யாத்திராகமம் 11:1-10

11  பின்பு யெகோவா மோசேயிடம், “பார்வோனுக்கும் எகிப்துக்கும் இன்னுமொரு தண்டனை கொடுப்பேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவான்.+ சொல்லப்போனால், உங்களை இங்கிருந்து துரத்தியே விடுவான்.+  அதனால், எல்லா ஆண்களும் பெண்களும் மற்றவர்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் என்று என்னுடைய ஜனங்களிடம் போய்ச் சொல்”+ என்றார்.  எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்படி யெகோவா செய்தார். அதுமட்டுமல்ல, எகிப்தில் மோசேயின் மதிப்புக் கூடியிருந்தது. பார்வோனின் ஊழியர்களும் ஜனங்களும் அவரை மிக உயர்வாக நினைத்தார்கள்.  மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்று நடுராத்திரியில் நான் எகிப்து தேசத்துக்கு வருவேன்.+  அப்போது, எகிப்து தேசத்திலுள்ள மூத்த மகன்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற பார்வோனின் மூத்த மகன்முதல் மாவு அரைக்கிற* அடிமைப் பெண்ணின் மூத்த மகன்வரை எல்லாரும் செத்துப்போவார்கள். மிருகங்களுடைய முதல் குட்டிகளும் செத்துப்போகும்.+  எகிப்து தேசமெங்கும் பயங்கரமான ஒப்பாரிச் சத்தம் கேட்கும். அப்படிப்பட்ட சத்தம் அதற்கு முன்பும் கேட்டிருக்காது, இனிமேலும் கேட்காது.+  இஸ்ரவேல் ஜனங்களையோ அவர்களுடைய மிருகங்களையோ பார்த்து ஒரு நாய்கூட குரைக்காது. அப்போது, யெகோவா எகிப்தியர்களை எப்படி நடத்துகிறார், இஸ்ரவேலர்களை எப்படி நடத்துகிறார் என்று நீ தெரிந்துகொள்வாய்’”+ என்றார்.  அதோடு மோசே அவரிடம், “உங்களுடைய ஊழியர்கள் எல்லாரும் கண்டிப்பாக என் முன்னால் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து, ‘நீங்களும் உங்களுடைய ஜனங்கள் எல்லாரும் தயவுசெய்து போய்விடுங்கள்’ என்று சொல்வார்கள்,+ அப்போது நான் போவேன்” என்று சொன்னார். பிறகு, கடும் கோபத்தோடு பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப் போனார்.  யெகோவா மோசேயிடம், “நீங்கள் இரண்டு பேரும் சொல்வதை பார்வோன் கேட்க மாட்டான்.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் இன்னும் பல அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கும்”+ என்றார். 10  மோசேயும் ஆரோனும் பார்வோனின் முன்னால் எல்லா அற்புதங்களையும் செய்தார்கள்.+ ஆனால், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பவில்லை.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “திரிகைக் கல்லில் அரைக்கிற.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா