ரோமருக்குக் கடிதம் 13:1-14
13 அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு* எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை.+ தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்.+
2 அதனால், அதிகாரத்தை எதிர்க்கிறவன் கடவுளுடைய ஏற்பாட்டை எதிர்க்கிறான்; அதை எதிர்க்கிறவன் தண்டிக்கப்படுவான்.
3 நல்ல செயல்களைச் செய்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை, கெட்ட செயல்களைச் செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும்.+ அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால், தொடர்ந்து நல்லதைச் செய்யுங்கள்,+ அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டு கிடைக்கும்.
4 உங்களுடைய நன்மைக்காக அவர்கள் கடவுளுடைய வேலையாட்களாக இருக்கிறார்கள். நீங்கள் கெட்டது செய்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டும். ஏனென்றால், தண்டிக்கிற அதிகாரம்* அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது வீணாகக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கடவுளுடைய வேலையாட்கள், கெட்டது செய்துவருகிறவர்கள்மீது கடவுளுடைய தண்டனையை* நிறைவேற்றுகிறவர்கள்.
5 அதனால், தண்டனை கிடைக்கும்* என்பதற்காக மட்டுமல்ல, உங்களுடைய மனசாட்சியின் காரணமாகவும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாக இருக்கிறது.+
6 அதனால்தான், நீங்கள் வரியும் கட்டுகிறீர்கள். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கடவுளுடைய தொண்டர்களாக எப்போதும் சேவை செய்துவருகிறார்கள்.
7 அதனால், அவர்கள் எல்லாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுங்கள்: யாருக்கு வரி கொடுக்க வேண்டுமோ அவருக்கு வரி கொடுங்கள்,+ யாருக்குப் பணம்* கட்ட வேண்டுமோ அவருக்குப் பணம்* கட்டுங்கள்; யாருக்குப் பயப்பட வேண்டுமோ அவருக்குப் பயப்படுங்கள்;+ யாருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமோ அவருக்கு மதிப்புக் கொடுங்கள்.+
8 யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுதான்+ நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்க வேண்டும். மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறான்.+
9 ஏனென்றால், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது,+ கொலை செய்யக் கூடாது,+ திருடக் கூடாது,+ பேராசைப்படக் கூடாது”+ என்ற கட்டளைகளும் மற்ற எல்லா கட்டளைகளும், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்ற ஒரே கட்டளையில் அடங்கியிருக்கின்றன.+
10 அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.+ அதனால், அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது.+
11 எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருப்பதால், அதாவது தூக்கத்திலிருந்து எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது+ என்பது உங்களுக்குத் தெரிந்திருப்பதால் இவற்றையெல்லாம் செய்யுங்கள். நாம் கிறிஸ்தவர்களான சமயத்தில் இருந்ததைவிட இப்போது மீட்பு மிகவும் பக்கத்தில் இருக்கிறது.
12 இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கிவிட்டது. அதனால், நாம் இருளுக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு,+ ஒளிக்குரிய ஆயுதங்களை அணிந்துகொள்ள வேண்டும்.+
13 குடித்துக் கும்மாளம் போடுதல், குடிவெறி, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை,*+ சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றைத் தவிர்த்து,+ பகலில் நடக்கிறவர்களைப் போல் கண்ணியமாக நடக்க வேண்டும்.+
14 அதனால், பாவ ஆசைகளின்படி நடக்க+ முன்கூட்டியே திட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.*+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “உயர் அதிகாரத்துக்கு.”
^ நே.மொ., “வாள்.”
^ நே.மொ., “கடும் கோபத்தை.”
^ நே.மொ., “கடும் கோபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.”
^ வே.வா., “கப்பம்.”
^ வே.வா., “கப்பம்.”
^ வே.வா., “சக மனிதர்மேலும்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “இயேசு கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுங்கள்.”