யோபு 3:1-26
3 அதன் பின்பு, யோபு பேச ஆரம்பித்தார். அவர் தன்னுடைய பிறந்த நாளைச் சபித்து,+
2 இப்படிச் சொன்னார்:
3 “நான் பிறந்த அந்த நாள் வராமலேயே இருந்திருக்க வேண்டும்!+‘ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!’ என்று சொல்லப்பட்ட அந்த இரவும் வராமல் போயிருக்க வேண்டும்!
4 அந்த நாள் இருண்டுபோயிருக்க வேண்டும்!
பரலோகத்திலுள்ள கடவுள் அந்த நாளைக் கண்டும்காணாமல் விட்டிருக்க வேண்டும்!ஒளி அதன்மேல் வீசாமல் போயிருக்க வேண்டும்!
5 கும்மிருட்டு* அந்த நாளைச் சூழ்ந்திருக்க வேண்டும்!
மழைமேகம் அதை மூடியிருக்க வேண்டும்!
பயங்கரமான இருட்டு அதன் வெளிச்சத்தை விழுங்கியிருக்க வேண்டும்!
6 அந்த இரவு படுபயங்கரமான இருளின் பிடியில் சிக்கியிருக்க வேண்டும்!+அது சந்தோஷத்தையே காணாத நாளாக இருந்திருக்க வேண்டும்!எந்த மாதத்திலும் அந்த நாள் சேர்க்கப்படாமல் போயிருக்க வேண்டும்!
7 அந்த ராத்திரியில் யாரும் பிறக்காமல் போயிருக்க வேண்டும்!அன்று சந்தோஷக் குரலே கேட்காமல் போயிருக்க வேண்டும்!
8 நாளைச் சபிக்கிறவர்களும் லிவியாதானை*+ எழுப்ப முடிந்தவர்களும்அதைச் சபித்திருக்க வேண்டும்!
9 அந்த ராத்திரியில் நட்சத்திரங்கள் மின்னாமல் போயிருக்க வேண்டும்!பகலுக்காக அது காத்திருந்தது வீணாய்ப் போயிருக்க வேண்டும்!சூரிய உதயத்தை அது காணாமல் போயிருக்க வேண்டும்!
10 என் தாயின் கர்ப்ப வாசலை அது அடைக்காமல் போனதே.+நான் கஷ்டங்கள் அனுபவிப்பதைத் தடுக்காமல் போனதே.
11 நான் பிறக்கும்போதே ஏன் சாகாமல் போனேன்?
தாயின் வயிற்றிலிருந்து வரும்போதே ஏன் அழியாமல் போனேன்?+
12 என் தாயின் மடி ஏன் என்னைத் தாங்கியது?அவள் மார்பு ஏன் எனக்குப் பாலூட்டியது?
13 நான் தொந்தரவில்லாமல் போய்ச் சேர்ந்திருப்பேனே!+ஒரேயடியாகத் தூங்கி ஓய்வெடுத்திருப்பேனே!+
14 இப்போது பாழாய்க் கிடக்கிற இடங்களைக் கட்டியிருந்த* ராஜாக்களோடும்அவர்களுடைய ஆலோசகர்களோடும் அழிந்துபோயிருப்பேனே.
15 தங்கத்தையும் வெள்ளியையும் வீடுகளில் குவித்து வைத்திருந்த இளவரசர்களோடுநானும் புதைக்கப்பட்டிருப்பேனே.
16 நான் ஏன் கர்ப்பத்திலேயே கலையவில்லை?ஒளியைப் பார்ப்பதற்கு முன்பே ஏன் ஒழிந்துபோகவில்லை?
17 சாகும்போது கெட்டவனுக்குக்கூட நிம்மதி கிடைக்கிறதே.அவதிப்படுகிறவனுக்கு அமைதி கிடைக்கிறதே.+
18 கைதிகள் எல்லாருக்கும் கல்லறை விடுதலை தருகிறதே.அவர்களை மிரட்டி வேலை வாங்குபவர்களின் சத்தம் அங்கு கேட்காதே.
19 உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் அங்கே வித்தியாசமில்லை.+அடிமையை எஜமான் அங்கே ஆட்டிப்படைப்பதில்லை.
20 வேதனைப்படுகிறவனைக் கடவுள் ஏன் வாழ வைக்கிறார்?*விரக்தியில் இருப்பவர்களை+ ஏன் உயிரோடு விட்டுவைக்கிறார்?
21 அவர்கள் சாவுக்காக ஏங்குகிறார்கள்,+ புதையலைத் தேடுவதைவிட சாவை அதிகமாகத் தேடுகிறார்கள்.
ஆனால் அது வந்த பாடில்லை.
22 கல்லறையைப் பார்த்ததும் பூரித்துப்போகிறார்கள்.சந்தோஷத்தில் துள்ளுகிறார்கள்.
23 திக்குத் தெரியாதவனைச் சுற்றிலும் கடவுள் ஏன் வேலி போடுகிறார்?+அவனை ஏன் வாழ வைக்கிறார்?*
24 நான் எதையும் சாப்பிடாமல் சதா பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.+கொட்டும் அருவிபோல் என் குமுறல் இருக்கிறது.+
25 எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.எதை நினைத்துப் பயந்தேனோ அது வந்துவிட்டது.
26 எனக்கு நிம்மதியில்லை, அமைதியில்லை, ஓய்வுமில்லை.வேதனைக்குமேல் வேதனைதான் வருகிறது.”
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “இருட்டும் சாவின் நிழலும்.”
^ இது ஒரு முதலை அல்லது நீரில் வாழும் வேறு ஏதாவது ராட்சதப் பிராணி என்று கருதப்படுகிறது.
^ அல்லது, “பாழான இடங்களைத் தங்களுக்குக் கட்டிக்கொண்ட.”
^ நே.மொ., “வேதனைப்படுகிறவனுக்குக் கடவுள் ஏன் வெளிச்சம் தருகிறார்?”
^ நே.மொ., “அவனுக்கு ஏன் வெளிச்சம் தருகிறார்?”