யோசுவா 18:1-28

18  பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் சீலோவில்+ ஒன்றுகூடி, அங்கே சந்திப்புக் கூடாரத்தை அமைத்தார்கள்.+ ஏனென்றால், அப்போது தேசம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.+  இஸ்ரவேலர்களில் ஏழு கோத்திரத்தாருக்கு அதுவரை எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.  அதனால் யோசுவா இஸ்ரவேலர்களிடம், “உங்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா தந்த தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளாமல் இன்னும் எவ்வளவு காலம்தான் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பீர்கள்?+  ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்று ஆண்களைத் தேர்ந்தெடுத்து என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். இந்தத் தேசம் முழுவதும் நடந்துபோய், ஒவ்வொரு கோத்திரத்துக்கும் சேர வேண்டிய இடங்களின் வரைபடத்தை வரைந்துகொண்டு வருவதற்காக நான் அவர்களை அனுப்புவேன்.  தேசத்தை ஏழு பங்காக அவர்களுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும்.+ யூதா கோத்திரத்தார் தெற்கிலுள்ள தங்கள் பகுதியிலும்,+ யோசேப்பின் வம்சத்தார் வடக்கிலுள்ள தங்கள் பகுதியிலும் இருக்க வேண்டும்.+  நீங்கள் தேசத்தை ஏழு பங்காக வரைந்து என்னிடம் கொண்டுவர வேண்டும். உங்களுக்குச் சேர வேண்டிய பங்கை நம் கடவுளாகிய யெகோவாவின் முன்னால் குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுப்பேன்.  ஆனால், லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் கொடுக்கப்படாது.+ யெகோவாவுக்குச் செய்யும் குருத்துவச் சேவைதான் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சொத்து.+ யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பங்கை காத், ரூபன், மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்+ யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் ஏற்கெனவே பெற்றுக்கொண்டார்கள்” என்று சொன்னார்.  யோசுவா அந்த மூன்று ஆண்களிடமும், “நீங்கள் தேசம் முழுவதும் நடந்துபோய், வரைபடம் வரைந்துகொண்டு என்னிடம் வாருங்கள். உங்களுக்குச் சேர வேண்டிய பங்கை சீலோவில் யெகோவாவுக்கு முன்னால் குலுக்கல் போட்டுத் தேர்ந்தெடுப்பேன்”+ என்று சொன்னார்.  உடனே அவர்கள் புறப்பட்டுப் போய், தேசம் முழுவதும் பயணம் செய்து, அதை ஏழு பங்காகப் பிரித்து, ஒரு புத்தகத்தில் வரைந்துகொண்டார்கள். அங்கிருந்த நகரங்களையும் அதில் குறித்துக்கொண்டு, சீலோவில் முகாம்போட்டிருந்த யோசுவாவிடம் வந்தார்கள். 10  சீலோவில் யெகோவாவின் முன்னால் இஸ்ரவேலர்களுக்காக யோசுவா குலுக்கல் போட்டார்.+ அதன்பின் தேசத்தைப் பிரித்து, அவரவர் பங்கைக் கொடுத்தார்.+ 11  பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி குலுக்கல் முறையில் பங்கு கிடைத்தது. யூதா வம்சத்தாருக்கும்+ யோசேப்பின் வம்சத்தாருக்கும்+ இடையே அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. 12  அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தானில் தொடங்கி, எரிகோவின்+ வடக்குச் சரிவில் ஏறி, மேற்கே உள்ள மலைவரை போய், பின்பு பெத்-ஆவேன்+ வனாந்தரம்வரை போனது. 13  அங்கிருந்து லஸ்ஸின் தென் சரிவுவரை, அதாவது பெத்தேல்வரை,+ போனது. பின்பு அது இறங்கி, கீழ் பெத்-ஓரோனுக்குத்+ தெற்கே, மலைமேல் உள்ள அதரோத்-அதாருக்குப்+ போனது. 14  மேற்கு எல்லை, தெற்கே பெத்-ஓரோனைப் பார்த்தபடி இருக்கிற மலையிலிருந்து தெற்குப் பக்கமாகத் திரும்பியது. பின்பு யூதாவின் நகரமாகிய கீரியாத்-பாகாலில், அதாவது கீரியாத்-யெயாரீமில்,+ முடிவடைந்தது. 15  தெற்கு எல்லை கீரியாத்-யெயாரீமின் முனையில் தொடங்கி மேற்குப் பக்கமாகப் போனது. அது நெப்தோவா நீரூற்றுவரை போனது.+ 16  அந்த எல்லை பென்-இன்னோம்* பள்ளத்தாக்கைப்+ பார்த்தபடி இருக்கிற மலையின் அடிவாரத்துக்குப் போனது. அதாவது, ரெப்பாயீம்+ பள்ளத்தாக்கின் வடக்கில் இருக்கிற மலையின் அடிவாரம்வரை போனது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்குவரை, தெற்கே எபூசியர்களின்+ மலைச் சரிவுவரை, அந்த எல்லை போய் என்-ரொகேலுக்கு+ இறங்கியது. 17  அதன்பின் வடக்கே என்-சேமேசுக்குப் போய், அதும்மீம் மேட்டுக்கு+ முன்னால் உள்ள கெலிலோத்துக்குப் போனது. பின்பு, ரூபனுடைய மகனாகிய போகனின்+ கல்+ வரையில் இறங்கிப் போனது. 18  அதன்பின் அரபாவுக்கு முன்னால் உள்ள வடக்கு மலைச் சரிவுவரை போய், அங்கிருந்து அரபாவுக்கு இறங்கியது. 19  அந்த எல்லை பெத்-ஓக்லாவின்+ வடக்கு மலைச் சரிவுவரை போய், யோர்தானின் தென்முனையில் உள்ள உப்புக் கடலின்*+ வடக்கு விரிகுடாவில் முடிவடைந்தது. இதுதான் தெற்கு எல்லை. 20  யோர்தான் அதன் கிழக்கு எல்லையாக இருந்தது. பென்யமீன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி நாலாபக்கமும் கிடைத்த எல்லை இதுதான். 21  பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த நகரங்கள் இவைதான்: எரிகோ, பெத்-ஓக்லா, ஏமக்-கேசீஸ், 22  பெத்-அரபா,+ செமராயிம், பெத்தேல்,+ 23  ஆவீம், பாரா, ஒப்ரா, 24  கேப்பார்-அமோனாய், ஒப்னி, மற்றும் கெபா.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 12. 25  கிபியோன்,+ ராமா, பேரோத், 26  மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, 27  ரெக்கேம், இர்பெயேல், தாராலா, 28  ஸேலா,+ ஹா-ஏலேப், எபூசி, அதாவது எருசலேம்,+ கிபியா,+ மற்றும் கீரியாத். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 14. பென்யமீன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து இதுதான்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “இன்னோம் மகனின்.”
அதாவது, “சவக் கடலின்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா