ரோமருக்குக் கடிதம் 7:1-25

7  சகோதரர்களே, திருச்சட்டம் தெரிந்த உங்களிடம் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரைதான் திருச்சட்டம் அவனுடைய எஜமானாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?  உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் சட்டப்படி அவனோடு இணைக்கப்பட்டிருப்பாள். கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்படுவாள்.+  அதனால், கணவன் உயிரோடு இருக்கும்போது அவள் வேறொருவனுக்குச் சொந்தமானால், நடத்தைகெட்டவள் என்று அழைக்கப்படுவாள்.+ கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சட்டத்திலிருந்து விடுதலையாவாள். அதனால், அவள் வேறொருவனுக்குச் சொந்தமானாலும் நடத்தைகெட்டவள் அல்ல.+  அப்படியே, என் சகோதரர்களே, உயிரோடு எழுப்பப்பட்ட கிறிஸ்துவுக்கு+ நீங்கள் சொந்தமாவதற்காக,+ அவருடைய பலியின்* மூலம் திருச்சட்டத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களானீர்கள். இப்படி, நம் எல்லாராலும் கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய முடிகிறது.+  நாம் உடலின் ஆசைகளின்படி வாழ்ந்தபோது, மரணத்தை உண்டாக்கும் பாவ ஆசைகள் நம்முடைய உடலில்* பொங்கியெழுந்தன.+ அந்த ஆசைகள் எவை என்பதைத் திருச்சட்டம் வெட்டவெளிச்சமாக்கியது.  நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த திருச்சட்டத்தைப் பொறுத்தவரை நாம் இறந்திருப்பதால், இப்போது அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம்.+ அதனால், எழுதப்பட்ட பழைய சட்டத்தின் வழியில் நாம் அவருக்கு அடிமைகளாக இல்லாமல்,+ கடவுளுடைய சக்தியின் புதிய வழியில் அவருக்கு அடிமைகளாக இருக்கிறோம்.+  அப்படியானால், நாம் என்ன சொல்லலாம்? திருச்சட்டம் பாவமென்று சொல்லலாமா? கூடவே கூடாது! உண்மையில், திருச்சட்டம் இல்லாதிருந்தால் பாவம் என்னவென்று எனக்குத் தெரிந்திருக்காது.+ உதாரணமாக, “பேராசைப்படக் கூடாது” என்று திருச்சட்டம் சொல்லாதிருந்தால், பேராசையைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.+  ஆனால், பாவம் என்னவென்று அந்தச் சட்டம் எனக்கு உணர்த்தியது. அதாவது, எல்லா விதமான பேராசையும் எனக்குள் இருக்கிறது என்பதையும், அவை பாவம் என்பதையும் அது எனக்கு உணர்த்தியது. திருச்சட்டம் இல்லாதபோதோ பாவம் செத்த நிலையில் இருந்தது.+  சொல்லப்போனால், திருச்சட்டம் இல்லாத காலத்தில் நான் உயிரோடிருந்தேன். திருச்சட்டம் வந்தபோதோ பாவம் மறுபடியும் உயிர்பெற்றது, ஆனால் நான் மரணமடைந்தேன்.+ 10  வாழ்வுக்கு வழிநடத்த வேண்டிய திருச்சட்டமே+ மரணத்துக்கு வழிநடத்துவதைப் புரிந்துகொண்டேன். 11  அந்தச் சட்டத்தால் எனக்கு உணர்த்தப்பட்ட பாவம் என்னை ஏமாற்றி, அந்தச் சட்டத்தாலேயே என்னைக் கொன்றுபோட்டது. 12  இருந்தாலும், திருச்சட்டம் பரிசுத்தமானது. அதிலுள்ள கட்டளைகளும் பரிசுத்தமானவை, நீதியானவை, நன்மையானவை.+ 13  அப்படியானால், நன்மையான ஒன்று என்னைக் கொன்றுபோட்டதா? இல்லவே இல்லை! பாவம்தான் என்னைக் கொன்றுபோட்டது, பாவம் என்னவென்று காட்டுவதற்காக அந்தப் பாவம்தான் நன்மையான ஒன்றை வைத்து என்னைக் கொன்றுபோட்டது.+ இப்படி, அந்தப் பாவம் எவ்வளவு கொடியது என்பதைத் திருச்சட்டம்தான் எனக்குக் காட்டியது.+ 14  நமக்குத் தெரிந்தபடி, திருச்சட்டம் கடவுளுக்குச் சொந்தமானது. நானோ பாவத்துக்குச் சொந்தமானவன், பாவத்துக்கு அடிமையாக விற்கப்பட்டவன்.+ 15  நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன். 16  நான் விரும்பாததையே செய்கிறேன் என்ற உணர்வு எனக்கு இருந்தால், திருச்சட்டம் நல்லது என்று நான் ஒத்துக்கொள்வதை அது காட்டுகிறது. 17  ஆனால், விரும்பாததைச் செய்வது நான் அல்ல, எனக்குள் குடியிருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.+ 18  எப்படியென்றால், என்னிடத்தில், அதாவது என் பாவ உடலில், நல்லது எதுவும் இல்லையென்று எனக்குத் தெரியும். நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருக்கிறது, ஆனால் நல்லது செய்யத்தான் என்னால் முடியவில்லை.+ 19  நான் விரும்புகிற நல்லதைச் செய்யாமல் விரும்பாத கெட்டதையே செய்துவருகிறேன். 20  நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை, எனக்குள் குடியிருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது. 21  அதனால், இந்தச் சட்டத்தை என்னிடம் பார்க்கிறேன்: நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது.+ 22  கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.+ 23  ஆனால், என் மனதின் சட்டத்துக்கு விரோதமாகப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலில்* இருப்பதைப் பார்க்கிறேன்.+ என் உடலில்* இருக்கிற அந்தப் பாவச் சட்டம் என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.+ 24  எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்! மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்? 25  நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி! இப்படி, நான் என் மனதால் கடவுளின் சட்டத்துக்கும் உடலால் பாவத்தின் சட்டத்துக்கும் அடிமையாக இருக்கிறேன்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உடலின்.”
நே.மொ., “உடலுறுப்புகளில்.”
நே.மொ., “உடலுறுப்புகளில்.”
நே.மொ., “உடலுறுப்புகளில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா