யோசுவா 7:1-26

7  ஆனால் இஸ்ரவேலர்கள் கடவுளுடைய கட்டளையை மீறி, அழிக்க வேண்டிய பொருள்களை அழிக்காமல் விட்டுவிட்டார்கள். யூதா கோத்திரத்தில் சேராகின் வம்சத்தில் வந்த சப்தியின் பேரனும் கர்மீயின் மகனுமாகிய ஆகான்,+ அழிக்க வேண்டிய பொருள்களில் சிலவற்றை எடுத்து வைத்துக்கொண்டான்.+ அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+  யோசுவா எரிகோவிலிருந்து ஆட்களை அனுப்பி, பெத்தேலுக்குக்+ கிழக்கே பெத்-ஆவேனுக்குப் பக்கத்தில் இருந்த ஆயி நகரத்தை+ உளவு பார்த்துவிட்டு வரச் சொன்னார். அவர்கள் போய் அந்த நகரத்தை உளவு பார்த்தார்கள்.  பின்பு யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயி நகரத்தைத் தோற்கடிக்க 2,000 அல்லது 3,000 பேர் இருந்தாலே போதும். அதனால் எல்லாரும் அங்கே போக வேண்டிய அவசியமில்லை. அங்கு கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். தேவையில்லாமல் எல்லாரும் போய் நம் சக்தியை வீணடிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.  அதனால், கிட்டத்தட்ட 3,000 வீரர்கள் அங்கே போனார்கள். ஆனால் ஆயி நகரத்தின் வீரர்களுக்கு முன்னால் அவர்கள் தோற்றுப்போய் ஓடினார்கள்.+  இஸ்ரவேல் வீரர்களில் 36 பேரை ஆயி நகரத்தின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். நகரவாசலிலிருந்து செபாரீம்* வரைக்கும் துரத்திக்கொண்டு போய், மலைச் சரிவில் அவர்களை வெட்டினார்கள். அதனால் இஸ்ரவேலர்கள் எல்லாருடைய தைரியமும் கரைந்துபோனது.*  யோசுவா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, சாயங்காலம்வரை யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தார். அவர் தன்னுடைய தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டே இருந்தார். இஸ்ரவேலின் பெரியோர்களும்* அப்படியே செய்தார்கள்.  பின்பு யோசுவா, “ஐயோ, உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, எமோரியர்களின் கையால் எங்களை அழித்துப்போடவா யோர்தானைக் கடக்கச் செய்தீர்கள்? நாங்கள் யோர்தானுக்குக் கிழக்கிலேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!  யெகோவாவே, என்னை மன்னித்துவிடுங்கள், இப்போது நான் வேறென்ன சொல்ல முடியும்? எதிரிகளுக்கு முன்னால் இஸ்ரவேலர்கள் பயந்து ஓடுகிற அளவுக்கு ஆகிவிட்டதே!  கானானியர்களும் இந்தத் தேசத்திலுள்ள மற்ற ஜனங்களும் இதைக் கேள்விப்படும்போது, எங்களைச் சுற்றிவளைப்பார்களே, எங்கள் பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி செய்துவிடுவார்களே. அப்போது, உங்களுடைய மகத்தான பெயரைக் காப்பாற்ற என்ன செய்வீர்கள்?”+ என்று கதறினார். 10  அப்போது யெகோவா யோசுவாவிடம், “நீ ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாய்? எழுந்திரு! 11  இஸ்ரவேலர்கள் பாவம் செய்துவிட்டார்கள். மீறக் கூடாதென்று நான் சொன்ன என் ஒப்பந்தத்தை+ மீறிவிட்டார்கள். அழிக்க வேண்டிய பொருள்கள்+ சிலவற்றைத் திருட்டுத்தனமாக எடுத்து,+ தங்களுடைய பொருள்களோடு ஒளித்து வைத்துக்கொண்டார்கள்.+ 12  அதனால், இஸ்ரவேலர்களால் இனி எதிரிகளைத் தோற்கடிக்க முடியாது. அவர்கள் அழிக்கப்பட வேண்டிய ஜனங்களாகிவிட்டார்கள். அதனால் எதிரிகளைப் பார்த்துப் பயந்து ஓடுவார்கள். அழிக்க வேண்டியதை+ உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்டாவிட்டால் நான் இனி உங்களோடு இருக்க மாட்டேன். 13  நீ எழுந்து ஜனங்களைப் புனிதப்படுத்து!+ நீ அவர்களிடம், ‘நாளைக்கு உங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், “இஸ்ரவேலர்களே, அழிக்க வேண்டிய பொருள்கள் உங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீங்கள் ஒழித்துக்கட்டும்வரை எதிரிகளை உங்களால் ஜெயிக்க முடியாது. 14  நாளைக்குக் காலையில் நீங்கள் கோத்திரம் கோத்திரமாக ஒன்றுகூடி வர வேண்டும். எந்தக் கோத்திரத்தை யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ+ அந்தக் கோத்திரம் வம்சம் வம்சமாக முன்னால் வர வேண்டும். எந்த வம்சத்தை யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ அந்த வம்சம் குடும்பம் குடும்பமாக முன்னால் வர வேண்டும். எந்தக் குடும்பத்தை யெகோவா தேர்ந்தெடுக்கிறாரோ அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக முன்னால் வர வேண்டும். 15  அழிக்க வேண்டிய பொருள்களை எவன் வைத்திருக்கிறானோ அவன் கொல்லப்பட்டு நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும்.+ யெகோவாவின் ஒப்பந்தத்தை மீறி,+ இஸ்ரவேலில் கேவலமான காரியத்தைச் செய்ததால் அவனும் அவனுக்குச் சொந்தமானவையும் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்று சொல்’” என்றார். 16  அதனால் யோசுவா விடியற்காலையில் எழுந்து இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக ஒன்றுகூடி வர வைத்தார். அப்போது யூதாவின் கோத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 17  யூதா கோத்திரத்தை முன்னால் வர வைத்தபோது, சேராகியர்களின் வம்சம்+ தேர்ந்தெடுக்கப்பட்டது. சேராகியர்களின் வம்சத்தாரை ஒவ்வொருவராக முன்னால் வர வைத்தபோது, சப்தியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 18  கடைசியில், சப்தியின் குடும்பத்தில் உள்ளவர்களை ஒவ்வொருவராக வர வைத்தபோது, ஆகான் தேர்ந்தெடுக்கப்பட்டான்.+ இவன் யூதா கோத்திரத்தில் சேராகின் வம்சத்தில் வந்த சப்தியின் பேரனாகிய கர்மீயின் மகன். 19  அப்போது யோசுவா ஆகானிடம், “என் மகனே, தயவுசெய்து இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவை மகிமைப்படுத்து. அவரிடம் உன் தப்பை ஒத்துக்கொள். நீ என்ன செய்தாய் என்பதைத் தயவுசெய்து என்னிடம் சொல். எதையும் என்னிடம் மறைக்காதே” என்று சொன்னார். 20  அதற்கு ஆகான், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தது நான்தான். என்ன செய்தேன் என்று சொல்லிவிடுகிறேன். 21  கைப்பற்றப்பட்ட பொருள்களில், சினேயாரில்+ செய்யப்பட்ட அழகான, விலை உயர்ந்த அங்கியையும், 200 சேக்கல்* வெள்ளியையும், 50 சேக்கல் எடையுள்ள தங்கக் கட்டியையும் பார்த்தபோது, ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டேன். அவற்றை என் கூடாரத்துக்குள் புதைத்து வைத்திருக்கிறேன். தங்கத்தையும் வெள்ளியையும் அங்கியின் அடியில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னான். 22  உடனே யோசுவா ஆட்களை அனுப்பினார். அவர்கள் ஆகானின் கூடாரத்துக்கு ஓடினார்கள். அங்கே, அந்த அங்கியும் அதற்கு அடியில் தங்கமும் வெள்ளியும் புதைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். 23  அவற்றை அந்தக் கூடாரத்திலிருந்து எடுத்து யோசுவாவிடமும் இஸ்ரவேலர்களிடமும் கொண்டுவந்து, யெகோவாவின் முன்னால் வைத்தார்கள். 24  யோசுவாவும் இஸ்ரவேலர்களும் சேர்ந்து, சேராகின் வம்சத்தைச் சேர்ந்த ஆகானையும்+ அவனுடைய மகன்களையும் மகள்களையும் கூட்டிக்கொண்டு ஆகோரின் பள்ளத்தாக்குக்குப்+ போனார்கள். விலை உயர்ந்த அந்த அங்கியையும் வெள்ளியையும் தங்கக் கட்டியையும்+ ஆடுமாடுகளையும் கழுதைகளையும் கூடாரத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள். 25  அப்போது யோசுவா ஆகானிடம், “நீ ஏன் எங்களுக்கு அழிவைக் கொண்டுவந்தாய்?+ இன்றைக்கு யெகோவா உனக்கு அழிவைக் கொண்டுவருவார்” என்று சொன்னார். அப்போது இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் மிருகங்களையும் கல்லெறிந்து கொன்றார்கள்.+ அதன்பின் அந்த உடல்களை நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ 26  பின்பு, அவனுடைய உடல்மேல் கற்களைப் பெரிய குவியலாகக் குவித்து வைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது. அவர்கள் அப்படிச் செய்த பின்பு யெகோவாவின் கடும் கோபம் தணிந்தது.+ அதனால்தான், அந்த இடம் இன்றுவரை ஆகோர் பள்ளத்தாக்கு* என்று அழைக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “கற்சுரங்கங்கள்.”
நே.மொ., “எல்லாருடைய இதயமும் உருகி, தண்ணீர்போல் ஓடியது.”
வே.வா., “மூப்பர்களும்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அர்த்தம், “அழிவின் பள்ளத்தாக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா