யாக்கோபு எழுதிய கடிதம் 3:1-18
3 என் சகோதரர்களே, போதகர்களான எங்களுக்கு வருகிற நியாயத்தீர்ப்பு மற்றவர்களுக்கு வருவதைவிட மிகக் கடுமையாக இருக்கும்+ என்பது உங்களுக்குத் தெரிந்திருப்பதால் உங்களில் நிறைய பேர் போதகர்களாக வேண்டாம்.
2 நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.*+ பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான்.
3 குதிரைகளை அடக்க நாம் அவற்றின் வாயில் கடிவாளம் போடும்போது அவற்றின் முழு உடலையும் கட்டுப்படுத்திவிடுகிறோம், இல்லையா?
4 கப்பல்களைப் பாருங்கள்! அவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், பலத்த காற்றால் அலைக்கழிக்கப்பட்டாலும், கப்பலோட்டி மிகச் சிறிய சுக்கானை வைத்து தான் விரும்புகிற திசையை நோக்கி அவற்றை ஓட்டுகிறான்.
5 அதேபோல், நாக்கும்கூட ஒரு சிறிய உறுப்புதான். இருந்தாலும், அது பயங்கரமாகப் பெருமையடிக்கிறது. சிறிதளவு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது, பாருங்கள்!
6 நாக்கும் நெருப்புதான்.+ நம்முடைய உறுப்புகளில் ஒன்றான இந்த நாக்கு அநீதி நிறைந்த உலகமாக இருக்கிறது. ஏனென்றால், அது நம் முழு உடலையும் கறைபடுத்தி,+ நம் முழு வாழ்க்கையையும்* எரித்துவிடுகிறது; அதற்கு கெஹென்னா* நெருப்பு மூட்டிவிடுகிறது.
7 எல்லா வகையான காட்டு மிருகங்களையும் பறவைகளையும் ஊரும் பிராணிகளையும் கடல் பிராணிகளையும் மனிதனால் அடக்கிவிட முடியும், அடக்கியும் இருக்கிறான்.
8 ஆனால், நாக்கை எந்த மனிதனாலும் அடக்க முடியாது. அது அடங்காதது, தீமை உண்டாக்குவது, கொடிய விஷம் நிறைந்தது.+
9 அந்த நாக்கினால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை* புகழ்கிறோம்; இருந்தாலும், “கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்ட மனிதர்களை+ அதே நாக்கினால் சபிக்கிறோம்.
10 புகழ்வதும் சபிப்பதும் ஒரே வாயிலிருந்து வருகின்றன.
என் சகோதரர்களே, இப்படியெல்லாம் நடக்கக் கூடாது.+
11 ஒரே நீரூற்றிலிருந்து தித்திப்பான தண்ணீரும் கசப்பான தண்ணீரும் வருமா?
12 என் சகோதரர்களே, அத்தி மரம் ஒலிவப் பழங்களையோ, திராட்சைக் கொடி அத்திப் பழங்களையோ கொடுக்குமா?+ அதேபோல், உப்பு நீரூற்று நல்ல* தண்ணீரைக் கொடுக்குமா?
13 உங்கள் மத்தியில் யாருக்கு ஞானமும் புரிந்துகொள்ளும் திறனும் இருக்கிறது? இவற்றை நல்ல நடத்தையின் மூலமும், ஞானத்தால் வருகிற சாந்தத்தின் மூலமும் அவன் காட்டட்டும்.
14 உங்கள் இதயங்களில் பயங்கர பொறாமையும்+ பகையும்* இருக்கிறதென்றால்,+ நீங்கள் பெருமையடிக்காதீர்கள்.+ உண்மைக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள்.
15 இப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் அல்ல. இது உலகப்பிரகாரமானது,+ மிருகத்தனமானது, பேய்த்தனமானது.
16 பொறாமையும் பகையும்* எங்கேயோ, அங்கே கலகங்களும் கீழ்த்தரமான எல்லா செயல்களும் இருக்கும்.+
17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+
18 சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக*+ சமாதானச் சூழலில் நீதியின் விதை விதைக்கப்பட்டு, அதன் கனி அறுவடை செய்யப்படுகிறது.+
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “தடுக்கி விழுகிறோம்.”
^ நே.மொ., “நம் வாழ்க்கைச் சக்கரத்தை.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “தித்திப்பான.”
^ அல்லது, “சுயநல லட்சியமும்.”
^ அல்லது, “சுயநல லட்சியமும்.”
^ அதாவது, “வளைந்துகொடுப்பதாக.”
^ அல்லது, “பண்ணுகிறவர்களால்.”