யாக்கோபு எழுதிய கடிதம் 1:1-27

1  கடவுளுக்கும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அடிமையாக இருக்கிற யாக்கோபு,+ பல இடங்களுக்குச் சிதறிப்போன 12 கோத்திரத்தாருக்கு எழுதுவது: வாழ்த்துக்கள்!  என் சகோதரர்களே, உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்கள்* வரும்போது அதற்காகச் சந்தோஷப்படுங்கள்.+  இப்படிக் கஷ்டங்கள்* மூலம் சோதிக்கப்பட்ட உங்கள் விசுவாசம்+ சகிப்புத்தன்மையை உண்டாக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.  உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், எந்தக் குறையுமில்லாமல் எல்லா விதத்திலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்.+  உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்;+ அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட* மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.+  ஆனால், அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு+ கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.+ ஏனென்றால், சந்தேகப்படுகிறவன் காற்றால் இங்குமங்கும் அடிக்கப்படுகிற கடல் அலையைப் போல் இருக்கிறான்.  அப்படிப்பட்ட மனிதன் யெகோவாவிடமிருந்து* எதையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது;  அவன் இரண்டு மனதாக இருப்பவன்,+ தன் வழிகளிலெல்லாம் உறுதியில்லாதவன்.  தாழ்ந்த நிலையில் இருக்கிற ஒரு சகோதரன் தனக்கு ஏற்பட்டிருக்கிற உயர்வை நினைத்து சந்தோஷப்படட்டும்.*+ 10  பணக்காரனாக இருக்கிற ஒரு சகோதரன் தனக்கு ஏற்பட்ட தாழ்வை நினைத்து சந்தோஷப்படட்டும்.+ ஏனென்றால், புல்வெளியில் இருக்கிற பூவைப் போல் அவன் காய்ந்துபோவான். 11  உச்சிவெயில் கொளுத்தும்போது, செடி வாடி வதங்குகிறது, பூ உதிர்ந்து, அதன் அழகு மறைந்துபோகிறது. அதேபோல், பணக்காரனும் தன்னுடைய போக்கில் போய்க்கொண்டிருக்கும்போதே வாடி மறைந்துபோவான்.+ 12  சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்;+ ஏனென்றால், யெகோவாவினால்* ஏற்றுக்கொள்ளப்படும்போது, வாழ்வு என்ற கிரீடம் அவனுக்குக் கிடைக்கும்.+ தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களுக்கு அதைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.+ 13  சோதனை வரும்போது, “கடவுள் என்னைச் சோதிக்கிறார்” என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது. 14  ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.+ 15  பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது.+ 16  என் அன்பான சகோதரர்களே, ஏமாந்துவிடாதீர்கள். 17  நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+ 18  அவரால் படைக்கப்பட்டவர்களில் நாம் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக*+ இருக்க வேண்டுமென்று அவர் விரும்பியதால்,* சத்திய வார்த்தையின் மூலம் நமக்கு உயிர் கொடுத்தார்.+ 19  என் அன்பான சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்,+ சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.+ 20  ஏனென்றால், கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நிறைவேற்ற முடியாது.+ 21  அதனால், எல்லா விதமான அருவருப்பையும் ஒதுக்கிவிடுங்கள்; கெட்ட குணத்தை* சுவடு தெரியாமல் ஒழித்துவிடுங்கள்.+ அதோடு, உங்களை மீட்பதற்கு வல்லமையுள்ள கடவுளுடைய வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு அதை உங்கள் மனதில் பதிய வையுங்கள். 22  ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.+ 23  ஏனென்றால், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுவிட்டு அதன்படி செய்யாத மனிதன்,+ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கிறவனைப் போல் இருக்கிறான். 24  அவன் தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டுப் போனவுடனே தன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை மறந்துவிடுகிறான். 25  ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+ 26  கடவுளை வழிபடுவதாக* நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல்*+ தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும். 27  கஷ்டப்படுகிற அநாதைகளையும்+ விதவைகளையும்+ கவனித்துக்கொள்வதும்,+ இந்த உலகத்தால் கறைபடாமல்+ நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும்தான் நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, களங்கமில்லாத வழிபாடாகும்.*

அடிக்குறிப்புகள்

வே.வா., “சோதனைகள்.”
வே.வா., “சோதனைகள்.”
வே.வா., “குறைசொல்ல.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “பெருமை பேசட்டும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “பரிபூரணமான.”
நே.மொ., “முதல் விளைச்சலாக.”
வே.வா., “சித்தம்கொண்டதால்.”
அல்லது, “மிகுதியான கெட்ட குணத்தை.”
வே.வா., “தன்னைப் பக்திமானாக.”
வே.வா., “நாக்குக்குக் கடிவாளம் போடாமல்.”
வே.வா., “மதமாகும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா