லூக்கா எழுதியது 21:1-38
21 அவர் ஏறெடுத்துப் பார்த்தபோது, காணிக்கைப் பெட்டிகளில் பணக்காரர்கள் தங்களுடைய காணிக்கைகளைப் போடுவதைக் கவனித்தார்.+
2 ஓர் ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை* அதில் போடுவதையும் கவனித்தார்.+
3 அப்போது அவர், “உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், மற்ற எல்லாரையும்விட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்.+
4 ஏனென்றால், அவர்கள் எல்லாரும் தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் காணிக்கையாகப் போட்டார்கள். ஆனால் இவள் தனக்குத் தேவையிருந்தும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்”+ என்று சொன்னார்.
5 பின்பு, சிறந்த கற்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட பொருள்களாலும் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப்+ பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
6 அப்போது அவர், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்களே, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே தரைமட்டமாக்கப்படும் நாட்கள் வரும்”+ என்று சொன்னார்.
7 அதற்கு அவர்கள், “போதகரே, இதெல்லாம் எப்போது நடக்கும், இதெல்லாம் நடக்கப்போகிற காலத்துக்கு அடையாளம் என்ன?” என்று அவரிடம் கேட்டார்கள்.+
8 அப்போது அவர், “நீங்கள் ஏமாறாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ ஏனென்றால், நிறைய பேர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நான்தான் கிறிஸ்து’* என்றும், ‘காலம் நெருங்கிவிட்டது’ என்றும் சொல்வார்கள். அவர்கள் பின்னால் போகாதீர்கள்.+
9 போர்களைப் பற்றியும் கலவரங்களைப் பற்றியும் கேள்விப்படும்போது திகிலடையாதீர்கள். இதெல்லாம் முதலில் நடக்க வேண்டும், ஆனால் முடிவு உடனே வராது”+ என்று சொன்னார்.
10 அதோடு அவர்களிடம், “ஜனத்துக்கு எதிராக ஜனமும்+ நாட்டுக்கு எதிராக நாடும்* சண்டை போடும்.+
11 பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும். அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் உண்டாகும்.+ திகிலுண்டாக்கும் காட்சிகள் தெரியும், வானத்திலிருந்து* மாபெரும் அடையாளங்கள் தோன்றும்.
12 ஆனால் இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு, என் பெயரை முன்னிட்டு மக்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்தி,+ ஜெபக்கூடங்களிலும் சிறைச்சாலைகளிலும் ஒப்படைப்பார்கள். நீங்கள் ராஜாக்களுக்கும் ஆளுநர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள்.+
13 சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக அது உங்களுக்கு அமையும்.
14 அதனால், எப்படிப் பதில் சொல்வதென்று முன்கூட்டியே உங்கள் உள்ளத்தில் ஒத்திகை பார்க்க வேண்டாம்.+
15 உங்கள் எதிரிகள் எல்லாரும் திரண்டு வந்தாலும் உங்களை எதிர்த்து நிற்கவோ எதிர்த்துப் பேசவோ முடியாதபடி நான் உங்களுக்கு வார்த்தைகளையும் ஞானத்தையும் அருளுவேன்.+
16 பெற்றோரும் சகோதரர்களும் சொந்தக்காரர்களும் நண்பர்களும்கூட உங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்.* உங்களில் சிலரைக் கொலையும் செய்வார்கள்.+
17 நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்.+
18 இருந்தாலும், உங்கள் தலைமுடியில் ஒன்றுகூட விழாது.+
19 சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்.+
20 ஆனால், எருசலேமைப் படைகள் சுற்றிவளைத்திருப்பதை+ நீங்கள் பார்க்கும்போது அதற்கு அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.+
21 அப்போது, யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்.+ எருசலேமுக்குள் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் எருசலேமுக்குள் நுழையாதிருக்க வேண்டும்.
22 ஏனென்றால், முன்பு எழுதப்பட்டவையெல்லாம் நிறைவேறும்படி, அவை தண்டனை வழங்கும்* நாட்களாக இருக்கும்.
23 அந்த நாட்களில், கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஐயோ ஆபத்து!+ ஏனென்றால், தேசத்தின் மேல் கடும் துன்பமும், மக்களின் மேல் கடும் கோபமும் வரும்.
24 அப்போது, அவர்கள் வாள் முனையில் வீழ்த்தப்படுவார்கள், சிறைபிடிக்கப்பட்டு மற்ற தேசங்களுக்குக் கொண்டுபோகப்படுவார்கள்.+ மற்ற தேசத்தாருக்கு* குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் மற்ற தேசத்தாரால்* மிதிக்கப்படும்.+
25 அதோடு, சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.+ கடல் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பூமியிலுள்ள தேசத்தாரெல்லாம் தத்தளிப்பார்கள்.
26 உலகத்துக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும். ஏனென்றால், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.
27 பின்பு, மனிதகுமாரன்+ வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் மேகத்தில் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.+
28 இவையெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது” என்று சொன்னார்.
29 அதன் பின்பு, அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்; “அத்தி மரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் கவனியுங்கள்.+
30 அவை துளிர்ப்பதை நீங்கள் பார்க்கும்போது கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள்.
31 அதேபோல், இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
32 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது.+
33 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது.+
34 பெருந்தீனியாலும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதாலும்+ வாழ்க்கைக் கவலைகளாலும்+ உங்கள் இதயம் பாரமடையாதபடி எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால், எதிர்பாராத வேளையில் அந்த நாள் திடீரென உங்கள்மேல் கண்ணியைப் போல் வரும்.+
35 பூமி முழுவதும் குடியிருக்கிற எல்லார்மேலும் அது வரும்.
36 அதனால், விழித்திருந்து+ எப்போதும் மன்றாடுங்கள்.+ அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்”+ என்றார்.
37 அவர் பகலிலே ஆலயத்தில் கற்பித்துவந்தார், ராத்திரியிலோ வெளியே போய் ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையில் தங்கிவந்தார்.
38 ஆலயத்தில் அவர் பேசுவதைக் கேட்பதற்காக மக்கள் எல்லாரும் விடியற்காலையிலேயே அவரிடம் கூடிவந்தார்கள்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “இரண்டு லெப்டன் காசுகளை.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “அவர்.”
^ வே.வா., “ராஜ்யத்துக்கு எதிராக ராஜ்யமும்.”
^ நே.மொ., “பரலோகத்திலிருந்து.”
^ வே.வா., “காட்டிக்கொடுப்பார்கள்.”
^ வே.வா., “பழிவாங்கும்.”
^ வே.வா., “யூதரல்லாதவர்களால்.”
^ வே.வா., “யூதரல்லாதவர்களுக்கு.”
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
ஆலயப் பகுதியின் கற்கள்
மேற்கு மதிலின் தென்பகுதியில் காணப்படும் இந்தக் கற்கள், முதல் நூற்றாண்டு ஆலயப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்களைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்ட கோர சம்பவத்தை நினைப்பூட்டுவதற்காக அவை இங்கே விடப்பட்டிருக்கின்றன.