யாத்திராகமம் 29:1-46

29  பின்பு அவர், “எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக நீ அவர்களைப் புனிதப்படுத்த வேண்டும். அதற்காக நீ செய்ய வேண்டியது இதுதான்: ஒரு இளம் காளையையும் எந்தக் குறையும் இல்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் தேர்ந்தெடு.+  நைசான கோதுமை மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளையும், எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும்+ செய்து,  ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வா.+ அதோடு, நீ தேர்ந்தெடுத்த காளையையும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவா.  ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, குளிக்க வை.*+  பின்பு கட்டம்போட்ட அங்கியையும், கையில்லாத உள்ளங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் எடுத்து வந்து ஆரோனுக்குப் போட்டுவிடு. ஏபோத்தின் இடுப்புப்பட்டையைக் கட்டிவிடு.+  தலைப்பாகையை அவன் தலையில் வை. அதன்மேல் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளத்தைக் கட்டிவிடு.*+  அபிஷேகத் தைலத்தை+ அவன் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்.+  பின்பு, அவனுடைய மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கும் அங்கிகளைப் போட்டுவிடு.+  ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்பில் கச்சையைக் கட்டிவிடு. அவர்களுடைய தலையில் முண்டாசையும் கட்டிவிடு. அவர்கள்தான் குருமார்களாக இருப்பார்கள், என்றென்றும் இதுதான் என் சட்டம்.+ எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இப்படித்தான் நீ நியமிக்க வேண்டும்.+ 10  பின்பு, சந்திப்புக் கூடாரத்துக்கு முன்பு காளையைக் கொண்டுவா. ஆரோனும் அவனுடைய மகன்களும் அந்தக் காளையின் தலைமேல் தங்கள் கைகளை வைக்க வேண்டும்.+ 11  சந்திப்புக் கூடாரத்தின் வாசலில், யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையை வெட்டு.+ 12  காளையின் இரத்தத்தை உன் விரல்களில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசு.+ மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடு.+ 13  அதன் குடல்களைச் சுற்றியுள்ள எல்லா கொழுப்பையும்+ கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின் மேல் எரித்துவிடு.+ 14  ஆனால், காளையின் சதையையும் தோலையும் சாணத்தையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரித்துவிடு. இந்தக் காளைதான் பாவப் பரிகார பலி. 15  பின்பு, அந்தச் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவா. அதன் தலைமேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் கைகளை வைக்க வேண்டும்.+ 16  நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி.+ 17  செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் குடல்களையும் கால்களையும் கழுவு.+ அதன் தலையையும் மற்ற எல்லா துண்டுகளையும் அதனதன் இடத்தில் வை. 18  முழு செம்மறியாட்டுக் கடாவையும் பலிபீடத்தின் மேல் வைத்து எரித்துவிடு. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி. 19  பின்பு, இன்னொரு செம்மறியாட்டுக் கடாவையும் நீ கொண்டுவா. ஆரோனும் அவனுடைய மகன்களும் அதன் தலைமேல் கைகளை வைக்க வேண்டும்.+ 20  நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும் அவனுடைய மகன்களின் வலது காது மடலிலும் பூசு. அதோடு, அவர்களுடைய வலது கையின் கட்டைவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசு. மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி. 21  பின்பு, பலிபீடத்தின் மேலுள்ள அந்த இரத்தத்தில் கொஞ்சத்தையும் அபிஷேகத் தைலத்தில்+ கொஞ்சத்தையும் எடுத்து, அவற்றை ஆரோன்மேலும் அவனுடைய உடைகள்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகள்மேலும் தெளி. அப்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தமாவார்கள், அவர்களுடைய உடைகளும் பரிசுத்தமாகும்.+ 22  அது குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடா என்பதால் அதன் கொழுப்பையும், கொழுப்பு நிறைந்த அதன் வாலையும், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும்,+ அதன் வலது காலையும் எடுத்துக்கொள்.+ 23  அதோடு, யெகோவாவின் முன்னிலையில் புளிப்பில்லாத ரொட்டிகள் வைக்கப்பட்டுள்ள கூடையிலிருந்து ஒரு வட்ட ரொட்டியையும், எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட ஒரு வட்ட ரொட்டியையும், ஒரு மெல்லிய ரொட்டியையும் எடுத்துக்கொள். 24  அவை எல்லாவற்றையும் ஆரோனின் கையிலும் அவருடைய மகன்களின் கையிலும் வைத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. 25  பின்பு, அவற்றை அவர்களுடைய கையிலிருந்து எடுத்து, பலிபீடத்திலுள்ள தகன பலியின் மேல் வைத்து எரித்துவிடு. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி. 26  பின்பு, ஆரோனைக் குருவாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* எடுத்து,+ அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. அது உனக்குச் சேர வேண்டிய பங்கு. 27  நீ அசைவாட்டுகிற அந்த மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய கால் பகுதியையும் புனிதப்படுத்து. அவை ஆரோனையும் அவனுடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவிலிருந்து+ எடுக்கப்பட்டவை. 28  இஸ்ரவேலர்கள் அவற்றை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுக்க வேண்டும். இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகப் பின்பற்ற வேண்டும்.+ ஏனென்றால், அவை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேர வேண்டிய பரிசுத்தமான பங்கு. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் சமாதான பலிகளைச் செலுத்தும்போதெல்லாம் அவை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த பங்காகக் கொடுக்கப்பட வேண்டும்.+ 29  ஆரோனுக்குப்பின் அவனுடைய மகன்கள்* அபிஷேகம் செய்யப்பட்டு குருமார்களாக நியமிக்கப்படும்போது, அவனுடைய பரிசுத்த உடைகளை+ அவர்கள் போட்டுக்கொள்வார்கள்.+ 30  இப்படி, ஆரோனுக்குப்பின் குருவாக நியமிக்கப்பட்டு சந்திப்புக் கூடாரத்தின் பரிசுத்த இடத்தில் சேவை செய்ய வருகிறவர், இந்த உடைகளை ஏழு நாட்களுக்குப் போட்டுக்கொள்ள வேண்டும்.+ 31  குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியை நீ பரிசுத்தமான இடத்தில் வேக வைக்க வேண்டும்.+ 32  ஆரோனும் அவனுடைய மகன்களும், அந்த இறைச்சியையும் கூடையிலுள்ள ரொட்டிகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சாப்பிட வேண்டும்.+ 33  அவர்களை குருமார்களாக நியமிப்பதற்காகவும் புனிதப்படுத்துவதற்காகவும் செலுத்தப்பட்ட பாவப் பரிகாரப் பலிகளை அவர்கள் சாப்பிட வேண்டும். தகுதி இல்லாதவர்கள்* அவற்றைச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை பரிசுத்தமானவை.+ 34  குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற பலியிலும் ரொட்டியிலும் காலைவரை ஏதாவது மீதியாக இருந்தால் அவற்றை நீ சுட்டெரிக்க வேண்டும்.+ அவை பரிசுத்தமானவை என்பதால் அவற்றைச் சாப்பிடக் கூடாது. 35  நான் உனக்குச் சொன்னபடியெல்லாம் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்ய வேண்டும். அவர்களைக் குருமார்களாய் நியமிப்பதற்காக ஏழு நாட்கள் எடுத்துக்கொள்.+ 36  பாவப் பரிகார பலியாகிய காளையைத் தினமும் பலி கொடுத்து பாவப் பரிகாரம் செய். பலிபீடத்தின் மேல் பலிகள் செலுத்தி அதைச் சுத்திகரி. அதைப் புனிதப்படுத்துவதற்காக அபிஷேகம் செய்.+ 37  பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக நீ ஏழு நாட்கள் எடுத்துக்கொள். அது மகா பரிசுத்த பலிபீடமாய் ஆவதற்காக நீ அதைப் புனிதப்படுத்த வேண்டும்.+ பரிசுத்தமாக இருக்கிறவர்கள் மட்டும்தான் அந்தப் பலிபீடத்தைத் தொட வேண்டும். 38  ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைப் பலிபீடத்தின் மேல் தினமும் நீ பலி கொடு.+ 39  செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒன்றைக் காலையிலும் மற்றொன்றைச் சாயங்காலத்திலும் பலி கொடு.+ 40  ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவையும் இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* சுத்தமான ஒலிவ எண்ணெயையும் கலந்து எடுத்துக்கொள். அதோடு, ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாக எடுத்துக்கொள். இவற்றை முதலாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் செலுத்து. 41  காலையில் செய்தது போலவே சாயங்காலத்திலும் இரண்டாம் செம்மறியாட்டுக் கடாக் குட்டியை உணவுக் காணிக்கையோடும் திராட்சமது காணிக்கையோடும் பலி கொடுக்க வேண்டும். யெகோவாவுக்குப் பிடித்த வாசனையான தகன பலியாக அதைச் செலுத்த வேண்டும். 42  சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தலைமுறை தலைமுறையாக அதைத் தினமும் யெகோவாவின் முன்னிலையில் எரிக்க வேண்டும். உன்னிடம் பேசுவதற்காக ஜனங்கள் முன்னால் நான் அங்கே தோன்றுவேன்.+ 43  நான் அங்கே இஸ்ரவேலர்கள் முன்னால் தோன்றும்போது, அந்த இடம் என் மகிமையால் புனிதமாகும்.+ 44  சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் புனிதமாக்குவேன். எனக்குக் குருமார்களாகச் சேவை செய்வதற்காக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் புனிதமாக்குவேன்.+ 45  நான் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவில் தங்கியிருந்து, அவர்கள் கடவுளாக இருப்பேன்.+ 46  அவர்கள் நடுவில் தங்குவதற்காக அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.+ நானே அவர்கள் கடவுளாகிய யெகோவா” என்றார்.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, “குளிக்கச் சொல்.”
அதாவது, “அதன்மேல் பரிசுத்த மகுடத்தை வை.”
அதாவது, “நெஞ்சுப் பகுதியை.”
அதாவது, “அவனுடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.”
அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராதவர்கள்.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா