ரூத் 1:1-22

1  நியாயாதிபதிகள்+ நியாயம் வழங்கிவந்த காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த ஒருவர் பிழைப்புக்காகத் தன் மனைவியோடும் இரண்டு மகன்களோடும் மோவாப்+ தேசத்துக்குப் புறப்பட்டுப் போனார்.  அவருடைய பெயர் எலிமெலேக்கு,* அவருடைய மனைவியின் பெயர் நகோமி.* அவருடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லகேமைச் சேர்ந்த எப்பிராத்தியர்கள். அவர்கள் மோவாப் தேசத்துக்குப் போய்க் குடியிருந்தார்கள்.  கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, நகோமியின் கணவர் எலிமெலேக்கு இறந்துபோனார். அவள் தனியாகத் தன்னுடைய இரண்டு மகன்களோடு வாழ்ந்துவந்தாள்.  அதன்பின், அவளுடைய மகன்கள் மோவாபியப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். ஒருத்தி பெயர் ஒர்பாள், இன்னொருத்தி பெயர் ரூத்.+ அவர்கள் அங்கே கிட்டத்தட்ட 10 வருஷங்கள் வாழ்ந்துவந்தார்கள்.  பிற்பாடு, மக்லோனும் கிலியோனும்கூட இறந்துபோனார்கள். நகோமி தன் கணவனையும் இரண்டு மகன்களையும் பறிகொடுத்ததால் தனிமரமானாள்.  யெகோவா இஸ்ரவேலில் பஞ்சத்தைப் போக்கி தன்னுடைய ஜனங்களுக்குக் கருணை காட்டியிருந்த விஷயத்தை அவள் மோவாப் தேசத்தில் கேள்விப்பட்டாள். அதனால் தன் தேசத்துக்கே திரும்பிப் போக முடிவுசெய்தாள். அவளுடைய இரண்டு மருமகள்களும் அவளோடு கிளம்பினார்கள்.  நகோமி அந்தத் தேசத்தைவிட்டுத் தன்னுடைய இரண்டு மருமகள்களோடும் யூதா தேசத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது,  தன்னுடைய இரண்டு மருமகள்களிடமும், “நீங்கள் இரண்டு பேரும் உங்களுடைய அம்மா வீட்டுக்கே திரும்பிப் போங்கள். இறந்துபோன உங்கள் கணவர்களுக்கும் எனக்கும் நீங்கள் எப்போதும் அன்பு* காட்டியது போல யெகோவாவும் எப்போதும் உங்களுக்கு அன்பு காட்டட்டும்.+  நீங்கள் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்வதற்கு யெகோவா வழி செய்யட்டும்”+ என்று சொல்லி, அவர்களுக்கு முத்தம் கொடுத்தாள். அவர்கள் கதறி அழுது, 10  “இல்லை அம்மா, நாங்களும் வந்து உங்கள் ஜனங்களோடு வாழ்கிறோம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 11  ஆனால் நகோமி, “வேண்டாம், என் மகள்களே. நீங்கள் ஏன் என்னோடு வர வேண்டும்? உங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க என்னால் இனி மகன்களைப் பெற்றுத்தர முடியுமா?+ 12  என் மகள்களே, உங்கள் வீட்டுக்கே போய்விடுங்கள். எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் நான் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா? அப்படியே நான் இன்று ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு மகன்களைப் பெற்றெடுத்தாலும், 13  அவர்கள் வளர்ந்து ஆளாகிற வரைக்கும் நீங்கள் காத்துக்கொண்டிருக்க முடியுமா? அதுவரைக்கும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பீர்களா? வேண்டாம், என் மகள்களே, யெகோவாவின் கை எனக்கு எதிராகத் திரும்பிவிட்டதால் நீங்களும் கஷ்டப்படுகிறீர்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது”+ என்று சொன்னாள். 14  மறுபடியும் அவர்கள் கதறி அழுதார்கள், அதன்பின் ஒர்பாள் தன் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிப் போனாள். ஆனால், ரூத் மட்டும் நகோமியைவிட்டுப் போகவே இல்லை. 15  அதனால் நகோமி அவளிடம், “பார், உன் ஓரகத்தி* தன்னுடைய ஜனங்களிடமும் தன்னுடைய தெய்வங்களிடமும் திரும்பிப் போய்விட்டாள். நீயும் திரும்பிப் போ” என்று சொன்னாள். 16  ஆனால் ரூத், “தயவுசெய்து என்னைத் திரும்பிப் போகச் சொல்லாதீர்கள். உங்களோடு வர வேண்டாமென்று சொல்லாதீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் வருவேன், நீங்கள் எங்கே தங்குகிறீர்களோ அங்கே நானும் தங்குவேன். உங்களுடைய ஜனங்கள்தான் என்னுடைய ஜனங்கள், உங்களுடைய கடவுள்தான் என்னுடைய கடவுள்.+ 17  நீங்கள் எங்கே சாவீர்களோ அங்கேதான் நானும் சாவேன், அங்கேதான் அடக்கம் செய்யப்படுவேன். சாகிற வரைக்கும் நான் உங்களைவிட்டுப் பிரியவே மாட்டேன். அப்படிப் பிரிந்தால், யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டிக்கட்டும்” என்று சொன்னாள். 18  நகோமியுடன் போவதில் ரூத் உறுதியாக இருந்ததால், அதற்கு மேலும் அவளுடைய மனதை மாற்ற நகோமி முயற்சி செய்யவில்லை. 19  அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லகேமுக்குப் போய்ச் சேர்ந்ததும்,+ ஊரே பரபரப்பாகிவிட்டது. அங்குள்ள பெண்கள் அவளைப் பார்த்து, “நகோமியா இது?” என்று பேசிக்கொண்டார்கள். 20  நகோமி அவர்களிடம், “என்னை நகோமி* என்று கூப்பிடாதீர்கள். மாராள்* என்று கூப்பிடுங்கள். சர்வவல்லமையுள்ளவர் என் வாழ்க்கையை ரொம்பவே கசப்பாக்கிவிட்டார்.+ 21  நான் இங்கிருந்து போனபோது எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், இப்போது யெகோவா என்னை வெறுங்கையோடு திரும்பிவர வைத்துவிட்டார். யெகோவா எனக்கு எதிராகத் திரும்பியிருக்கும்போது, சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பயங்கரமான வேதனையைக் கொடுத்திருக்கும்போது,+ நீங்கள் ஏன் என்னை நகோமி என்று கூப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டாள். 22  இப்படித்தான், நகோமி தன்னுடைய மருமகளான மோவாபியப் பெண் ரூத்துடன் அந்தத் தேசத்திலிருந்து+ திரும்பி வந்தாள். பார்லி அறுவடை+ ஆரம்பித்த சமயத்தில் அவர்கள் பெத்லகேமுக்கு வந்துசேர்ந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “என் கடவுள்தான் ராஜா.”
அர்த்தம், “இனிமையானவள்.”
வே.வா., “மாறாத அன்பு.”
அதாவது, “கணவனுடைய சகோதரனின் மனைவி.”
அர்த்தம், “இனிமையானவள்.”
அர்த்தம், “கசப்பு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா