லூக்கா எழுதியது 3:1-38
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
இயேசு ஊழியம் செய்த காலத்தில் தயாரிக்கப்பட்ட கலப்பு வெண்கலக் காசின் இரண்டு பக்கங்களையும்தான் இந்தப் போட்டோக்களில் பார்க்கிறோம். இந்தக் காசைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டது ஏரோது அந்திப்பா. இவர் கால்பங்கு தேசத்தை, அதாவது கலிலேயா மற்றும் பெரேயாவை, ஆட்சி செய்த மாகாண அதிபதியாக இருந்தார். இயேசு எருசலேமுக்குப் போகும் வழியில் ஏரோதுவின் ஆட்சிப்பகுதியாகிய பெரேயாவைக் கடந்துபோனதாகத் தெரிகிறது; அப்போதுதான், இயேசுவைக் கொலை செய்ய ஏரோது திட்டம் போட்டிருந்ததைப் பற்றி பரிசேயர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், ஏரோதுவை “அந்தக் குள்ளநரி” என்று இயேசு சொன்னார். (லூ 13:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஏரோதுவின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் யூதர்களாக இருந்தார்கள். அதனால், யூதர்களைக் கோபப்படுத்தாத சின்னங்களாகிய பனை ஓலை (1), கிரீடம் (2) போன்றவை அவர் தயாரித்த காசுகளில் பதிக்கப்பட்டிருந்தன.
திபேரியு கி.மு. 42-ல் பிறந்தான். கி.பி. 14-ல் அவன் ரோமப் பேரரசின் இரண்டாவது அரசனாக ஆனான். கி.பி. 37, மார்ச் மாதம்வரை அவன் வாழ்ந்தான். இயேசு ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவன்தான் அரசனாக இருந்தான். அதனால், ‘அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்’ என்று வரி கட்டுவது சம்பந்தமாக இயேசு சொன்னபோது திபேரியுதான் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான்.—மாற் 12:14-17; மத் 22:17-21; லூ 20:22-25.
பைபிளில் “வனாந்தரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் (எபிரெயுவில், மித்பார்; கிரேக்கில், ஈரெமாஸ்), பொதுவாக மனிதர்கள் அதிகம் குடியிருக்காத தரிசு நிலப்பகுதிகளைக் குறிக்கின்றன. புற்களும் புதர்களும் கொண்ட புல்வெளிகளையும், மேய்ச்சல் நிலங்களையும்கூட அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அந்த வார்த்தைகள், தண்ணீரே இல்லாத பாலைவனங்களைக்கூடக் குறிக்கலாம். சுவிசேஷப் புத்தகங்களில் சொல்லப்படும் வனாந்தரம், பொதுவாக யூதேயாவின் வனாந்தரத்தைக் குறிக்கிறது. இந்த வனாந்தரத்தில்தான் யோவான் வாழ்ந்தார், ஊழியமும் செய்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.—மாற் 1:12.
பைபிள் காலங்களில், செருப்புகள் தட்டையாக இருந்தன. தோல், மரம், அல்லது வேறு நார்ப்பொருள்களால் செய்யப்பட்டிருந்தன. காலோடு சேர்த்துக் கட்டிக்கொள்ள அவற்றுக்குத் தோல் வார்களும் இருந்தன. சில விதமான கொடுக்கல் வாங்கல்களிலும் சொல்லோவியங்களிலும் செருப்புகள் ஏதோ ஒன்றுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு, திருச்சட்டத்தின்படி ஒருவன் தன் சகோதரனின் மனைவி விதவையாகிவிட்ட பிறகு அவளைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தால், அவனுடைய செருப்பை அவள் கழற்றிப்போட வேண்டியிருந்தது; அதன் பிறகு, “செருப்பு கழற்றப்பட்டவன் குடும்பம்” என்ற கெட்ட பெயர் அவனுக்கு வந்தது. (உபா 25:9, 10) சொத்தை அல்லது மீட்டுக்கொள்ளும் உரிமையை இன்னொருவருக்குக் கொடுப்பதற்கு அடையாளமாகவும் ஒருவர் தன்னுடைய செருப்பைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்தார். (ரூ 4:7) இன்னொருவரின் செருப்பு வார்களை அவிழ்ப்பதோ இன்னொருவரின் செருப்புகளைச் சுமந்துகொண்டு போவதோ அடிமைகளால் செய்யப்பட்ட இழிவான வேலையாகக் கருதப்பட்டது. கிறிஸ்துவைவிட தான் தாழ்ந்தவர் என்பதைக் காட்ட யோவான் ஸ்நானகர் இந்த வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
இங்கே காட்டப்பட்டிருக்கிற போரடிக்கும் பலகைகளின் மாதிரிகள் இரண்டும் (1) தலைகீழாகத் திருப்பி வைக்கப்பட்டுள்ளன; பலகையின் அடிப்பக்கத்தில் பொருத்தப்படும் கூர்மையான கற்களைப் படத்தில் நீங்கள் பார்க்கலாம். (ஏசா 41:15) இரண்டாவது படத்தில் (2) காட்டப்பட்டுள்ளபடி, ஒரு விவசாயி களத்துமேட்டில் கதிர்க்கட்டுகளைப் பரப்பி வைத்து, போரடிக்கும் பலகைமேல் நின்றுகொண்டு, காளை போன்ற ஒரு விலங்கைக் கட்டி அதை இழுக்க வைப்பார். அந்த விலங்கின் குளம்புகளும், அந்தப் பலகையின் அடிப்பக்கத்திலுள்ள கூர்மையான கற்களும் கதிர்களைத் துண்டுதுண்டாக்கும். அப்போது தானியம் கதிர்களிலிருந்து பிரியும். பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய கவைக்கம்பை அல்லது தூற்றுவாரியை (3) பயன்படுத்தி, பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் அள்ளி வீசுவார். பதர் லேசாக இருப்பதால் அது காற்றில் அடித்துச்செல்லப்படும், ஆனால் தானிய மணிகள் தரையில் விழும். யெகோவாவின் எதிரிகள் எப்படி மிதித்து நொறுக்கப்படுவார்கள் என்பதை விவரிப்பதற்கு, களத்துமேட்டில் போரடிக்கும் உதாரணத்தை பைபிள் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. (எரே 51:33; மீ 4:12, 13) நல்லவர்கள் எப்படிக் கெட்டவர்களிலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்பதை விவரிப்பதற்கு, போரடிக்கும் உதாரணத்தை யோவான் ஸ்நானகர் பயன்படுத்தினார்.