லேவியராகமம் 1:1-17

1  சந்திப்புக் கூடாரத்தில்+ யெகோவா மோசேயைக் கூப்பிட்டு,  “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களில் ஒருவன் வீட்டு விலங்கு ஒன்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், மாடுகளிலோ ஆடுகளிலோ ஒன்றைச் செலுத்த வேண்டும்.+  மாடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த அவன் விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளை மாட்டைச் செலுத்த வேண்டும்.+ அதைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்து மனப்பூர்வமாகச்+ செலுத்த வேண்டும்.  தகன பலியாகச் செலுத்தப்படும் காளையின் தலையில் அவன் தன்னுடைய கையை வைக்க வேண்டும். அது அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.  பின்பு, அந்த இளம் காளையை யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய+ ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, சந்திப்புக் கூடாரத்தின் வாசலருகே உள்ள பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+  தகன பலியாகச் செலுத்தப்படும் காளையைத் தோலுரித்து, துண்டு துண்டாக வெட்ட வேண்டும்.+  குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் மேல் தணல் போட்டு+ அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.  பின்பு, அவற்றின் மேல் அந்தக் காளையின் தலையையும் கொழுப்பையும் மற்ற துண்டுகளையும் அடுக்கிவைக்க வேண்டும்.+  அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். குருவானவர் பலிபீடத்தின் மேல் எல்லாவற்றையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 10  ஒருவன் ஆடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த விரும்பினால்,+ எந்தக் குறையும் இல்லாத செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாவையோ செலுத்த வேண்டும்.+ 11  அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கம் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+ 12  அந்த ஆட்டைத் துண்டு துண்டாக்க வேண்டும். பின்பு, பலிபீடத்தின் தணல்மீது வைக்கப்பட்டுள்ள விறகுகள்மேல் அவற்றையும் ஆட்டின் தலையையும் கொழுப்பையும் குருவானவர் அடுக்கிவைக்க வேண்டும். 13  அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்பு, எல்லாவற்றையும் பலிபீடத்தின் மேல் அந்தக் குருவானவர் எரிக்க வேண்டும். இதுதான் தகன பலி. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 14  ஒருவன் பறவைகளில் ஒன்றை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காட்டுப் புறாவையோ, புறாக் குஞ்சையோ செலுத்த வேண்டும்.+ 15  குருவானவர் அதைப் பலிபீடத்தில் கொண்டுவந்து அதன் கழுத்தைக் கிள்ளி, பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். ஆனால், அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கவாட்டில் ஊற்ற வேண்டும். 16  அதன் தொண்டைப்பையையும் இறகுகளையும் நீக்கி, பலிபீடத்துக்குப் பக்கத்தில், கிழக்கே, சாம்பல் கொட்டும் இடத்தில் எறிந்துவிட வேண்டும்.+ 17  அதை இரண்டு துண்டாக்காமல் சிறகுகளுக்குப் பக்கத்தில் கிழித்துவிட வேண்டும். பின்பு, குருவானவர் பலிபீடத்தின் தணல்மீது வைக்கப்பட்டுள்ள விறகுகள்மேல் அதை எரிக்க வேண்டும். அதுதான் தகன பலி. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா