யாத்திராகமம் 10:1-29

10  பின்பு யெகோவா மோசேயிடம், “நீ பார்வோனிடம் போ. அவனும் அவனுடைய ஊழியர்களும் பிடிவாதமாக இருக்கும்படி நான் விட்டுவிட்டேன்.+ என்னுடைய அற்புதங்களை அவன் கண் முன்னால் செய்து காட்டுவதற்காகவும்,+  எகிப்தை நான் எந்தளவுக்குக் கடுமையாகத் தண்டித்தேன் என்பதையும், அங்கே என்னென்ன அற்புதங்கள் செய்தேன் என்பதையும் உங்கள் மகன்களுக்கும் பேரன்களுக்கும் நீங்கள் சொல்வதற்காகவும் அப்படிச் செய்தேன்.+ நான் யெகோவா என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.  அதனால் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “எபிரெயர்களின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நீ எனக்கு அடங்காமல் இருப்பாய்?+ என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.  அவர்களை அனுப்பாமல் நீ பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தால், நாளைக்கு உன்னுடைய தேசத்துக்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன்.  தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி* மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+  உன் வீடுகளும் உன் ஊழியர்கள் எல்லாருடைய வீடுகளும் எகிப்திலுள்ள எல்லாருடைய வீடுகளும் அவற்றால் நிரம்பும். உங்களுடைய அப்பாக்களும் தாத்தாக்களும் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை இந்தத் தேசத்தில் பார்த்திருக்கவே மாட்டார்கள்’”+ என்றார்கள். பின்பு, மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப் போனார்.  அதன்பின் பார்வோனிடம் அவனுடைய ஊழியர்கள், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த மனுஷன் நம்மை மிரட்டிக்கொண்டே இருப்பான்? அவர்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குவதற்காக அவர்களை அனுப்பிவிடுங்கள். ஏற்கெனவே எகிப்து தேசம் நாசமாகிவிட்டது. இது இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்றார்கள்.  அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் மறுபடியும் கூப்பிட்டு, “போய் உங்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குங்கள். ஆனால், யாரெல்லாம் போகப்போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்” என்றான்.  அதற்கு மோசே, “எங்களுடைய கடவுளான யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட+ நாங்கள் சிறியவர்களையும் பெரியவர்களையும் மகன்களையும் மகள்களையும் ஆடுகளையும் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்”+ என்றார்கள். 10  அப்போது அவன், “நான் மட்டும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் அனுப்பிவிட்டேன் என்றால், யெகோவா உங்களோடு இருக்கிறார் என்று அர்த்தம்!+ நீங்கள் கண்டிப்பாக ஏதோ சூழ்ச்சி செய்கிறீர்கள். 11  எல்லாரையும் நான் அனுப்ப மாட்டேன்! யெகோவாவை வணங்குவதற்கு ஆண்களை மட்டும்தான் அனுப்புவேன். நீங்களும் அப்படித்தான் என்னிடம் கேட்டீர்கள்” என்று சொன்னான். உடனே அவர்கள் பார்வோன் முன்னாலிருந்து துரத்தப்பட்டார்கள். 12  அப்போது யெகோவா மோசேயிடம், “எகிப்து தேசத்தின் மேல் உன் கையை நீட்டு. தேசமெங்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வரட்டும். ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்க்கட்டும்” என்றார். 13  உடனே மோசே எகிப்து தேசத்தின் மேல் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது யெகோவா, கிழக்குக் காற்று வீசும்படி செய்தார். அன்று பகலிலும் ராத்திரியிலும் காற்று வீசிக்கொண்டே இருந்தது. விடியற்காலையில், அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு வந்தது. 14  அந்த வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தையே மூடின. அவை பயங்கரமாகப் படையெடுத்து வந்து+ மூலைமுடுக்கெல்லாம் பரவின.+ அவ்வளவு ஏராளமான வெட்டுக்கிளிகள் அதற்குமுன் வந்ததே இல்லை, இனிமேலும் வரப்போவதில்லை. 15  அவை அந்தத் தேசத்தின் நிலப்பரப்பையே மூடிவிட்டன. அவற்றால் தேசமே இருண்டுபோனது. ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும், மரங்களிலிருந்த பழங்கள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்த்தன. எகிப்து தேசமெங்கும் இருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அவை மொட்டையாக்கிவிட்டன. 16  அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக வரவழைத்து, “உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன். 17  அதனால், இந்த ஒரு தடவை மட்டும் என் பாவத்தை மன்னித்துவிட்டு, உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் தயவுசெய்து வேண்டிக்கொள்ளுங்கள். இந்தப் பயங்கரமான தண்டனையை எப்படியாவது நீக்கிவிடச் சொல்லுங்கள்” என்றான். 18  அதனால், அவர்* பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.+ 19  உடனே யெகோவா, கிழக்குக் காற்றை மிகவும் பலமான மேற்குக் காற்றாக மாற்றினார். அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலில் தள்ளியது. எகிப்து தேசத்தில் ஒரு வெட்டுக்கிளிகூட மிஞ்சவில்லை. 20  ஆனாலும், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார்,+ இஸ்ரவேலர்களை அவன் அனுப்பவில்லை. 21  பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசம் இருட்டாகிவிடும். அந்த இருட்டு படுபயங்கரமாக இருக்கும்” என்றார். 22  உடனடியாக மோசே வானத்துக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டினார். அப்போது, எகிப்து தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கும்மிருட்டாக ஆனது.+ 23  மூன்று நாட்களுக்கு யாராலும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியவில்லை, இருந்த இடத்தைவிட்டு நகரவும் முடியவில்லை. ஆனால், இஸ்ரவேலர்கள் குடியிருந்த பகுதிகளில் வெளிச்சம் இருந்தது.+ 24  அதன்பின் பார்வோன் மோசேயை வரவழைத்து, “போய் யெகோவாவை வணங்குங்கள்.+ உங்கள் ஆடுமாடுகளை மட்டும் இங்கேயே விட்டுவிடுங்கள். உங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்கள்” என்றான். 25  ஆனால் மோசே, “எங்கள் மிருகங்களையும் கொண்டுபோக நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவற்றை எங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ 26  அதனால் எங்கள் கால்நடைகளையும் நாங்கள் கொண்டுபோவோம். ஒரு மிருகத்தைக்கூட விட்டுவிட்டுப் போக மாட்டோம். ஏனென்றால், எங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்கும்போது சில மிருகங்களைப் பலி கொடுப்போம். யெகோவாவுக்கு எதைப் பலி கொடுப்போம், எதைப் பலி கொடுக்க மாட்டோம் என்று அங்கு போகும்வரை எங்களுக்கே தெரியாது” என்றார். 27  அப்போது, பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவர்களை அனுப்ப அவன் ஒத்துக்கொள்ளவில்லை.+ 28  பார்வோன் மோசேயிடம், “என்னுடைய கண் முன்னால் நிற்காதே! இனி என் முகத்திலேயே முழிக்காதே, மீறினால் நீ உயிரோடு இருக்க மாட்டாய்” என்றான். 29  அதற்கு மோசே, “சரி, நீங்கள் சொன்னபடி இனி நான் உங்களுடைய முகத்தில் முழிக்கப்போவதில்லை” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “பனிக்கட்டி.”
அநேகமாக, “மோசே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா