். விருந்து கொடுப்பவர் மிகவும் தாழ்வான மெத்தையின் முதல் இடத்தில் (1) பொதுவாக உட்கார்ந்தார். நடுவிலிருந்த மெத்தையின் மூன்றாவது இடம் (2) மிகவும் மதிப்புள்ளதாக இருந்தது. இந்த வழக்கத்தை யூதர்கள் எந்தளவுக்குப் பின்பற்றினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை; ஆனாலும், மனத்தாழ்மையின் அவசியத்தைப் பற்றி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது இந்த வழக்கத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இந்த அனிமேஷன் வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் காட்சி, காம்லாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நூற்றாண்டு ஜெபக்கூடத்தின் இடிபாடுகளை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. காம்லா என்பது கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் அமைந்திருந்த ஒரு நகரம். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லா ஜெபக்கூடங்களுமே காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன. அதனால், அன்று ஜெபக்கூடம் எப்படி இருந்தது என்று சரியாகத் தெரியவில்லை. இந்த அனிமேஷனில் காட்டப்படுகிற சில அம்சங்கள், அந்தக் காலத்திலிருந்த நிறைய ஜெபக்கூடங்களில் இருந்ததாகத் தெரிகிறது.
1. பேச்சாளர் நிற்கும் மேடையில் அல்லது அதற்குப் பக்கத்தில் ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள், அதாவது முக்கிய இருக்கைகள், இருந்திருக்கலாம்.
2. போதகர் மேடையில் நின்றுகொண்டுதான் திருச்சட்டத்தை வாசித்திருப்பார். மேடை இருந்த இடம் ஒவ்வொரு ஜெபக்கூடத்திலும் வித்தியாசமாக இருந்திருக்கலாம்.
3. சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்கள் சுவர்பக்கமாக இருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருக்கலாம். மற்றவர்கள் தரையில் பாய்களை விரித்து உட்கார்ந்திருக்கலாம். காம்லாவில் இருந்த ஜெபக்கூடத்தில் நான்கு வரிசைகளில் இருக்கைகள் இருந்ததாகத் தெரிகிறது.
4. பரிசுத்த சுருள்களைக் கொண்ட பெட்டி, பின்பக்கச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கலாம்.
ஜெபக்கூடத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்த விதம், சிலருக்கு மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இருந்ததை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது. இந்த விஷயத்தைப் பற்றித்தான் இயேசுவின் சீஷர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்தார்கள்.—மத் 18:1-4; 20:20, 21; மாற் 9:33, 34; லூ 9:46-48.