யாத்திராகமம் 37:1-29

37  பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+  அதன் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் அவர் தகடு அடித்தார். அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார்.+  பின்பு, தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலேயும் பொருத்தினார். இரண்டு வளையங்களை ஒரு பக்கத்திலும், மற்ற இரண்டு வளையங்களை இன்னொரு பக்கத்திலும் பொருத்தினார்.  அடுத்ததாக, வேல மரத்தில் கம்புகள் செய்து, அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார்.+  பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த வளையங்களில் அந்தக் கம்புகளைச் செருகி வைத்தார்.+  இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும்+ சுத்தமான தங்கத்தால் ஒரு மூடியைச்+ செய்தார்.  தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்தார்.+ அவை மூடியின்+ இரண்டு முனைகளிலும் இருந்தன.  ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் ஒரு கேருபீனும் இருந்தன. இப்படி, மூடியின் இரண்டு முனைகளிலும் கேருபீன்களைச் செய்து வைத்தார்.  அந்த இரண்டு கேருபீன்களின் சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன.+ அந்தக் கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன.+ 10  பின்பு, அவர் இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும்+ வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்தார். 11  அதற்குச் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார், விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 12  நான்கு விரலளவு அகலத்துக்கு* சுற்றிலும் சட்டம் அடித்து, அந்தச் சட்டத்தின் ஓரங்களில் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 13  பின்பு, தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, மேஜையின் நான்கு கால்கள் இணைக்கப்பட்டுள்ள நான்கு மூலைகளிலும் பொருத்தினார். 14  இந்த வளையங்களைச் சட்டத்துக்குப் பக்கத்தில் பொருத்தினார். மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக இந்த வளையங்களைச் செய்தார். 15  பின்பு, மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளை வேல மரத்தால் செய்து, தங்கத்தால் தகடு அடித்தார். 16  அதன்பின், மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும் செய்தார். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்தார்.+ 17  பின்பு, சுத்தமான தங்கத்தால் குத்துவிளக்கு+ செய்தார். அதன் அடிப்பகுதி, தண்டு, புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்தார்.+ 18  விளக்குத்தண்டின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகள், இன்னொரு பக்கத்தில் மூன்று கிளைகள் என்று மொத்தம் ஆறு கிளைகள் இருந்தன. 19  ஒவ்வொரு கிளையிலும் வாதுமைப் பூ வடிவத்தில் மூன்று புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருந்தன. விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளிலும் அதேபோல் இருந்தன. 20  விளக்குத்தண்டிலும் வாதுமைப் பூ வடிவத்தில் நான்கு புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருந்தன. 21  முதல் இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அதற்கடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு என்று விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளுக்கும் இருந்தன. 22  குத்துவிளக்கின் மொட்டுகளையும் கிளைகளையும் தண்டு முழுவதையும் சுத்தமான தங்கத்தில் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்தார். 23  பின்பு, அதன் ஏழு அகல் விளக்குகளையும்,+ இடுக்கிகளையும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தார். 24  குத்துவிளக்கையும் அதற்கான எல்லா சாமான்களையும் ஒரு தாலந்து* சுத்தமான தங்கத்தில் செய்தார். 25  தூபம் போடுவதற்காக வேல மரத்தால் ஒரு பீடம் செய்தார்.+ அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஒரு முழமாகவும் அகலம் ஒரு முழமாகவும் உயரம் இரண்டு முழமாகவும் இருந்தது. அதனுடன் இணைந்தபடி கொம்புகள் இருந்தன.+ 26  அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார். 27  அதைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளைச் செருகுவதற்காக, அந்த வேலைப்பாட்டுக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இரண்டிரண்டு தங்க வளையங்களைப் பொருத்தினார். 28  வேல மரத்தால் கம்புகள் செய்து அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். 29  பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும்,+ சுத்தமான தூபப்பொருளையும்+ அவர் பக்குவமாக* தயாரித்தார்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பூ இதழ்களின் அடியில் உள்ளதும் அவற்றைத் தாங்குவதுமான இலை போன்ற பகுதிகள்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தைலம் தயாரிப்பவர் செய்வது போல.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா