யோசுவா 2:1-24

2  பின்பு, நூனின் மகன் யோசுவா இரண்டு உளவாளிகளை சித்தீமிலிருந்து+ ரகசியமாக அனுப்பி, “நீங்கள் போய் கானான் தேசத்தை உளவு பாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தை உளவு பாருங்கள்” என்று சொன்னார். அதனால், அவர்கள் எரிகோவுக்குப் போய் ராகாப்+ என்ற விலைமகளின் வீட்டில் தங்கினார்கள்.  அப்போது, “தேசத்தை உளவு பார்க்க இந்த ராத்திரியில் இஸ்ரவேல் ஆண்கள் வந்திருக்கிறார்கள்” என்ற செய்தி எரிகோவின் ராஜாவுடைய காதுக்கு எட்டியது.  உடனே அவன் ராகாபிடம் ஆட்களை அனுப்பி, “உன் வீட்டுக்கு வந்திருக்கிற ஆட்களை வெளியே கொண்டுவா, அவர்கள் நம்முடைய தேசத்தை உளவு பார்க்க வந்திருக்கிறார்கள்” என்று சொன்னான்.  ஆனால், அவள் அந்த இரண்டு பேரையும் ஒளித்துவைத்திருந்தாள். அதனால் ராஜாவின் ஆட்களிடம், “அந்த ஆட்கள் என் வீட்டுக்கு வந்தது உண்மைதான். ஆனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது.  இருட்டிய பிறகு, நகரவாசல் அடைக்கப்படும் நேரத்தில் அவர்கள் போய்விட்டார்கள். எங்கே போனார்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் உடனடியாகத் துரத்திக்கொண்டு போனால், அவர்களைப் பிடித்துவிடலாம்” என்று சொன்னாள்.  (ஆனால், அவர்களை வீட்டின் மொட்டைமாடிக்குக் கொண்டுபோய், அங்கே பரப்பி வைக்கப்பட்டிருந்த ஆளிவிதைச் செடியின்* தட்டைகளுக்குள்ளே ஒளித்துவைத்திருந்தாள்.)  அதனால், அந்த ஆட்கள் அவர்களைத் தேடிக்கொண்டு யோர்தான் ஆற்றுத்துறைகளுக்கு* போனார்கள்.+ அவர்கள் நகரத்துக்கு வெளியே போனவுடன் நகரவாசல் அடைக்கப்பட்டது.  அந்த உளவாளிகள் தூங்கிவிடுவதற்கு முன்பு, அவள் அந்த மொட்டைமாடிக்கு வந்தாள்.  அவள் அவர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார்+ என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.+ 10  ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது உங்கள் முன்னால் செங்கடலை யெகோவா வற்றிப்போகச் செய்ததையும்,+ எமோரியர்களின் இரண்டு ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ யோர்தானின் கிழக்கே நீங்கள் அழித்துப்போட்டதையும் கேள்விப்பட்டோம். 11  அதைக் கேள்விப்பட்டபோது வெலவெலத்துப்போனோம். இப்போது உங்களை எதிர்க்க யாருக்குமே தைரியம் இல்லை. மேலே வானத்திலும் சரி, கீழே பூமியிலும் சரி, உங்கள் கடவுளாகிய யெகோவாதான் கடவுள்.+ 12  நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்தது போல எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் விசுவாசமாக இருப்பீர்கள் என்று யெகோவாவின் பெயரில் தயவுசெய்து சத்தியம் செய்து கொடுங்கள். உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்கள் என்பதற்கு நம்பகமான ஒரு அடையாளம் கொடுங்கள். 13  என் அப்பா அம்மாவையும் சகோதர சகோதரிகளையும் அவர்களுக்குச் சொந்தமானவர்களையும் நீங்கள் கொல்லக் கூடாது. எங்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும்”+ என்று சொன்னாள். 14  அதற்கு அந்த உளவாளிகள், “எங்கள் உயிரையே கொடுத்து உங்களைக் காப்பாற்றுவோம்! ஆனால், நாங்கள் வந்துபோனதைப் பற்றி நீங்கள் யாரிடமும் வாய் திறக்கக் கூடாது. அப்போதுதான், இந்தத் தேசத்தை யெகோவா எங்களுக்குக் கொடுக்கும்போது நாங்களும் உங்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்போம்”* என்று சொன்னார்கள். 15  ராகாபின் வீடு நகரத்தின் மதிலோடு இணைந்தபடி இருந்தது. சொல்லப்போனால், அவள் அந்த மதில்மேல்தான் குடியிருந்தாள். அதனால் அவள், ஜன்னலில் ஒரு கயிறு கட்டி அவர்களை இறக்கிவிட்டாள்.+ 16  அப்போது அவர்களிடம், “நீங்கள் மலைப்பகுதிக்குப் போய் அங்கே மூன்று நாட்களுக்கு ஒளிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைத் தேடுகிறவர்களால் உங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் திரும்பி வந்த பின்பு, நீங்கள் உங்களுடைய இடத்துக்குப் போகலாம்” என்று சொன்னாள். 17  அதற்கு அவர்கள், “நாங்கள் இந்தத் தேசத்துக்கு வரும்போது, நீங்கள் எங்களை இறக்கிவிட்ட ஜன்னலில் இந்தச் சிவப்புநூல் கயிற்றைக் கட்டித் தொங்கவிடுங்கள். உங்கள் அப்பா அம்மாவையும் சகோதரர்களையும் உங்கள் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரையும் இந்த வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்.+ 18  அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் எங்களிடம் வாங்கிக்கொண்ட சத்தியம்+ செல்லாது. 19  யாராவது உங்கள் வீட்டைவிட்டு வெளியே போனால், அவருடைய சாவுக்கு* அவர்தான் பொறுப்பு, நாங்கள் பொறுப்பு அல்ல. ஆனால், இந்த வீட்டுக்குள்ளே இருக்கிற யாருடைய உயிருக்காவது ஆபத்து வந்தால், அதற்கு நாங்கள்தான் பொறுப்பு. 20  நாங்கள் வந்துபோனதைப் பற்றி நீங்கள் யாரிடமாவது சொன்னால்,+ நீங்கள் எங்களிடம் வாங்கிக்கொண்ட சத்தியம் செல்லாது” என்று சொன்னார்கள். 21  அதற்கு அவள், “நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்” என்றாள். பின்பு அவர்களை அனுப்பி வைத்தாள், அவர்களும் அங்கிருந்து போனார்கள். பிற்பாடு, அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலில் கட்டித் தொங்கவிட்டாள். 22  அந்த உளவாளிகள் மலைப்பகுதிக்குப் போய் மூன்று நாட்கள் தங்கினார்கள். தேடுகிறவர்கள் திரும்பிப் போகும்வரை அங்கேயே தங்கினார்கள். அந்த ஆட்கள் வழியெல்லாம் தேடியும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 23  பின்பு, அந்த இரண்டு உளவாளிகளும் மலைப்பகுதியிலிருந்து இறங்கி, ஆற்றைக் கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்தார்கள். நடந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார்கள். 24  அதோடு, “இந்த முழு தேசத்தையும் யெகோவா நம் கையில் கொடுத்துவிட்டார்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நம்மை நினைத்து கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்”+ என்றும் யோசுவாவிடம் சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

இந்தச் செடியின் நாரிலிருந்துதான் விலை உயர்ந்த நாரிழைத் துணி தயாரிக்கப்பட்டது.
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதிகள்.
வே.வா., “மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவோம்.”
வே.வா., “இரத்தப்பழிக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா