யோபு 40:1-24

40  பின்பு யெகோவா யோபுவிடம்,   “சர்வவல்லமையுள்ளவரைக் குறை சொல்லி, யாராவது அவரோடு வாதாட முடியுமா?+ அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க* நினைப்பவன் இதற்குப் பதில் சொல்லட்டும்”+ என்றார்.   அப்போது யோபு யெகோவாவிடம்,   “நான் எதற்குமே தகுதி இல்லாதவன்.+ என்னால் எப்படி உங்களுக்குப் பதில் சொல்ல முடியும்? என் வாயைப் பொத்திக்கொள்கிறேன்.+   ஒன்றிரண்டு தடவை பேசிவிட்டேன், இனி பேச மாட்டேன். இனி வாயே திறக்க மாட்டேன்” என்று சொன்னார்.   அப்போது யெகோவா புயல்காற்றிலிருந்து யோபுவிடம்,+   “மனுஷனே, தயவுசெய்து தயாராகு.நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்.+   என் தீர்ப்பையே நீ தப்பு என்று சொல்வாயா? நீ செய்வதுதான் சரி என்பதுபோல் என்னைக் குற்றப்படுத்துவாயா?+   உன் கை உண்மைக் கடவுளுடைய கையைப் போலப் பலம் உள்ளதா?+உன் குரல் அவருடைய குரல் போல முழங்குமா?+ 10  உன் மேன்மையையும் மகிமையையும் கொஞ்சம் காட்டு.உன் பெருமையையும் சிறப்பையும் காட்டு. 11  உன் கோபத்தையும் ஆவேசத்தையும் கொட்டு.தலைக்கனம் பிடித்த எல்லாரையும் தலைகுனிய வை. 12  அகங்காரம் பிடித்த எல்லாரையும் அடக்கு.கெட்டவர்களை அவர்கள் நிற்கும் இடத்திலேயே மிதித்துப் போடு. 13  அவர்கள் எல்லாரையும் மண்ணில் புதைத்துவிடு.இருட்டுக்குள் கட்டிப்போடு. 14  இப்படியெல்லாம் செய்ய முடிந்தால் நீ வல்லவன் என்று ஒத்துக்கொள்வேன்.*உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்புவேன். 15  பிகெமோத்தை* கொஞ்சம் பார்; உன்னைப் படைத்தது போலத்தான் அதையும் படைத்தேன். அது காளையைப் போலப் புல்லைத் தின்கிறது. 16  அதன் இடுப்பில் இருக்கும் பலத்தைப் பார்.வயிற்றுத் தசைகளில் உள்ள சக்தியைப் பார். 17  அது தன் வாலை, மரம்போல் நேராக நீட்டுகிறது.அதன் தொடைகள் தசைநாண்களால் பின்னப்பட்டிருக்கின்றன. 18  அதன் எலும்புகள் செம்புக் குழாய்கள்.அதன் கால்கள் உறுதியான இரும்புக் கம்பிகள். 19  அது கடவுளுடைய படைப்புகளில் முதல் இடம் பிடிக்கிறது.படைத்தவரால் மட்டும்தான் அதை வாளால் வெட்டி வீழ்த்த முடியும். 20  மலையெங்கும் உள்ள புல்பூண்டுகளை அது சாப்பிடுகிறது.அதைச் சுற்றி காட்டு மிருகங்கள் விளையாடுகின்றன. 21  முட்புதர்களின் கீழ் அது படுத்துக்கொள்கிறது.சேற்றில் வளரும் நாணல்களின் நிழலில் தங்குகிறது. 22  புதர்கள் அதற்கு நிழல் தருகின்றன.பள்ளத்தாக்கின்* காட்டரசு மரங்கள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன. 23  ஆறு கரைபுரண்டு ஓடினாலும் அது பதறுவதில்லை. யோர்தான் ஆற்றின்+ வெள்ளம் அதன் முகத்தில் மோதினாலும் அது பயப்படுவதில்லை. 24  யாராவது நேருக்குநேர் போய் அதைப் பிடிக்க முடியுமா?கொக்கியால்* அதன் மூக்கைத் துளைக்க முடியுமா?” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவரைக் கண்டிக்க.”
வே.வா., “பாராட்டுவேன்.”
அதாவது, “நீர்யானையை.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
நே.மொ., “கண்ணியால்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா